உண்மையைச் சொல்லுங்கள் உங்களுக்கு மட்டும்தான் நேரம் இல்லையா!
- மாதவி
கல்லரிக்கும் சட்டியில் உருளைக்கிழங்கின்
தோல் உரிக்கும் அம்மா!
உலகளவில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து உணவுகளில் ⅓ க்கும் அதிகமானவை வீணாகின்றன. உணவுப் பொருட்களை வீணாக்குவதில் இங்கிலாந்திற்கு நிகர் வேறு இல்லை எனலாம். உணவு வீணாகுவதைக் குறைக்கப் பல ஏற்பாடுகள் இருந்தாலும், ஐரோப்பாவில் அதிக அளவு உணவுகள் இங்கிலாந்து நாட்டிலேதான் வீணாகிறது.
இங்கிலாந்தில் 8.4 மில்லியன் மக்கள் உணவுக் கஸ்ரத்தில் இருந்தாலும், ஒரே ஆண்டில் 9.5 மில்லியன் டன் உணவைக் கழிவாக இங்கிலாந்து தூக்கி எறிகிறது. (கணக்கெடுப்பு 4 ஜனவரி 2022)
வீணாக வீசி எறிப்படும் மூன்று உணவுகள் பாண்! பால்!! உருளைக்கிழங்கு!!
இதற்கு காரணம் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், இரண்டு வாங்கினால் கால்வாசி காசு மிச்சம். இதுபோன்ற சலுகைகளும்,மலிவு என தேவைக்கு அதிகமாக வாங்கி பின் வீசுவதும், மனிசருக்கு நிற்க, உண்ண, நேரம் இல்லாத உழைப்பும், இங்கு காரணமாகிறது.
சமைக்கும் போது பார்த்தால் மரக்கறி என்ன, மாமிசம் என்ன,ஒரு வாரத்தில் வீணாக வெட்டி எறியும் பகுதி நம் நாட்டில் இன்று ஒரு நாளைக்கு வயிறார உண்ணப் போதுமானது. இதே அன்று நம் காலத்தில் 1960 களில் என்றால் இரு நாட்களுக்கு போதுமானது.
எல்லாம் இயந்திரமயம். அன்னாசிப் பழம் வெட்ட, சடார் என்று வட்டமாக நடுவில் வெட்டி எறிய. கரைப்பகுதியை ஆழமாக மூழ்கள் விலத்தி வெட்டி எறிய, நடுவில் ஒரு சிறு துண்டு அன்னாசி வரும். ஒருவர் சாப்பிடலாம். இதே அன்னாசியை அம்மா பக்குவமாக பொறுமையாக வெட்டி தரும்போது ஒரு குடும்பமே உண்ணலாமல்லவா. பல வீடுகளில் வீசும் பழமாக அப்பிள் பழமே உள்ளது. காரணம் பெரியவர் முதல் சிறியவர் வரை வெட்டிக் கொடுத்தால் மட்டுமே சாப்பிடுவார்கள். இதில் வாழைப்பழங்களும் அழுகிறது புரியாத புதிர்! உரித்துக் கொடுக்க ஆள் இல்லையா!
உருளைக்கிழங்கு அன்றும் இன்றும் நம்மண்ணில் விலை உயர்ந்த பொருளே! திருமண வீடுகளில் சமைப்பதற்கு சுவைக்காக மட்டுமன்றி, விணாகாமல் தோல் உரிக்க சுகம் என்றும், அவித்துப் பின் தோல் உரிப்பார்கள். இங்கு காதுக்குள் இயபோனை வைத்து கதைத்தபடி, கிழங்கு வெட்டும் கத்தியால், அல்லது கத்தியால், வெட்டி தள்ளுவார்கள். ஒன்று கிழங்கு இங்கு மலிவு. மற்றது மினக்கிட நேரம் இல்லை. எங்கட அம்மா நேரம் போனாலும், கல்லரிக்கும் சட்டியில் ஒவ்வொரு கிழங்காகத் தேய்த்து தேய்த்து, தோல் உரிப்பா. அதற்காக உங்களையும் தேய்க்கச்சொல்லவில்லை. வெட்டும்போது கழிவு குறைவாகவே வெட்டலாம் அல்லவா.
எங்களுக்கு சீரியல் பார்க்கவும், போன் நோண்டவும், பெஸ்புக்கில் லக் எண்ணவும், போடவும் நேரம் இருக்கு. உணவுப்பொருட்களை மிச்சம் பிடிக்க நேரம் இல்லை. நீங்கள் நினைக்கலாம் அந்த நேரத்தில் நாம் வேறு வேலை செய்தால், வீணாக்குவதை விட பத்து மடங்கு வாங்கலாம் என்று, அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் வீணக்கப்பட்ட பொருள்களுக்குப் பின்னால், தோட்டத்தில் இருந்து உங்கள் கைகளில் வந்து வெட்டி எறியும் வரை, எத்தனை கரங்களின் உழைப்பு மாறி மாறி வந்திருக்கும்.
அம்மாவுக்கு நேரம் இருந்தது, அன்று செய்தா என்று நினைக்கும் சேய் களுக்கு… ஒரு செய்தி. இது கதையல்ல பலரது வீடுகளில் அன்று நடந்தது.
திடீர் என இரவு மழை. அம்மா அருகில் இருந்த சாக்கை தலையில் போர்த்துக்கொண்டு வெளி லைட்டைப் போட்டுவிட்டு, பின் முற்றதில் கொத்திய விறகை பொறுக்க, ஓடுகிறா ! அப்பா எழுந்து என்னணை இந்த நேரத்தில் என்று சத்தமிட, உங்கை கதவில் . நில்லுங்க தாற விறகை புகைகூட்டு அடுப்படியில் வையுங்கோ என்கிறா. அப்பாவும் வைக்கிறார். காலத்தாலை சமையலுக்கு விறகு ஈரமாக இருந்தால் எரியுமே. மீண்டும் அம்மா படுத்துவிட்டா.
சேவல் கூவுது. அம்மா கிணற்றடியில் சட்டிபானை விளக்கிறா. அப்பா தானும் கூடமாட உதவுகிறார். பின் பிள்ளைகளை எழுப்பி முகம் கழுவிவிட்டு வந்து படியுங்கள். நான் தேனீர் ரெடிபண்ணுகிறேன் என்று அம்மா சொல்லிவிட்டு, அடுப்படிக்குள் போக, பிள்ளைகள் எழும்பி விட்டார்களா என்று பாக்க, அப்பா அறைக்குள் ஏதோ தேடுவதுபோல் நடிப்பார். மேசைக்கு தேனிர் வரும். அத்தோடு தேங்காய் துருவிக் சத்தம் கேட்கும். அப்பாவின் அறைக்குள் எழுத்துவேலை நடக்கும்.
ஒரு அடுப்பில் இடியப்பம் அவிய. மறு அடுப்பில் சொதிகொதிக்க, அம்மிக்கல்லில் மிளகாய் அரைக்க, இடியப்பம் அவித்த அடுப்பில், அரிசிக்கு உலையும் வைக்க, சொதி இறக்கிய கையோடு, நான்கு ஐந்து உருளைக்கிழங்கை கல்லரிக்கும் சட்டியில் தேய்த்து, தேய்த்து, கிழங்கு விணாகாமல் உரித்து, குளம்பு வைக்க. அம்மாவின் சமையல் தடல்புடலாக நடக்கும்.
இஞ்சாய் ஒருக்கால் வாருங்கோ. இந்த இடியப்பம் நாலு, நாலு கட்டி சம்பலும் போடுங்கோ. தம்பிக்கு மட்டும் கொஞ்ச குளம்பும் விடுங்க. பள்ளிக்கூடம் போகப் பிள்ளையளுக்கு சாப்பாடு ரெடி. சரி பிள்ளைகள் வந்து சாப்பிட்டு விட்டு கெதியா வெளிக்கிடுங்கோ! தனக்கும் அப்பாவுக்கும், சாப்பாடு கட்டியாச்சு. அப்பாவுக்கு சொதி இல்லாட்டி இறங்காது என்று கோர்லிக்ஸ் போத்தலில் சொதியும் விட்டுவைத்துவிட்டு. அம்மா குளிக்க ஓடுகிறா.
பிள்ளைகள் பள்ளிக்கூடம் செல்வதையும் பஸ் ஏறுவதையும் உறுதிப்படுத்தியபடி அம்மா, சேலைகட்டுவா. அப்பாவும் அதே நேரம் ரெடியாகிவிட, இரவு அப்பாவும், அம்மாவும் பாசாலை மாணவர்களது வினாத்தாள்கள் திருத்தியதை மறக்காமல் எடுத்து அம்மா முன்னுக்கு வைப்பா. உடுத்த சேலையோடு ஓடிப்போய் கோழிக்கூட்டையும் திறந்துவிட்டு, ஆட்டுக்கு குழை போதுமோ எனவும், நோட்டமிட்டு பாடசாலைக்கு புறப்படுவா. பின் பாடசாலையில் ஆசிரியர்களான அப்பா அம்மாவுக்கு மீண்டும் அங்கு பிள்ளைகள்.
சரி இப்ப சொல்லுங்கள், உங்களுக்குத்தான்! நேரம் இல்லையா!!
நன்றி.படங்கள்.திருமதி.லோகநாயகி ஸ்ரீஸ்கந்தராஜா புலோலி.பருத்தித்துறை
![]()
