எவ்வளவு நேரம் வணங்குகிறோம் என்பதா முக்கியம் இல்லவே இல்லை என அடித்துக்கூறிய சீரடி!
கடந்த 08.10.2019 வியதசமி தினத்தில் இந்தியாவில் மகாராஷ்ரா மாநிலத்தில் சீரடி நகரம் பெரும் விழாக்கோலம் பூண்டது.
அன்று சீரடி பாபா அவர்கள் சமாதி எய்தியதினம். எந்தவித முன்திட்டமோ அல்லது அன்று சமாதியடைந்த தினம் புனிதமான நாள் என்றுகருதியோ அன்று அங்கு செல்லவில்லை. ஆனால் யாவும் இயல்பாகவே நடந்தது.
07.10.2019 திங்கள் காலை டெல்லியில் இருந்து சீரடி விமானநிலையத்தில் வந்து இறங்கினோம். தாயகத்தில் பலாலி விமானநிலையத்தைவிட பாதியும் இல்லை. ஆனால் பலாலி விமானநிலையத்தை ஞாபகப்படுத்தும் வண்ணம் மண்வாசமும் சூழலும் அமைந்திருந்தது.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம் என்ற முதுமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் பொருள் எதோ ஒருவிதத்தில் பொருந்தத்தான் செய்கிறது.
இங்கு மக்களின் வருவாய் இந்தக்கோவிலைச் சுற்றியே அமைந்துள்ளது. ஒரு கோவிலுக்காக ஒரு விமான நிலையத்தையே உருவாகியுள்ள ஒரு கிராமம் அது என்றால் மிகையாகாது.
விமான நிலைய வாசலில் ரைக்சி வியாபாரம் ஆரம்பித்து கோவில் எல்லை வரை தொடர்கிறது.
கோவிலை அடைந்ததும் சீரடியின் புனிதம் மலர்கிறது. செருப்புக்கள் பாதுகாப்பாக வைக்க சில இடங்கள் உண்டு 15;,முதல் 20 ஆயிரம் என மக்கள் கூடும் இடத்தில் இது சாத்தியமா எனக்கேட்டால் சாத்தியம் என்றே கூறலாம். கோவிலுக்கு வரும் மக்கள் அனைவரும் செருப்பு பாதுகாக்கப்படும் இடத்தில் வைப்பது குறைவு, அப்படி வைத்தாலும் அங்கு நிற்பவர்கள் நீங்கள் சிறுதொகை கொடுத்தாலும் சிரித்த முகத்துடன் வாங்குவார்கள். கோவிலுக்குள் வியாபாரம் இல்லை. மீதி மக்கள் செருப்புக்களை கரையோரமாக வைத்துவிட்டுபோகிறார்கள் பின்பு வந்து மாட்டுகிறார்கள் ஆனால் எவரது செருப்பும் தொலைந்ததாகத் தெரியவில்லை. இது ஒரு அதிசயம்தான்.
இன்னுமொன்று எவரும் கைத்தொலைபேசி எடுத்துச்செல்லமுடியாது,கமரா மற்றும் விடியோ எடுக்கமுடியாது. இச்செயல் எமக்கு தாயகத்தில் அன்று பார்த்த மக்களை கண்முன் நிறத்தியது. வணங்கும் போதும் இருகைகளுக்குள் பாம்பு படம் (Foto) எடுப்பதுபோல் எந்தக்காட்சியும் அங்கு இல்லை. இதனை புலம்பெயர்து வாழும் நாமும் ஆலயங்களில் கடைப்பிடிக்கவேண்டும்.கைத்தொலைபேசி அவசியம் ஆனால் படம் எடுப்பது அவசியம் அல்ல.
சாதாரணமாக மக்கள் வரிசையாக நின்று போவது என்றாலும் காரியாலயத்தில் பாஸ் எடுக்கவேண்டும்.அதனை எடுத்துக்கொண்டு வரிசையில் நின்று பாபாவிற்கு ஆராதனை நடைபெறும் இடம்செல்வேண்டும்.
அதற்கான ஒழுங்கு பிரமாதமாக அமைந்திருக்கிறது. அதிகாலை 3.00க்கு சென்று பாஸ் எடுத்து வரிசையில் நின்றால் ஒவ்வொரு கட்டம் கட்டமா மக்கள் நகருவார்கள். முன்னே பாஸ் ஸ்கன் செய்ப்பட்டு பாதுகாப்புக்கருதி விமான நிலையத்தைப்போன்று சோதனையும் இட்டு உள்ளே விடுவார்கள். இதன் மூலம் அடியவர்களது எண்ணிக்கையும் தெரியவரும். அதற்கேற்ப உள்ளே அனுமதிப்பார்கள்.
என் வாழ்வில் அதிக நேரம் (கிட்டத்தட்ட4 மணிநேரம்) வரிசையில் நின்றது அன்றுதான். ராஜா தியட்டரில் அன்று சிவாஜி நடித்த தங்கை படத்திற்கும்,ராணி தியேட்டரில் அடிமைப்பெண்ணிற்கும் வரிசையில் நின்றதை இங்கு சேர்க்கவில்லை.
வரிசையாக நின்று உள்செல்ல அதிக நேரம் செல்வதால் மக்களுக்கு வசதியாக இடை இடையே இருப்பதற்கு வாங்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட ஒதுக்குப்புறமும் சிறுநீர் கழிப்பதற்கு இடமும் யதார்த்தமாக அமைத்தும் உள்ளார்கள்.
மக்களை ஒழுங்கு படுத்த கடமையில் ஈடுபட்டு இருக்கும் பொலிசாரும் ஆலயத்தொண்டர்களும் அன்பாக மக்களை விரைவுபடுத்தியவண்ணம் இருந்தனர். பாபாவின் இடத்தை அடைந்ததும் நான்கு மணிநேரம் காத்திருந்து 30 விநாடிக்குள் வணங்கி திருப்தியுடன் சென்ற மக்களின் பண்பு மனதைத்தொட்டது.
அதிக நேரம் வணங்குவதும் நீட்டோலையா வேண்டதல்களை கேட்பதும் அங்கு இடம்பெற்றதாக அத்தினத்தில் காணமுடியவில்லை. ஒரு விநாடிக்குள் இந்த உலகை வந்தடைந்த எமக்கு வேண்டுதல்களுக்கு மட்டும் ஏன் இந்தளவு நேரம் என்று கருதி மக்களை விரைவுடுத்தியிருக்கலாம். தரிசனம் என்பது மணிக்கணக்கில் அல்ல அது மனக்கணக்கோடுகூடியது.
சீரடி கிராமம் செவ்வந்திப்பூக்களின் தோட்டம். அதனை வாகனங்கள் முதல் கடை வாசல் வரை காணலாம். கோவில் சூழல் மிகவும் சுத்தமாகப் பேணப்படுகின்றது. ஒவ்வொருவரும் அதில் மிகுந்த கவனம் எடுக்கின்றனர். வழிபாடு என்பது இருகைகள் கூப்பி வணங்குவதுமட்டுமல்ல அந்த இருகைகள் வழிபாட்டின் பின் என் செய்கின்றன என்பதிலும் வழிபாடு தொடர்கிறது.
ஆலய நிர்வாகம் மக்கள் விரைவாகச் சென்று தரிசனம்பெற பிரத்தியேகப்பாஸ் 200 இந்தியன் ரூபாய்க்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக விரைவாகச்செல்லும் பாஸ்க்களை வழங்குகிறது. இது காலை 6.00 மணிக்குபின்னே நடைமுறையில் உள்ளது.
விசேட தினங்களில் அதிகாலை 4.30 பூசைகளுக்கு கிடையாது. விரும்பினால் சாதரண வரிசையில் நிற்கவேண்டும்.
சீரடி பாபா கோவிலைத் தவிர அதனைச்சுற்றி அமைந்துள்ள இடங்கள் எல்லாம் பாபாபெயரில் நடைபெறும் வர்த்தகமாகவே தெரிகிறது.
சில நல்லவற்றை பார்க்கும்போது நாமும் ஏன் இப்படி ஒன்று செய்முடியாது என்று தோன்றுவது இயல்பு. ஈழத்தமிழர்கள் சைவமாகட்டும் தமிழாகட்டும் அதற்கு கொடுக்கும் கௌரவம் தனித்துவமானது.
நம்மவர்கள் மத்தியிலும் பல பெரியவர்கள் ஞானிகள் வாழ்ந்து சென்று உள்ளனர். யோகசுவாமிகள் அவர் எத்துணை ஞானம் பெற்றவர். இவர்களை நாம் மறக்கமுடியாது.
காசிக்குபோய் காசி நாதரைக்கண்டேன் என் நெஞ்சுக்குள் என்றார்.
எதனையும் பகுத்து அறிந்து செய்பவர்கள் வாழ்ந்த மண். எம் தாய் மண். இன்று முகப்புத்தகம் வட்சப் என தொழில் நுட்பம் எமது மண்ணின் பண்பாடுகளின் ஆணிவேரை உலுப்புகின்றது.
சீரடி ஒரு படிப்பினைத் தந்தது.
பாபாவின் கோவில் சூழல் அழகு
கட்டுப்பாடுகளை கனிவுடன் நடைமுறைப்படுத்தும் பண்பு.
எனக்குத்தான் தெரியும் என்று இல்லாமல்
தெரிந்தiதை மட்டும் சொல்லும் மக்கள்.(கோவிலுக்குள்)
மனதை மட்டுமல்ல உலகையும் மாசுபடுதும் பொருட்கள் தெருவில் வீசக்கூடாது. (பொலித்தீன் பாக்) முதலாவது தடவை மீறினால் 5.000 இணர்டாவது தடவை மீறினால் 10,000 மூன்றாம் தடவை மீறினால் 25,000. அது மட்டுமல்ல 3 மாத சிறை.
பி.குறிப்பு
மாலை 6 மணிக்கும் 9.00 மணிக்கும் இடையில் பாபா தெருவலம் வருவார் என அங்கு கூறப்பட்டது. 4 மணிநேரம் நின்று உள்ளே மிக அருகில் சென்று ஆராதனைகளைப் பாரத்தோம். அது போதும் என்ற திருப்தியுடன் தங்கியருந்த Hotelக்கு திரும்பிக்கொண்டு இருந்தேன் அப்போது Hotelக்கு சற்று தொலைவில் ஆரம்பமாகிய ஊர்வலம் தற்போது Hotelக்கு வாசலை நெருங்கியது. பாபா தரிசனம் போதும் என்று திரும்பினாலும் பாபா என்னைத்தேடி வருகிறார் பார்த்தீர்களா? என இதனை அற்புதமாக்க என் மனம் உடன் படவில்லை. கடவுள் எமக்கு அளித்த வாழ்வே அற்புதமானது அல்லவா! ஒவ்வொரு கணமும் சிறப்பானது, அற்புதமானதே!
-மாதவி
![]()
