போதைப் பிரியர்களுக்கான மாற்று வழி என்ன?

0
87

பாதுகாப்பான மதுபானம்

பாதுகாப்பான மதுபான வகை ஒன்றைக் கண்டுபிடிப்பதுதான்.
மதுவின் தாக்கமானது நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துவதாகும். நரம்புக் கலங்கள் தமக்கிடையே செய்திகளை அனுப்புவதற்கும் தொடர்பாடலுக்குமாக நரம்பியல் கடத்திகளைப் (neurotransmitter) பயன்படுத்துகின்றன. பலவித நரம்பியல் கடத்திகள் உடலில் உள்ளன.

இவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அவற்றை அமைதிப்படுத்தும் சரியான மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் மனிதனுக்கு மது கொடுக்கக் கூடிய அமைதியையும், சந்தோசத்தையும் கொடுக்கலாம். அவ்வாறு அமைதிப்படுத்தும் ஒரு இரசாயனம்; Gamma aminobutyric acid (Gaba) என்பதாகும்.

இது மூளையில் உற்பத்தியாகிறது. மருந்தாகவும் கிடைக்கிறது. இவ்வாறான இரசாயனங்களின் கலவைகளை மதுவிற்கு பதிலாக உபயோகிக்கலாம். இவற்றில் மதுவின் தொக்கிய விளைவு இருக்காது என்கிறார் David Nutt என்பவர். மற்றவர்களுடன் மனம்விட்டுப் பேசி நல்லுறவை வளர்க்க முடியும். மதுவினால் எற்படும் வன்முறை போன்ற பின்விளைவுகளும் இருக்காது என்று மேலும் சொல்கிறார்.

தான் அவ்வாறான ஐந்து பொருட்களை இனம் கண்டுள்ளதாகவும் அவற்றை சரியான அளவுகளில் கலந்து பரீட்சித்திருப்பதாக Guardian ல் எழுதிய ஒரு கட்டுரையில் தெரிவித்தார். அதை மது போன்ற திரவ வடிவில் தயாரிக்க வேண்டும். பாவனையாளர்களின் தேர்வுகளுக்கும் ஏற்ப பல்வேறு நிறங்களிலும் சுவைகளில் கொடுக்க வேண்டும் என்பதே தன் முன் உள்ள சவால் என்கிறார்.

சரி இதற்கான ஆதாரங்கள் என்ன? எங்கே பரீட்சித்துப் பார்த்திருக்கிறார்.

தானே தனக்குப் பரீட்சித்துப் பார்த்ததாகக் கூறினார். தான் அதை உட்கொண்ட போது தனக்கு பதற்றங்கள் ஏதும் இன்றி மனம் ஆறுதலாக இருந்தத்தகவும், சுகமான தூக்கம் வந்ததாகவும் சொல்கிறார். பின்னர் அதற்கான மாற்று மருந்ததைச் (antidote) சாப்பிட்டதும் சில நிமிடங்களில் சகசமான நிலைக்கு வந்துவிட்டதாகவும், ஒரு விரிவுரையையும் நடாத்த முடிந்ததாகவும் சொல்கிறார்.

இந்த ஆய்வு பற்றி சில மதுபானத் தயரிப்பாளர்களிடம் வினவியபோது அவர்களுக்கும் இதில் இத்தகைய தொக்கிய விளைவற்ற மதுவைத் தயாரிப்பதில் ஆர்வம் இருப்பதாகத் தெரிகிறது. பணம் கொட்டும் இடத்தைத் தம் கையினுள் அடக்குவதில் அவர்கள் கில்லாடிகள் அல்லவா?

பாதுகாப்பானதுதானா?

கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. போதை கொடுக்கும் மதுபோன்ற பானம். ஆனால் மது போன்ற பக்கவிளைவுகள் அற்றது. அதிலிருந்து உடனடியாக விடுபட்டு வேறு வேலைகளில் ஈடுபட வேண்டுமாயின் அதன் தாக்கத்திலிருந்து உடனடியாக மீள்வதற்கு மாற்று மருந்துகளும் உண்டு.

ஆகா அற்பதமான ஐடியா.

பார்க்கில் பார்ட்டியில் அல்லது வேறு எங்காவது அதை மசுக்கிடாமல் அடித்து சந்தேசமாக இருக்கலாம், வீடு போக முன்னர் மாற்று மருந்தை வாயில் போட்டுவிட்டு மனைவி முன் ஒன்றும் தெரியாத அப்பாவியாக பாவனை காட்டலாம்.

பள்ளிக்குப் போக முன் ஒரு டோஸ் அடித்துவிட்டு பள்ளி போகலாம். ஆசிரியர் வருவதற்கு முனனர்; மாற்று மருந்து அடித்துவிட்டு நல் மாணவனாக கலர் காட்டலாம்.

மொத்தத்தில் எல்லாமே ஏமாற்றுக் காரி;யங்கள்தாம். இவை எதுவுமே மனித மனத்தில் உண்மையான மகிழ்ச்சியை வளர்ப்பதற்கானவை அல்ல. அவற்றை மறக்கச் செய்து போலியான ஆனந்தத்தில் மூழ்க வைப்பவைதான். ஏற்கனவே இதை ஒத்த மருந்துகள் பாவனைiயில் இருக்கவே செய்கின்றன.

Benzodiazepine வகை மருந்துகள் அத்தகவையன. இவை மனப்பதற்றத்தை தவிர்த்து அமைதிப்படுத்தக் கூடியவை. வழமையாக வலிப்பு, மதுவில் இருந்து விடுபதற்காக, தசைப்பிடிப்பு, தூக்கத்திற்கு என்று பல காரணங்களுக்காக உபயோகிக்கப்படுகின்றன.

Diazepam, Chlordiazepoxide போன்ற பலவற்றை உதாரணமாகச் சொல்லலாம். வலியம், லிபிரியம் போன்ற பெயர்கள் பலருக்கும் பரிச்சயமானவை. இவை போன்ற மருந்துகள் பல உள்ளன.

ஆனால் தன்விருப்பின் பேரில் வாங்கும் சுய பாவிப்பானவை அல்ல மருந்துவர்கள் நோயாளிகளுக்கு தமது கண்காணிப்பின் கீழ் மட்டுமே இத்தகைய மருந்துகளை உபயோகிக்கிறார்கள். குறிப்பட்ட காலத்திற்கு குறிபட்பிட்ட அளவுகளில் கட்டுப்பாடுகளுடன் மட்டும். ஏனெனில் அவற்றிக்கும் ஆட்பட்டு விடுபட முடியாத (addiction) நிலை ஏற்படும். அதனால்தான் பிரிஸ்கிரிப்பசன் இன்றி வாங்க முடியாது.

இப்பொழுது தொக்கற்ற மது என்ற பெயரில் அவற்றை அல்லது அதை ஒத்தவைகளை வர்த்தக மயமாக்கப் பார்க்கிறார்கள். திறந்த பொருளாதாரம் போல திறந்த போதைப் பாவனை. ஒரு குழியிலிருந்து எடுத்து மற்றொரு படுகுழியில் வீழ்த்தும் விளையாட்டுத்தான்.

மற்றொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். மதுவிற்கு மாற்றாகத் தான் தேர்ந்தெடுத்த மருந்துகள் எவை என்பது பற்றி அவர் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அது மட்டுமல்ல அவை பரந்த மட்டத்தில் ஆய்வு செய்யப்படவும் இல்லை. சுய அனுபவம் பற்றியே பேசியிருக்கிறார்.

எனவே ‘நம்பத் தகுந்தது அல்ல. அவைக்கு உதாவது’ என்று தட்டிக் கழித்துவிடலாமா?

மனித மனங்களில் கவலையும் அதிருப்தியும் தன்னம்பிக்கை இன்மையும் இல்லாது ஒழியும் வரை மாய உலகில் தன்னை மூழ்க வைத்து தற்காலிக சுகம் தேடும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

“யேசு வந்தார் பின்பு காந்தி வந்தார். மனிதன் மாறவில்லை.” எனப் பாடினார்கள்

அவன் மாறப் போவதுமில்லை. மது மருந்து மாத்திரைகள் என மனித மனத்தை மாய உலகில் பறக்க வைப்பதற்கான முயற்சிகள் தொடரவே செய்யும்.

“எம்மையும் எம் சந்ததிகளையும் நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.” எஸ்.ஜே.வி ஞாபகம் வந்தால் நான் அதற்குப் பொறுப்பில்லை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *