“அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி நினைவில் வரும்”தேனிசை செல்லப்பா.. காலத்தின் குரல்

0
25.page.thenissai.selappa

ஜூட் – மெல்பேர்ண்

நாங்கள் எங்கள் ஊரை விட்டு, பிறந்த மண்ணை விட்டு, நேசித்த தேசத்தை விட்டு இடம்பெயர்ந்த போதும் புலம்பெயர்ந்த போதும், எடுத்துச் செல்லக்கூடிய எங்கள் உடைமைகளை பெட்டிகளிலும் மூட்டைகளிலும் சுமந்து வந்தோம். எங்கள் நாட்டிற்கு நாங்கள் விடை கொடுத்த போது, நாங்கள் மறந்தும் மறவாமல், மறக்கவும் விரும்பாத எங்கள் மகத்தான மண்ணின் நினைவுகளை நாங்கள் சுமந்து வந்ததும், இன்றும் காவிக்கொண்டு திரிவதும், தேனிசை செல்லப்பாவும் சாந்தனும் மற்றவர்களும் பாடிய தாயகப் பாடல்களில்தான்.

“அழகான அந்தப் பனைமரம் அடிக்கடி நினைவில் வரும்” என்று செல்லப்பா கம்பீரமாக பாடும்போது, அது எங்களுக்கு வெறும் பாட்டு மட்டுமல்ல. மண்ணை விட்டுப் பிரிந்தவனுக்கு அது எங்கள் தாயகத்தின் நினைவுகளை எக்காலத்திற்கும் காவிவரும் அக்காலத்தின் பொக்கிஷம். உண்மையிலேயே அந்தப்பாட்டு என்றைக்கும் எங்கள் தாய்மண் எங்களுள் “இசைக்கின்ற பண்” தான்.

பொப் இசைச் சக்கரவர்த்தி யுநு மனோகரன் பாடிய இலங்கை என்பது எமது தாய் திருநாடு பாட்டை பாடவோ கேட்கவோ விரும்பாவர்களிற்காகவே பாடப்பட்டது தான் செல்லப்பரின் ““தமிழீழத்தின் அழகு தனி அழகு” பாடல்.

தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு பிரதேசத்தின் தனித்துவமான அழகை எல்லாம் ஒரே பாட்டில் வடித்து வைத்து “எங்கள் தாயகத்தின் பெருமை அறியும் உலகு” என்று பறைசாற்றும் தேனிசை செல்லப்பாவின் பாடல் அதுவல்லவா?
அதே போன்ற மண்ணின் அழகை காலத்திற்கும் மறக்க வைக்காதிருக்கும் பாடலான “பச்சை வயலே பனங்கடல் வெளியே” என்ற பாட்டை தேனிசை செல்லப்பா பாடும்போது, அவர் எங்கள் மக்களுக்கு தங்கள் மண்ணின் அழகை நினைவுறுத்திக் கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாது அந்த மண்ணை என்றோ ஒரு நாள் நாங்கள் ஆள வேண்டும் என்ற அடங்காத ஆசையை உயிர்ப்போடு வைத்திருக்கவும் செய்துவிட்டு தான் மறைந்திருக்கிறார். மேடைகளில் மூச்சுக்கு மூன்றுதரம் தமிழ்தேசியம் முழங்கும் எந்த அரசியல்வாதியாலும் செய்ய முடியாத வேலையை, செய்யவல்ல வலுவும் சக்தியும் தேனிசை செல்லப்பாவின் பாடலுக்கு இருக்கிறது.

1990 இல் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடந்த தேனிசை செல்லப்பாவின் கச்சேரியை அன்றைய காலத்தில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர், மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கிய காலகட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முற்றவெளியில் கூடினார்கள். தேனிசை செல்லப்பாவின் குரல் முற்றவெளியியையும் தாண்டி எங்கள் மண்ணின் காற்றில் கலந்தது. நாங்கள் எங்கள் வலிகளையும் எங்கள் நம்பிக்கையையும் ஒரே நேரத்தில் உணர்ந்த தருணமாக அந்த இசை நிகழ்வு வரலாற்றில் பதிவானது.

“தங்க மாலைக் கழுத்துகளே கொஞ்சம் நில்லுங்கள், நஞ்சு மாலைக் கழுத்துக்களை நினைவில் கொள்ளுங்கள்…”

1998 இல் மெல்பேர்ணில் நடந்த தேனிசை செல்லப்பாவின் இசை நிகழ்ச்சியும் இன்றும் நினைவில் நிழலாடுகிறது. தேனிசை செல்லப்பா “தங்க மாலைக் கழுத்துகளே கொஞ்சம் நில்லுங்கள், நஞ்சு மாலைக் கழுத்துக்களை நினைவில் கொள்ளுங்கள்…” என்ற பாட்டை பாடத் தொடங்க, காலஞ்சென்ற ராணி தங்கராஜா அன்ரி தனது கதிரையில் இருந்து எழுந்து, மேடையை நோக்கி நடந்து, தனது கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை கழற்றி செல்லப்பாவின் முன்னால் வைத்து விட்டு மேடையில் இருந்து இறங்கினார். ராணி அன்ரியைத் தொடர்ந்து மண்டபத்தில் குழுமியிருந்த மக்களும் தங்களது நகைகளையும் பணத்தையும் போராட்டத்திற்கு பங்களித்தார்கள்.
தேசிய தலைவரால் வாழும் போதே மாமனிதர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட பேராசிரியர் எலியேசர் தேனிசை செல்லப்பாவை தனது மெல்பேர்ண் இல்லத்திற்கு அழைத்து கௌரவித்ததையும் அந்தக் கால செயற்பாட்டாளர் ஒருவர் நெகிழ்வுடன் நினைவூட்டினார்.

“எங்கள் தோழர்களின் புதைகுழியில் மண் போட்டுச் செல்கிறோம்” என்ற தேனிசை செல்லப்பாவின் பாடலில் சுமந்து வருவது எங்களது போரட்டத்திற்கு நாங்கள் கொடுத்த விலைமதிக்க முடியாத எங்கள் சகோதர சகோதரிகளின் உயிர்களின் கனதியையும் நீங்காத அவர்களின் நினைவுகளையும் தான்.

“நம்புங்கள் தமிழீழம் நாளை மலரும்” என்று இன்றும் ஒலிக்கும் தேனிசை செல்லப்பாவின் குரல் காவி வருவது, காவிச் செல்வது நாங்கள் அன்று கண்ட கனவு என்றோ ஒரு நாள் நிட்சயமாக நனவாகும் என்ற நம்பிக்கையை; அந்த நம்பிக்கை மட்டுமே, இன்னும் உயிர் வாழும் எங்கள் இதயங்களில் அணையாத விளக்காய் எரிந்துகொண்டிருக்கிறது.

காலங்கள் மாறினாலும், போர் மௌனிக்கப்பட்டாலும், தாயகப் பாடல்கள் மட்டும் இன்னும் ஏனோ ஓயவில்லை. இன்றும் புலத்திலும் தாயகத்திலும் ஒன்றுகூடல்களில், இளையராஜா பாடல்களுக்கு இடையே, செல்லப்பாவின் தாயகப் பாடல்களும் கலைந்தே வருகின்றன.

தேனிசை செல்லப்பா மற்றவர்களைப் போல ஒரு வெறும் பாடகர் மட்டுமல்ல் செல்லப்பா எங்கள் தாயக மண்ணின் தூதர்; ஒரு யுகத்தின் சாட்சி. செல்லப்பா அந்த மண்ணில் நின்று பாடினார், அந்த மண்ணை விட்டு பிரிந்தவர்களுக்கும் பாடினார், அந்த மண்ணுக்காக உயிரை கொடுத்தவர்களை நினைவுகூர்ந்தும் பாடினார். தேனிசை செல்லப்பாவின் குரல் எமது போராட்டத்திலும் வாழ்க்கையிலும் செலுத்திய, செலுத்தும் தாக்கம் காலத்தால் அளவிட முடியாதது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *