முத்தமிட்டுப் பல முத்தமிட்டுப் பல முத்தமிட்டு
மாலினி.மாலா. யேர்மனி
உதிரத்தின் பெயரால் ஒப்புக்கான உறவு முறைகள் மீது நம்பிக்கையில்லை எனக்கு. கால் நூற்றாண்டாய் காத்திருந்த ஸ்பரிசங்கள், சித்தி, மாமி என்று தோள்சாயும் காத்திருப்பின் கனதி உணர்ந்த நேசங்கள்….. காத்திருந்த காலத்தின் கதை எங்கள் எல்லாரிடமும் இருந்தது பேசிக்கொள்ள. ஆனாலும் பிள்ளைகள் பேசிக்கொண்டிருந்தார்கள். நாம் பாதைகள் சிதறிய வயதில், சிதறிய கண்டங்களிலிருந்து வந்து சந்தித்துக் கொண்டார்கள். இவ்வயதில் அன்றெமக்கில்லாத தெளிவு தீர்க்கம்,தன்னுணர்வு தன்னுரிமை பற்றிய தெளிவு எல்லாமே புதிய தலைமுறைக்கிருப்பது மகிழ்ச்சி தருகிறது.
எந்தப் புள்ளியில் தொலைத்தீர்களோ,அந்தப் புள்ளியிலிருந்து தேடுங்கள். தொலைத்த புள்ளியில் நிறுத்தியிருக்கிறோம் என்றான். கண்டதும் சித்தி எனக்கட்டிக்கொண்டு விடைபெறுகையில். ஏன் நீ இந்த முத்தத்துக்காய் இத்தனை வருடம் காத்திருக்க வைத்தாய் எனக் கண்கலங்கிய மகன். விடைபெறுதல்களின் போது அது இத்தனை நீண்டதாய் இருக்கப்போகின்றது என்று தெரியவில்லை எமக்கன்று. இடையில் சிலரை இனிக்காணவே முடியாமல் தொலைத்துவிடப் போகிறோம் என்பதும். கூட. போரும் வாழ்வும் ஓடு என்றது . எதைத் தொலைத்து விட்டு ஓடுகிறோம் , எதைப் பேச மறந்து ஓடுகிறோம் என்பது கூடப் புரியாதவர்களாய் ஓடினோம். வந்து விழுந்த இடங்களில் வாழ்வு பிடித்து உலுக்கிய உலுக்கில். வசந்தம் உதிர்ந்த போதுதான் நம்மில் பலருக்கும் தொலைத்தது என்ன என்பதே புரிந்தது. தோளணைத்தவர்கள், தோள் சாய்க்கக்கூடியவர்கள், தொடர்பெல்லைக்கு வெளியே இருந்தார்கள்.
வாழ்வோடு போராடி வாழ்தலைப் புரிந்து கொள்ளல் அத்தனை இலகுவல்ல. அதற்கு அடி தாங்கும் மூர்க்கம் வேண்டும். வாழ்வைத் திருப்பியடிக்கும் ஓர்மம் வேண்டும். அது தனக்குள்ளிருந்து தன்னை வெளியே எடுத்து வாழ்க்கையைப் பார்க்கக் கற்றுத்தரும். வாழ்க்கை என்பது போதி. ஞானம் தரும்.
உங்கள் குரல் உங்களுடையது. அதில் எந்த வாயையும் ஒட்ட அனுதிக் காதீர்கள்.
நிறைய உங்களுடன் எழுதிப் பகிர்ந்திருக்கிறேன். ஒரு போதும் அறிவுரை சொன்னதில்லை. அதில் நம்பிக்கையும் விருப்பும் இல்லை. ஒன்றேயொன்று சொல்லத் தோன்றுகிறது அதீத, பொறுமை,அதீத சகிப்பு, அதீத அமைதி அதீத மௌனம் எதையும் பெற்றுத்தரப் போவதில்லை உங்களுக்கு. மாறாக உங்களைப் பலவீனமாக அடையாளப்படுத்தும். அப்படியே தொடர அழுத்தும் இறுதியில் உங்களுக்கே உங்களை அடையாளம் தெரியாமல் தொலைந்து போவீர்கள். ஒரே முறை வாழ்வு, அது உங்களுடையது உங்களுக்கானது எந்த சமாதானங்களுக்கும் சமரசங்களுக்கும் அப்பாற்பட்டு. வாழ்தல் உங்கள் உரிமை. உங்கள் குரல் உங்களுடையது. அதில் எந்த வாயையும் ஒட்ட அனுதிக் காதீர்கள். இந்த உலகம் எப்போதும் மாட்டுப் பந்தயக்காரரையே அதிகளவில் தன்னகத்தே கொண்டுள்ளது. அதற்கு பட்டிக்கும் பந்தயத்துக்கும், பின் பயனற்றுப் போகையில் அடித்து உண்ணவும் மாடுகள் தேவை. அது ஹை ஹை என உதைத்கும், முதுகில் குத்தும் வலியில் ஓடிக்கொண்டிருக்கும் நீங்கள் ஒரே முறை நின்று நிமிர்ந்து பாருங்கள் பந்தயக்காரர்கள் வெலவெலத்துப் போவார்கள் இன்னுமொன்று மாட்டுக்குப் பின்காலில் பலம் அதிகம். உதைத்துப் பாருங்கள்.ஓட்டத்தை நிறுத்தி உலகைப் பார்ப்பீர்கள். உதைப்பதில் விழுவது எதுவாகவும் இருக்கட்டுமே உங்களுக்கு வலிக்கவில்லையா அது போதும். எல்லா வலிதாங்கு சக்தியும் இப்படி எங்கோ ஓரிடத்தில் உடையும் அங்கிருந்து தான் தொடங்குகிறது நீங்கள் யாரென்ற தேடலும் வாழ்வும்.
ஊனக்கண்களுக்கு, இலகுவாய் அறுக்கக்கூடிய வெறும் நூல்வேலி என்று தோன்றுவது, போட்டு வைத்தவர்களுக்கும் அதைத் தாண்டி நிற்பவர்களுக்கும் மட்டுமே புரியும் அதன் கனதியும், உடைந்து கீழே விழுந்து விடாது கரைகட்டி நிற்கும் கண்ணீரும். ஒரு முழு சம்மர் காலம்….. காத்திருந்த சொர்க்கம். முத்தமிட்டுப் பல முத்தமிட்டுப் பல முத்தமிட்டு உயிர் தழுவிய சிற்றலைகள் மீண்டும் மீண்டும் கால் நனைக்க வருமென அன்பின் கரைகளில்……
![]()
