ஆனந்தராணி பாலேந்திரா

0
312

தமிழ் மேடை நாடகத் துறையில் 45 வருடங்களாக இடைவிடாது தொடர்ந்து இயங்கி வரும் ஈழத்துப் பெண் கலைஞர் இவர். ஒரு மேடை நாடக நடிகையாக மட்டுமல்லாது சினிமா, வானொலி நடிகையாக, பரதநாட்டிய ஆசிரியையாக, தொலைக்காட்சி, வானொலி, மேடை அறிவிப்பாளராக பல்வேறு துறைகளில்; தடம் பதித்தவர்.
1975ல் மொறட்டுவ (கட்டுபெத்த) பல்கலைக்கழக தமிழ்ச் சங்கத் தயாரிப்பான ‘பிச்சை வேண்டாம்’ நாடக மூலம் பாலேந்திராவுடன் இணைந்து மேடை நாடகத்துறைக்கு அறிமுகமானார். அப்போது அவருக்கு வயது 19. 1976ஆம் ஆண்டு க. பாலேந்திரா நெறிப்படுத்திய ‘மழை” நாடகத்தில் இருந்து இன்றுவரை அவரின் நெறியாள்கையில் சுமார் 40க்கும் மேற்பட்ட நாடகங்களில் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார். இவற்றுள் பல நாடகங்கள் பெண்களை மையமாகக் கொண்ட நாடகங்களாகும். நடிப்பதற்கு மிகவும் சிக்கலான சவாலான நாடகங்கள் இவை. தனது நடிப்பாற்றலால் இப்பாத்திரங்களுக்கு உயிர் ஊட்டி பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

லண்டனில் கடந்த 17 வருடங்களாக தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் சிறுவர்களுக்கான தமிழ் நாடகப் பள்ளியை கணவர் பாலேந்திராவுடன் இணைந்து நடத்தி வருகிறார். 1975ஆம் ஆண்டு க.பாலேந்திராவுடன் ஒன்றாக நாடகம் நடிக்க ஆரம்பித்து 1982இல் அவரது வாழ்க்கைத் துணைவியாக இணைந்து இன்று வரை நாடகப் பணியைத் தொடர்கிறார். இலங்கை தேசிய தொலைக்காட்சியான ‘ரூபவாகினி’யில் ஒளிபரப்பான முதலாவது தமிழ் நாடகமான, க.பாலேந்திரா நெறிப்படுத்தி, பி.விக்னேஸ்வரன் தயாரித்த ‘கண்ணாடி வார்ப்புகள்’ (1982) நாடகத்தில் நடித்தவர்.
Srilankan Airlines விமானங்களில் முதன் முதலாக பல வருடங்கள் ஒலித்த தமிழ் அறிவிப்புக் குரலுக்கு சொந்தக்காரி இவர்.
இலங்கையில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் (Jaffna College) ஆசிரியராகப் பணியாற்றியவர், லண்டனில் 32 வருடங்களாக அரசாங்க உத்தியோகத்தராக பணி புரிந்துள்ளார்.
ஆனந்தராணியின் கலைச்சேவைக்காக ஈழவர் திரைக்கலை மன்றத்தினரால் “கலாவிநோதர்” என்ற பட்டமும் சிவயோகம் அறக்கட்டளையினரால் “கலையரசி” என்ற பட்டமும் மற்றும் பிரென்ற் தமிழ்ச் சங்க விருதும், தமிழினியின் 2004க்கான விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *