எனது நாடக அனுபவப் பகிர்வு – 22

0
11.page.anadarani

“ முகமில்லாத மனிதர்கள் “ நாடகம் – 1980
ஆனந்தராணி பாலேந்திரா

“முகமில்லாத மனிதர்கள்” நாடகம் ஒரு வித்தியாசமான பாணியில் ஒரே நடிகர்களே வெவ்வேறு பாத்திரங்களில் நடிப்பது பற்றி முன்னர் எழுதியிருந்தேன். இந்த நாடகத்தில் பாடல்கள் முக்கிய இடத்தைப் பெற்றன. நாடகத்தின் உயிரோட்டத்திற்கு அவை ஒரு கனதியைச் சேர்த்தன. எல்லாமாக பதினொரு பாடல்கள்.

“ ஊடுருவித் தானலைந்து ஊருகின்ற கண்கள் – அதன்
காரிருளில் மாறுகின்ற காலமெனும் கணங்கள்
மாறுகின்ற போதுமதில் மாயமென்பதில்லை – திசை
கூறுபட்டு வேறுபடின் சீறுகின்றதென்ன? “

ஒரு பாடலின் பல்லவி இப்படி ஆரம்பிக்கிறது.
மற்றொரு பாடல்…..

“ நெருங்கிக் கலங்கிச் சூழலும் பூமியில்
கிழண்டிக் குறண்டிக் கிடக்கும் கிழ யுகம்
ஏங்கித் தவித்துத் துடித்துக் காதைத் தீட்டிக் கேட்பது
எதையோ? எதையோ? எவையெதன் விளைவோ?”

நாடக ஓட்டத்துக்குப் பொருத்தமான கவித்துவம் மிக்க இந்தப் பாடல் வரிகளை எழுதியவர் மறைந்த கவிஞர் ச. வாசுதேவன் அவர்கள். இவர் கொழும்பு பல்கலைக்கழகப் பட்டதாரி. நாடக இயக்குனர் பாலேந்திராவிற்கு அவர் படித்த காலத்தில் கொழும்பில் அறிமுகமான ஒருவர். படிக்கும் காலத்திலேயே கலை இலக்கியத்துறையில் மிக ஈடுபாடு கொண்ட வாசுதேவன் கதை, கவிதை, கட்டுரை என நிறைய எழுதியுள்ளார். 1979ஆம் ஆண்டு பாலேந்திரா கட்டுபெத்தை பல்கலைக்கழக மாணவர்களை வைத்துத் தயாரித்து நெறிப்படுத்திய ஜேர்மன் நாடகாசிரியர் பேர்டோல்ட் பிறெக்ட் எழுதிய ‘ த எக்செப்~ன் அன்ட் த றூல்” என்ற நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்தவர்களில் வாசுதேவனும் ஒருவர். “யுகதர்மம்” என்ற பெயரில் மேடையேற்றப்பட்ட இந்த நாடகத்திலும் நிறையப் பாடல்கள் இடம்பெற்றன. இந்தப் பாடல் வரிகளையும் வாசுதேவனே எழுதியிருந்தார்.

வாசுதேவன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். நான் 70களின் நடுப்பகுதியில் இலங்கை வானொலி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த காலங்களில் வாசுதேவனை அறிவேன். பார்ப்பதற்குக் கொஞ்சம் கரடுமுரடாக இருப்பார். நீண்ட தலைமுடியுடன் ஒரு பாகவதர் போலத் தோற்றமளிப்பார். சில வேளைகளில் வானொலி நாடக ஒலிப்பதிவுகள் முடிய இரவாகிவிடும். அப்படியான தருணங்களில் சிலமுறை பஸ்நிலையம் வரை எனக்குப் பாதுகாப்பாக வந்து என்னை பஸ் ஏற்றிவிட்டிருக்கிறார்.
“முகமில்லாத மனிதர்கள்” நாடகத்தில் இடம்பெற்ற 11 பாடல்களுக்கும் இசையமைத்தவர் இசைவாணர் யாழ். எம். கண்ணன். 60கள் 70களில் யாழ்ப்;பாணத்தில் ‘கண்ணன் கோ~;டி’ என்ற பிரபலமான இசைக்குழுவினை நடத்தி வந்தவர். இவர் தனியே சினிமாப் பாடல்களுக்கு மட்டும் இசை வழங்கும் ஒருவரல்ல. ஒரு சிறந்த இசையமைப்பாளர். 1978ஆம் ஆண்டு பாலேந்திரா நெறிப்படுத்தி நான் நடித்த, ஈழத்து எழுத்தாளர் தர்மு சிவராம் அவர்கள் எழுதிய ‘நட்சத்திரவாசி’ நாடகத்திற்கு கண்ணன் அவர்கள் அமைத்திருந்த இசையைக்கேட்டு நான் வியந்துபோனேன். ஒரு நவீன நாடகத்திற்கு கண்ணன் இசையமைத்தது அதுதான் முதல்தடவை.

பின்னர் பாலேந்திரா நெறியாள்கை செய்த “யுகதர்மம்” நாடகப் பாடல்களுக்கும் மிக அற்பதமாக இசையைமைப்புச் செய்திருந்தார். இந்த நாடகப் பாடல்களைப் பாடகர் குழவில் ஒருவராக நான் பல மேடையேற்றங்களில் பாடியிருக்கிறேன். இப்போதும்கூட பலர் அந்த நாடகப் பாடல்களை நினைவு வைத்திருப்பதை அண்மையில் நாங்கள் நோர்வே சென்றபோது நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின்போது காணக்கூடியதாக இருந்தது. ஈழத்தில் வெளியான திரைப்படங்கள் சிலவற்றுக்கும் கண்ணன் இசையமைத்துள்ளார். 80,90களில் ஏராளமான எழிச்சிப்பாடல்களுக்கு இசையமைத்து பல்லாயிரக்கணக்கானோரின் மனங்களில் இடம்பிடித்தவர்.

வழமைபோல “முகமில்லாத மனிதர்கள்’ நாடகப் பாடல்களும் மிக நன்றாக வந்திருந்தன. சில பாடல்களை அவர் கர்நாடகஇசை மெட்டில் ஸ்வரங்களுடன் அமைத்திருந்தார். கண்ணன் பாடல்களைப் பாடி கசற்றில் பதிந்து கொடுக்க பாலேந்திரா அதனைக் கொழும்பு கொண்டு வந்து அங்கே நாங்கள் நடிகர்கள், கோரஸ் பாடகர்கள் அதனைப் பழகினோம். பின்னர் கண்ணன் இறுதி ஒத்திகைகளுக்கும் மேடையேற்றத்திற்கும் கொழும்பு வந்திருந்தார்.
“முகமில்லாத மனிதர்கள்” நாடகம்; 25.05.1980 அன்று கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் முதல் மேடையேற்றம் கண்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் றிம்மர் மண்டபம், வீரசிங்கம் மண்டபம், கொழும்பு கதிரேசன் மண்டபம், பேராதனை பல்கலைக்கழகம் என எட்டுத் தடவைகள் இலங்கையில் மேடையேறியது. எட்டாவது மேடையேற்றம் 26.06.1982இல் கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து நானும் பாலேந்திராவும் 1982ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் திருமணம் செய்து இலங்கையைவிட்டு வெளிநாட்டிற்கு வந்துவிட்டோம்.

“முகமில்லாத மனிதர்கள்” நாடகத்தில் நான் நடித்த பாத்திரத்தின் பெயர் ‘மானசி’. பாலேந்திராவிற்கும் எனக்கும் இந்தப் பெயரில் மிகுந்த விருப்பம் ஏற்பட்டிருந்தது. நாங்கள் இருவரும் திருமணம் செய்து எமக்குப் பெண் குழந்தை பிறந்தால் இந்தப் பெயரை வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதே போல எமக்கு மகள் 1990இல் பிறந்தார். அவருக்கு ‘மானசி’ என்று பெயர் வைத்தோம். “முகமில்லாத மனிதர்கள்” நாடகப் பாடல்களை எழுதிய வாசுதேவனும் தனது மகளுக்கு ‘மானசி’ என்று பெயர் வைத்தார் என்பதைப் பின்னர் அறிந்துகொண்டோம்.
தொடரும்….

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *