மார்கழி நீராடல்

1
101

மரங்களின் பனிக்காலத் தவம் தொடங்கிவிட்டது, இலைகள் உதிர்த்து ஐம்புலன்களை அடக்கி ஒற்றைக்காலில் நின்று தவஞ்செய்யும் முனிவர்கள் போல ஆம்ஸ்டர்டாம் மரங்கள் காட்சியளிக்கின்றன. பகல்பொழுது சுருங்கி இரவுகள் நீளும் ஐரோப்பிய மார்கழியில் ஓர் மாலைப்பொழுது, டென்சியும் கயல்விழியும் காதைப் பொத்தியவாறு தலையில் தொப்பிகள் அணிந்து ஆம்ஸ்டர்டாம் கால்வாய்களின் ஓரத்தே வழக்கம் போல தத்தம் கதைகளை கதைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தனர்.

ஐரோப்பியாவிற்கு முதலில் வருபவர்கள் ஆச்சர்யத்துடன் பார்க்க விரும்புவது வெண்பனி, முல்லைப்பூக்கள் மழையாக சொரிவது போல பனிப்பூக்கள் பரவி விரவி கிடக்கும் காட்சியை காண்பதே அலாதியானது தான். அவ்வகையில் பனிப்பொழிவு என்று வரும் என்று ஆர்வத்துடன் டென்சியை கேட்டாள் கயல்விழி.

சற்று நாள் பொறு கயல்விழி, பனி என்ன இதோ இந்த ஓடும் கால்வாய்கள் கூட அப்படியே உறைந்து போகும் காட்சியை பார்ப்பாய் என்றாள் டென்சி. என்ன? ஓடும் நீர் உறைந்து போகும் அளவுக்கு குளிருமா? நல்ல வேலை தமிழகத்திலோ இலங்கையிலோ இந்த காலநிலை இல்லை, இருந்திருந்தால் எப்படி நம் சங்க கால மகளிர் தை நீராடியிருப்பர் என்றாள் கயல்விழி. தை நீராடலா ? சங்க காலமா ? என்ன செய்தி என்று டென்சி ஆர்வமாய் வினவ, கயல்விழி சொல்லத்தொடங்குகிறாள்.

இயற்கையோடு இயைந்த வாழ்வு தமிழருடையது, இற்றைக்கு சுமார் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே நம் முன்னோர் கடைபிடித்த வழக்கங்கள் சில இன்றும் நம் கண்முன்னே விரிந்து நிற்கின்றன. அதில் ஒன்று தான் தைநீராடல்.
காவிரியில் ஆடி மாதம் புதுப்புனல் பெருகி வரும்போது புனலாடி மகிழ்ந்தனர் தமிழர்கள். அது போலவே கார்காலம் கழிந்து வரும் முன்பனிக் காலமாம் மார்கழிஃதை மாதங்களில் தை நீராடல் எனும் வழக்கத்தை தமிழ் மகளிர் கொண்டிருந்தனர்.
இதுவே பின்னாளில் பக்தி இயக்க காலத்தில் பாவை நோன்பாய் அரும்பி தீந்தமிழ் பாக்களை தமிழ் கூறும் நல்லுலகம் பெற காரணமாய் அமைந்தது. (மார்கழி )

பருவம் எய்திய பெண்கள் துள்ளித் திரியும் காலம் அது, இயற்கையோடு இயைந்து தம் தோழிகளுடன் முன்பனிக் காலமாம் மார்கழியில் புனலாட செல்வதையும், தமக்கு நல்ல துணையும், நாடும் வீடும் நலம் பெறவும் தெய்வத்தை நோக்கி நோற்கும் நோன்பாக இலக்கியங்கள் இந்த நீராடலை வருணிக்கின்றன.
இந்த பாடல்களில் இயற்கை வருணனை அதிகம், நீர்நிலைகளின் அமைப்பும் சிறப்பும் ஏத்தப்பெறுகின்றது. புனலாடும் மகளிர் சுயநலம் பாராட்டாது நாட்டிற்கும் வீட்டிற்கும் நன்மையை வேண்டுகின்றனர்.
பண்டைய காலத்தில் முழுநிலவு நாள் தொடக்கமாக இவ்விழா கொண்டாப்பட்டது. மார்கழி ஆதிரைஃமுழுநிலா முதல் தை பூசம்ஃமுழுநிலா வரை.

சரி மேலும் கேள் சங்ககால கவிதை ஒன்று என்று கயல்விழி மேலும் தொடர்ந்தாள்.
மகளிர் தம் தாயுடன் வையையில் தை நீராடல் ஆடும் காட்சி – பரிபாடல் வரிகள்
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவரவர்
தீ எரிப்பாலும் செறி தவம் முன் பற்றியோ
தாய் அருகா நின்று தவத் தைந்நீராடுதல்
நீ உரைத்தி வையை நதி! (பரிபாடல்ஃவையைஃநல்லந்துவனார்)
மையோலை பிடித்த புலவர் (காதல்)விளையாட்டுக்கு மாறுபட்டு எழுந்து
காமத்தின் சுவடு இல்லாமல் விளையாடுகின்ற பாவையர் கூட்டம்
அவரவர் தாயோடு நின்று தைந்நீராடுகின்ற பெரும் பேறு எப்படிப் பெற்றனர்?
தீ வளர்த்து வேள்வி செய்ததாலா? புலன்களை அடக்கித் தவம் செய்ததாலா?
நீயே கூறுவாய் வையை நதியே!

என்னவோ கயல்விழி இப்படி சங்ககால கவிதையெல்லாம் எப்படி தான் மடமடவென சொல்லி விளக்கமும் தருகிறாயோ என்று வியந்த டென்சி, நீராடல் எல்லாம் இருக்கட்டும் நீயும் அப்படி நீராடல் எண்டு சொல்லிக்கொண்டு கால்வாயில் இறங்கிவிடாதே, எலும்பை உருக்கும் பனிக்கட்டிகள் நிறைந்த கால்வாய்கள் இவை சங்ககால நீராடல் துறை அல்ல என்று ஹாஸ்யமாய் முடித்தாள் டென்சி.

–தனசேகரன் பிரபாகரன்

Loading

1 thought on “மார்கழி நீராடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *