தெளிவும் தெரிவும்

0
247

மன்னிப்பு

மனிதர்களின் குணங்களில் மன்னித்து விடுவது என்பது மிகச்சிறந்த ஒன்று
மன்னித்து விடுபவர்களின் வாழ்க்கை மிக அழகாக இருக்கும்

மன்னிப்பவர்கள் எப்போதும் தவறு செய்பவர்களின்
சூழ்நிலையிலிருந்து யோசிப்பார்கள்

தவறுகளில் இருந்து மீண்டு வந்து இன்று சரியான வாழ்க்கை வாழ்கிற பலர்
சிலரால் மன்னிக்கப்பட்டவர்கள்

மன்னிப்பின் மகத்துவத்தை உணர்ந்தவர்கள் தவறு செய்ய பயப்படுவார்கள்
தவறை திரும்ப செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் மன்னிப்பை வழங்குகிறார்கள்

திரும்பத் திரும்ப அதே தவறை செய்பவர்கள் திருந்த மாட்டார்கள்
ஏனென்றால் அவர்களுக்கு திரும்பத்திரும்ப வழங்கப்பட்ட மன்னிப்பு பழகி விட்டது

மன்னிப்புக்கு ஒரு அளவு உண்டு
ஒரே தவறுக்கு திரும்பத் திரும்ப மன்னித்துக் கொண்டிருந்தால்

திரும்பத் திரும்ப அதே தவறை செய்வதற்கு மன்னிப்பதே தூண்டிவிடும்

2 பொய்களுக்கு ஆயுள் மிகக் குறைவு

சந்தர்ப்பத்துக்கு பொய் சொல்பவர்கள் அதைக் காப்பாற்ற மறந்து விடுவார்கள்
தப்பிக் கொள்வதற்காக உண்மையை மறைப்பவர்கள்

அதைப் பாதுகாக்கத் தவறி விடுவார்கள்
தன் மீது பிழை இல்லை என்று காட்டிக் கொள்வார்கள்

பொய்யை உண்மை மாதிரி சொல்வார்கள்
என் மீது சந்தேகப்படுகிறியா என்று கேட்பவர்கள்

பொய்யை உண்மை என்று நம்ப வைத்து விடுவார்கள்
பொய்களுக்கு ஆயுள் மிகக் குறைவு

எல்லா பொய்களும் ஒரு நாள் அகப்படும்
அப்போது உங்களை நேசித்த நம்பிய விசுவாசித்த உறவுகளுக்குள்

விரிசல் ஏற்படும் விவாதம் நடக்கும் பிரிவில் முடியும்
இதற்கு நீங்கள் உண்மையாகவே இருந்திருக்கலாம்

ஏனென்றால்
இதுவரை காலமும் நீங்கள் சொன்ன எல்லா உண்மைகளையும் கூட
பொய்கள் தான் என்று சந்தேகிக்க தோன்றும்

3.நல்லவன் கெட்டவன்
தங்களை நல்லவர்களாக காட்டிக் கொள்ளும் யாரும் நல்லவர்கள் அல்ல
நல்லவர்கள் யாரும் தங்களை நல்லவர்கள் என்று நிரூபிக்க முயற்சிக்க மாட்டார்கள்

புகழ் விரும்பிகள் நல்லது செய்வதை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக
அதற்கான நேரத்திற்காக காத்திருப்பார்கள்

எவன் உள்ளத்தில் இருந்து நல்லது செய்கிறானோ
அவனுக்கு எதைப் பற்றி யோசிக்கவும் நேரம் இருக்காது

நல்லது செய்தாலும் அதை விமர்சிப்பதற்கு ஆயிரம் வாய்கள் திறக்கும்
ஆனால் நல்லது செய்பவன் காதை மூடி வைத்திருப்பான்

மரணத்தின் பின்பு தான் பலரை நல்லவர் என்று சொல்வார்கள்
சில உண்மையான நல்லவர்களை உயிரோடு இருக்கும்போதே காலம் காட்டி கொடுக்கும்

நல்லவர் என்பதற்கு நிறைய வரைவிலக்கணங்கள் இருக்கலாம்
ஆனால் தவறுகளை உணர்ந்து திருந்துபவர் மிக நல்லவர்.

— நெடுந்தீவு முகிலன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *