தமிழர்களின் பாரம்பரிய உணவும், மாற்றங்களும்!
-பிரியா.இராமநாதன்.இலங்கை
“உணவே மருந்து ” என்கிற கலாசாரம் தமிழர்களினுடையது என்பதனை சங்ககால இலக்கியங்கள் தொட்டு நாம் அறிந்துகொள்ளலாம்.
சித்தர்களால் வழங்கப்பட்ட சித்த மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரே ஒரு விடயம் என்னவென்றால், எது உனக்கு உணவாக இருக்கிறதோ அதுவே மருந்தாக இருக்க வேண்டும், எது உனக்கு மருந்தாக இருக்கிறதோ அதுவே உணவாக இருக்க வேண்டும் என்ற கொள்கை. சித்தர்கள் “பதார்த்தகுண சிந்தாமணி” என்ற நூலை எழுதி அந்த நூலிலே நாம் சாப்பிடக்கூடிய தண்ணீருக்கு என்ன குணம்? பாலுக்கு என்ன குணம்? பருப்புக்கு என்ன குணம்? அதே போல அரிசிக்கு என்ன குணம்? அரிசியில் எத்தனை வகை இருக்கிறது? பாலில் எத்தனை வகை இருக்கிறது? வெள்ளாட்டுப் பாலுக்கு என்ன குணம்? பசும்பாலுக்கு என்ன குணம்? காராம்பசு பாலுக்கு என்ன குணம்? எருமைப்பாலுக்கு என்ன குணம்? என்று ஒவ்வொன்றையும் வகைப்படுத்தி முழுமையாக எழுதியிருக்கிறார்கள். அந்த உணவுப் பொருள்களுக்கான குணத்தை வகுத்து, ஒரு மனிதன் தன்னுடைய உடல் கூறுக்குத் தகுந்த எந்த உணவை எந்தப் பருவகாலத்தில் சாப்பிடவேண்டும்? என தமிழர்களுடைய பழங்கால வாழ்வியல் முறைகளில் எல்லாமே எழுதப்பட்டுள்ளது.தமிழர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய உணவுகளில் சிறு தானியம் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். அதில் பிரதானமானது வரகு, திணை, குதிரை வாலி, சாமை. இதனைத் தொடர்ந்து சாப்பிட்ட தமிழர்களுக்கு எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான சூழலில் வாழ்ந்ததை நாம் அறிந்துகொள்ளமுடிகின்றது . பண்டிகைகள் மற்றும் விசேட தினங்களில் மட்டுமே அரிசி சோற்றை சாப்பிட்டு வந்த தமிழ்ச் சமூகம் ஒன்று இருந்தது. அது காலப்போக்கில் அன்னியர் ஆதிக்கத்திற்குப் பிறகு, மேற்கத்தியக் கலாச்சார மோகம் வந்த பிறகு தினமும் அரிசிச் சோறு சாப்பிடக்கூடிய பழக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல மற்றைய நாடுகளில் உள்ள தமிழ் மக்களிடமும் வேரூன்றியது .
முன்பு உலகத்துக்கே எடுத்துக்காட்டாக இருந்த தமிழ்ச் சமூகம் இன்றைக்கு உபயோகப்படுத்தக்கூடிய உணவுகள் என்ன? என்பதை பட்டியலிட்டுப் பார்த்தோமானால் மிகவும் வேதனை தரக்கூடிய விடயமாக இருக்கிறது. மருந்தே உணவு , உணவே நச்சு என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதற்கான காரணம் என்ன? ஏன் இந்த உணவு சார்ந்த விழிப்புணர்வு இல்லாத சூழல் உருவானது ?
அரிசியை தினசரி உணவாகவும், அரிசியை மூலப்பொருளாகக் கொண்ட இட்லி,(உண்மையில் இட்லி என்பது தமிழர்களின் உணவு அல்ல அது மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு அறிமுகமான ஓன்று ) தோசையை தினசரி உணவாக தமிழர்கள் உற்கொள்ள ஆரம்பித்தபின் தமிழர்களுடைய உடல் கூறும் வெகுவாக மாற ஆரம்பித்தது. ஏனென்றால், நம் உணவிலே இரண்டு வகையான உணவு உண்டு, ஒன்று அமில உணவுகள் மற்றொன்று கார உணவுகள். எந்த உணவில் மாவுப்போருள்கள் மிக அதிகமாக இருக்கிறதோ அவை எல்லாம் அமில உணவுகள். நார்ச்சத்து, புரதம் அதிகமாக இருக்கக் கூடிய உணவுப் பொருள்கள் எல்லாமே கார உணவுகள். அரிசி முழு நேர உணவாக இருக்கும் பொழுது தமிழர்களிடையே பரவலாக இருக்கக் கூடிய கலாச்சாரம் என்னவென்றால்,காலை வேலையில் இட்லி, தோசை, பிட்டு, ரொட்டி. பகலில் சோறு , இரவிலும் ஏதோவொரு மாப்பொருளினாலான உணவு . ஆக இதனுடன் இருக்கக் கூடிய காய்கறிகள் என்ன என்று பார்க்கும்பொழுது உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் போன்றவற்றைச் சேர்க்கிறோம். அடுத்து வெண்டைக்காய், முருங்கைக்காய். இதற்கு மேல் எந்த காய்கறிக்குள்ளேயும் போவதில்லை.
இன்றைய உணவுப் பழக்கத்தில் சராசரியாக 10 காய்கறிகள், முழுமையாக அரிசி, கூடுதலாக வட இந்திய ஆதிக்கத்திலிருந்து வந்த சப்பாத்தி (கோதுமை உணவு) நாண், இதை மட்டுமே நாம் உபயோகப்படுத்துகிறோம். ஆனால் தமிழர்கள் பயன்படுத்திய சங்க காலத்தில் இருந்த வந்த உணவுப் பொருள்கள் கிட்டத்தட்ட 3000 வரையில் இருக்கிறது. இந்த மூவாயிரம் உணவுப் பொருள்களை தமிழர்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் எல்லாமே இருக்கிறது. இன்று ஒரு வீட்டில் களி கிண்டக் கூடிய தன்மை இருக்கிறதா? அன்றைய கால கட்டத்தில் நல்ல உடல் வன்மைக்கும், உடல் வலுவுக்கும், தமிழர்கள் சாப்பிட்ட உணவு களி .காலை வேலையில் தோட்ட வேலைக்குப் போகக்கூடிய தமிழர்கள் வெந்தயக் களி, உளுத்தங்களி, கேழ்வரகுக் களி, சோளக்களி, கம்புக்களி உண்டு வந்தனர். களி என்பது திடப்பொருள் உணவாகும். இந்த மாதிரியான களியை உட்கொண்டு தோட்டத்திற்கு செல்லும்போது அவர்களால் கடுமையான வேலைகளைக் கூட செய்ய முடிந்தது.
ஊட்டத்திறன், உண்டாற்றல், உந்துசக்தி எல்லாமே அந்த உணவில் கிடைத்ததால் அவர்கள் செய்த வேலை என்பது மிகச்சிறந்த பயிற்சியாக அங்கீகரிக்கப்பட்டு உடலோம்பலும், அதன் மூலம் அற்புதமான ஆரோக்கியமும் அவர்களுக்குக் கிடைத்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் எடுக்கக்கூடிய உணவுகள் அநேகமாக இட்லி, தோசை. இந்த இட்லி, தோசை என்பது அரிசியை புளிக்க வைத்து, அதாவது அரிசியை மாவாக்கி புளிக்கவைத்து, அந்த புளிப்புத்தன்மை மிகுதியான பின்புதான் இட்லியாகவோ, தோசையாகவோ வார்க்க முடியும். அதைச் சாப்பிட்டு வேலைக்குப் சென்றோமானால் உடம்பு இன்னும் கூடுதலாக புளிக்க ஆரம்பிக்கிறது. ஆக புளிப்பு உணவுகளை தெரிந்தோ, தெரியாமலோ, மறைமுகமாகவோ நாம் தொடர்ந்து எடுக்கக் கூடிய ஒரு காலகட்டத்தில் உடம்பு தன்னுடைய ஊட்டத்திறனை முழுமையாக இழந்து உடலிலும் புளிப்புத் தன்மை மிகுந்து பல்வேறு நோய்கள் வருகிறது. இட்லி, தோசை என்று இருந்த தமிழ் சமூகம் இன்று வேறு ஒரு உணவை உண்ணும் நிலைமைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். இன்ஸ்டன்ட் நூடில்ஸ், சப்பாத்தி, பரோட்டா, பிரியாணி போன்றவற்றை உட்கொண்டு வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். உலகம் முழுக்க உணவுப் பொருள்களில் ஒரு லட்சம் செயற்கை ரசாயனம் இருப்பதாக மதிப்பீடு செய்து இருக்கிறார்கள். இவை உலகம் முழுக்க இருக்கின்றதோ இல்லையோ, ஆனால் கீழைத்தேய நாடுகளுக்கு வரக்கூடிய உணவுப் பொருள்களில் கட்டாயம் இருக்கிறது. அந்த மாதிரியான ரசாயனம் கலந்த உணவுகளைச் சாப்பிடும்பொழுது தமிழர்களுடைய உணர்வு மழுங்கடிக்கப்படும்.
இன்று பெரும்பாலான நோயாளிகள் ஏதாவது ஒரு மருத்துவரிடம் வாழ்நாள் முழுக்க அடிமை சாசனம் எழுதிக்கொடுக்கிற ஒரு காலகட்டம் வளரும் நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை உடைக்க வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தன்னுடைய உணவுமுறை, பாரம்பரியம், கலாசாரம் போன்றவற்றின் அடிப்படையில் முன்னோர்கள் என்ன உணவு முறையில் சாப்பிட்டார்கள், எப்படி ஆரோக்கியமாக இருந்தார்கள், எப்படி அவர்கள் மட்டும் பல குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆரோக்கியமாக இருந்தார்கள்? எப்படி அவர்களால் மட்டும் நோயின்றி வாழமுடிந்தது
ஏன் இன்று நம்மால் இயலவில்லை? எப்படி மரபுக் கூறுகள் மழுங்கடிக்கப்பட்டன? என்பதை உற்று நோக்கி ஆய்ந்து பார்க்க வேண்டும். அன்றைய தமிழர்கள் வாழ்க்கையிலே கடுகோதன்னம் என்ற சாப்பாட்டு முறையே இருந்தது.
கடுகோதன்னம் என்றால் கடுகை பிரதானப்படுத்தி அரிசியுடன் சேர்த்து சமைக்கக்கூடிய ஒரு முறை. உளுந்தோதன்னம் என்பது உளுந்தையும், அரிசியையும் வைத்துச் சமைக்கக்கூடிய ஒரு முறை, எள்ளோதன்னம் என்றால் எள்ளையும், அரிசியையும் வைத்து சமைக்கக்கூடிய ஒரு முறை. ஆக இந்த முறையெல்லாம் முன்பு வாழ்ந்த தமிழர்களிடம் இருந்தது.
எள்ளுச்சோறு, கொள்ளுச்சோறு, கடுகுச்சோறு இவையெல்லாம் இருந்த தமிழ் சமூகத்தில் ஹார்மோனல் பிரச்சனை இன்று உலகளாவிய அளவில் பேசப்படுகிற தைராய்டு பிரச்சனை எல்லாவற்றுக்குமே சோறே மருந்தாக மாறியது. ஏன் அப்படி ஒரு காலகட்டத்தை நாம் உருவாக்கக் கூடாது. இதை தமிழ் சமூகம் சிந்திக்க வேண்டும். நம்முடைய புராதன, பாரம்பரிய உணவு முறைகளை நாம் ஒவ்வொருவரும் நினைத்து, மறுபடியும் மீட்டெடுத்து மறைந்துவிட்ட உணவுப் பொருள்களை அடையாளப்படுத்தவேண்டிய பாரிய பொறுப்பு நம் அனைவர்க்கும் உண்டு !
![]()
