‘கோடை’ நாடகம் – 1979

0
474

எனது நாடக அனுபவப் பகிர்வு – 13

ஆனந்தராணி பாலேந்திரா

கடந்த இதழில் யாழ். நாடக அரங்கக் கல்லூரி 1979இல் தனது முதலாவது நாடகமாக ஈழத்து மஹாகவி உருத்திரமூர்த்தி அவர்கள் 1966ஆம் ஆண்டு எழுதிய ‘கோடை’ நாடகத்தைத் தயாரிக்க ஆரம்பித்தது பற்றியும் அதில் நான் தாய் செல்லம் பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பற்றியும் எழுதியிருந்தேன்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏழ்மையில் வாடும் நாதஸ்வரக்காரர் மாணிக்கம். இந்தக் கலைகளில் பெரிதும் ஆர்வமில்லாது, கலைஞர் குடும்பத்திலிருந்து சம்பந்தம் வந்தும், மகளை ஒரு அரசாங்க உத்தியோகத்தருக்குத்தான் திருமணம் செய்து வைப்பது என்ற பெருங்கனவு காணும் மனைவி செல்லம். திருமண வயதில் மகள் கமலி. பள்ளி செல்லும் மகன் கணேசு. இவர்களது வீட்டில் தங்கியிருந்து நாதஸ்வரத்தைக் கற்கும் சிஷ்யப்பிள்ளை சோமு. இவர்களுடன் பஞ்சையர், விதானையார், முருகப்பு, காசி, சாமியார் என இந்தக் குடும்பத்துடன் தொடர்புபட்டவர்கள். இவர்கள் வாழ்க்கையோடு விளையாடும் அதிகார வர்க்கம் என நாடகம் நகர்கிறது.
‘கோடை’ நாடகம் முதல்முதலாக தாசீசியஸ் அவர்களின் நெறியாள்கையில் 1969இல் கொழும்பிலே மேடையேறியது. இந்த நாடகத்தில் தாய் செல்லமாக ஈஸ்வரநிதி ராஜரத்தினம், மகள் கமலியாக சித்திரா ராம்ஈஸ்வரா ஆகியோர் நடித்திருந்தார்கள். இரண்டாவது மேடையேற்றம் 1970ல் மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் முதன்முதலாக யாழ். நாடக அரங்கக் கல்லூரிக்காக 1979இல் தயாரிக்கப்பட்டது. இதில்தான் நான் நடித்தேன்.
தாய் செல்லம் பாத்திரம் ஒரு எதிர்மறையான பாத்திரம். (Negative Role) பொதுவாக எதிர்மறையான பாத்திரத்தில் நடிப்பதற்குப் பலர் விரும்புவதில்லை. நான் அந்தப் பாத்திரத்தில் நடிக்கச் சம்மதித்த பின்னர் மகள் கமலி பாத்திரத்தில் நடிப்பதற்காக அப்போது யாழ்ப்பாணத்தில் நடனக் கலைஞராக இருந்த ரேலங்கி செல்லையா ( செல்வராஜா) வைக் கேட்பதற்காக சண்முகலிங்கம் மாஸ்டர் என்னையும் அழைத்துக்;கொண்டு போனார். அப்போது அவர் ஒரு கார் வைத்திருந்தார். ரேலங்கியுடன் அவருடைய அப்பா ஓவியர் கே.கே.வி.செல்லையா அவர்களும் வந்திருந்து ‘கோடை’ நாடகக் கதையைக் கேட்டார். மகளை நடிக்கவிடத் தனக்குச் சம்மதம் என்று கூறினார். நாதஸ்வரக் கலைஞரின் கதை என்பதால் நடனக் கலைஞரான தனது மகளின் நடனம் ஒன்றையும் இணைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.
சண்முகலிங்கம் மாஸ்டர் நாடகத்தின் தன்மையை விளங்கப்படுத்தி இடைச்செருகல் எல்லாம் செய்ய முடியாது என்று கூறினார். அப்படியென்றால் மகளை நடிக்கவிட முடியாது என்று ரேலங்கியின் அப்பா மறுத்துவிட்டார். நாங்கள் வந்தவழியே திரும்பிவிட்டோம். சண்முகலிங்கம் மாஸ்டர் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். காரில் திரும்ப வரும்போது இந்த சம்பவத்தை ஒரு நகைச்சுவையாகவே எடுத்து அவர் அதுபற்றி சுவாரஸ்யமாகக் கதைத்துக்கொண்டு வந்தது நன்றாக நினைவிருக்கிறது. ரேலங்கி நாதஸ்வர – நாட்டியக் கலைஞர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஈழத்துத் திரைப்படமான ‘தெய்வம் தந்த வீடு” படத்தில் நடித்துள்ளார். இப்படம் 1978இல் வெளியானது.
சில நாட்களின் பின்னர் மகள் பாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு பெண்ணைக் கண்டுபிடித்துவிட்டதாகச் சொன்ன சண்முகலிங்கம் மாஸ்டர் விரைவில் ‘கோடை’ நாடக ஒத்திகைகள் ஆரம்பமாகுமெனக்; கூறினார். முதலாவது ஒத்திகைக்குப் போனபோது நாடகப் பயிற்சிப் பட்டறைக்கு வந்திருந்த பல நாடகக் கலைஞர்களை நான் சந்தித்தேன். ஒத்திகைகள் வார நாட்களில் மாலை வேளைகளிலும் வார இறுதி நாட்களில் பகல் வேளைகளிலும் யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் இருந்த ஒரு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றன. ஒத்திகைகள் முடிய மிகவும் பிந்திய இரவுகளில் சண்முகலிங்கம் மாஸ்டர் என்னைத் தனது காரில் பத்திரமாக வீட்டில் கொண்டுவந்து விடுவார்.
‘கோடை’ நாடகத்தில் என்னுடன், அக்காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த நாடகக் கலைஞர்கள் பலர் நடித்தனர். நாதஸ்வரக் கலைஞர் மாணிக்கமாக பிரான்சிஸ் ஜெனம் அவர்கள் நடித்தார். காசியாக ஏ.ரி.பொன்னுத்துரை அவர்கள் நடித்தார். மகள் கமலியாக கௌரி வேதநாயகம், விதானையாராக ஜி.பி.பேர்மினஸ், பஞ்சைய்யராக ரி.எஸ். லோகநாதன், சோமுவாக சோ. தேவராசா, முருகப்புவாக தா.சண்முகநாதன், சாமியாராக கே. தனபாலசிங்கம், மகன் கணேசுவாக ஞா.செந்தீஸ்வரன் ஆகியோர் நடித்தனர். இந்த நாடகத்தை இளைஞரான வீ.எம்.குகராஜா நெறிப்படுத்தியிருந்தார். நாடக அரங்கக் கல்லூரி சார்பில் குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களும் அ.தாசீசியஸ் அவர்களும் தயாரித்திருந்தார்கள்.
சில கிழமைகள் நடந்த ஒத்திகைகளுக்குப் பின்னர் ‘கோடை’ நாடகம் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் 02-03-1979 அன்று மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மத்தியில் மேடையேறிப் பெரும் பாராட்டைப் பெற்றது. ஒரு பா நாடகத்தில் சிறப்பாக நடித்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 23 வயதில், வளர்ந்த பிள்ளைகளுக்குத் தாயாக நடித்தது எனக்கு ஒரு புதிய அனுபவமாக இருந்தது. பெஞ்சமின் அவர்கள் மிக அழகாக எனக்கு ஒப்பனை செய்திருந்தார்.


இந்த மேடையேற்றத்தைத் தொடர்ந்து ‘கோடை’ நாடகம் இலங்கை வானொலியில் ‘மேடை நாடக’ வரிசையில் முதலாவது நாடகமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பானது. அப்போது அங்கு நாடகத் தயாரிப்பாளராகப் பணிபுரிந்த கே.எம்.வாசகர் அவர்கள் இதனைத் தயாரித்திருந்தார். மேடை நாடகத்தில் நடித்த நாங்களே வானொலி நாடகத்திலும் நடித்தோம்.
நான் நடித்த ‘கோடை’ நாடகம் ஒருமுறைதான் மேடையேறியது. யாழ். நாடக அரங்கக் கல்லூரியினர் தமது இரண்டாவது நாடகமாக ‘அவள் ஏன் கலங்குகிறாள்’ என்ற நாடகத்தைத் தயாரித்தபோது அந்த நாடகத்திலும் நடிப்பதற்காக மீண்டும் சண்முகலிங்கம் மாஸ்டர் என்னை அணுகினார். அந்த நாடகத்தில் ஒரேயொரு பெண் பாத்திரம். நான் இன்னும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த காலம் அது. எனக்கு நேரம் வராது மாஸ்டர் என்று சொன்னேன். அவர் தங்களுக்கு வேறு பெண் நடிகையை எடுப்பது இயலாத காரியமாக இருக்கிறது என்று என்னை மிகவும் வற்புறுத்திக் கேட்டார். நானும் சரி என்று கூறி அந்த நாடகத்தில் நடித்தேன். ‘அவள் ஏன் கலங்குகிறாள்’ நாடகத்தை வீ.எம்.குகராஜா எழுதித் தானே நெறியாள்கை செய்திருந்தார். பின்னர் நேரமின்மை காரணமாக யாழ். நாடக அரங்கக் கல்லூரி நாடகங்களில் நான் தொடர்ந்து நடிக்கவில்லை. (கிடைத்தவர்களது படங்களையாவது ஆவணப்படுத்தும் நோக்கில் பிரசுரித்து உள்ளோம்.-வெற்றிமணி.)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *