அட அடித்துப்போட்டு வந்திருக்கலாமே!
-மாதவி. யேர்மனி
நம் தாய்மொழியாக தமிழ் இருந்தாலும், நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் நாம் பேசும் விதம் பலருக்கு புரியாமலே இருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் இருந்து தாயகம் சென்று விடுமுறையைக்கழிக்கும் பலர் இதனை நன்கு உணர்வார்கள்.
யாரும் உறவினர் வீட்டுக்கு வருவதாகச் சொல்லிவிட்டு நாம் தாமதம் ஆனால், அவர்கள் தொலைபேசியில் ஏன் இன்னும் வரவில்லை, என்று கேட்டால், ‘பதில் நாம் இதோ இறங்குகின்றோம் “ என்று பதில் கொடுப்போம்.
அவர்கள் தலையைப் பிச்சுக்கொள்வார்கள். இவர்கள் வெளிநாட்டில் இருந்து வந்து மாமரத்தில் ஏறி மாங்காய் புடுங்குகின்றார்களா? அதென்ன இறங்குகின்றோம்! என்று சொல்கிறார்கள், என யோசிப்பார்கள்.
வெளிநாடுகளில் அன்று பெரும்பாலும் மாடுவீடுகளில் ( Flat) இல் தான் குடியிருந்தார்கள்.. அதனால் வெளியில் செல்ல படிகளில் இறங்கி வரவேண்டும், அதனால் அவர் இப்பதான் இறங்கினார் என்ற சொற்பதம் வருகிறார் என்பதற்கு ஏற்பட்டது.
அதுபோல் சொல்லாமல் கொள்ளாமல் உங்களிடம் ஒரு விருந்தினர் வந்தால், உடன் ‘அட அடித்துப்போட்டு’ வந்திருக்கலாமே என்பர். அவர்கள் முழிப்பார்கள், ஒருவருக்கு அடித்துப்போட்டு எப்படி அவர் வீட்டு முற்றம் மிதிப்பது என்று!
இப்படியாக எங்கள் தமிழ் இடம் சூழலுக்கு ஏற்ப அமைவாக மாறுகின்றது. அது மட்டுமன்றி வீட்டில் நாம் பிள்ளைகளுக்கு முன்னால் கதைக்கும் பாதித்தமிழ் கவுண்டாமணியும், செந்திலும் வடிவேலும் கதைக்கும், கதையைவிட மேல்.
அப்பா ஒன்றும் சரியாகச் செய்யவில்லை என்றால் அம்மா சொல்வா அப்பாவுக்கு ‘தலைகழண்டு போச்சு’ என்று! இதன் நேரடி அர்த்தம் விபரீதமானது. ஆனால் இதனையும் பிள்ளைகள் பொறுக்கி வைப்பார்கள். அம்மா கோப்பி ஊற்றும் போது சீனிக்குப்பதிலாக உப்பைப் போட்டால் அப்பா சொல்வார் ‘அம்மாவிற்கு வர வர கண்தெரியவில்லை’ என்று.
இப்படி சில பேச்சுக்கள் எங்கு உரசினாலும் தீபற்றும் தீக்குச்சியாவதற்கு, இந்தப் பேச்சுக் காரணமாக அமைந்திருக்கும்.ஆற அமர இருந்து காதலித்த காலத்தில் கதைத்தது போன்று எவரும் இப்போ கதைப்பதில்லை.
ஒரு நாள் விடுமுறை என்றால்,நான் என்ன செய்லாம் என்று கணவனும், தான் என்ன செய்யலாம் என்று மனைவியும், தாம் என்ன செய்யலாம் என்று பிள்ளைகளும் தனித்தனியாக திட்டமிடுவார்கள். விடுமுறை வந்ததும் வீடு, வீடாக இருக்காது. ஒவ்வொருவரும் தாம் நினைத்தது நடக்கவில்லை என்று ஒருவர் மீது ஒருவர் பாய்து வெடித்து சிதறுவார்கள்.
இதில் அப்பா எப்பவுமே உப்படித்தான்! என்று அம்மாவும், இந்த மனிசியோடோ ஒன்றும் செய்ய ஏலாது என்று, கணவனும் வெடி கொழுத்தியபடியே இருக்க, பிள்ளைகளுக்கு தலைவெடிக்கும். தினமும் வெடியாய் வெடிப்பதும் எரிஞ்சு விழுவதுமாக அப்பா இருந்தால், நான் என்ன செய்ய என்று பிள்ளைகளிடம் முறையிடும் தாய்.
எத்தனை வெடி பார்த்தீர்களா? சரி அதில் ஒரு வெடி பற்றி இப்ப சொல்கின்றேன் பாருங்கள் இது உண்மைச்சம்பவம்.
மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை. அதாவது திங்கள் விடுமுறை வந்தாலோ, இல்லை வெள்ளி விடுமுறை வந்தாலோ, குஷிதான்.வருடத்தில் இடை இடையே தலைகாட்டும் இப்படியான தொடர் விடுமுறையை குடும்பமாகப் பலர்கழிப்பார்கள். இம்முறை காட்டுக்குள் சென்று பாபிக்கீயூ போடுவதாக அப்பாவின் திட்டம். அப்பா இறைச்சி, அடுப்பு, கரி, மற்றும் காஸ், அடுப்பு, இப்படி எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு காட்டுக்கு போய்விட்டார்.
அம்மா யாருடையதோ திருமணம் வருகிறது என்று, சட்டைதைக்க கொடுக்கச் சென்றுவிட்டா. ஊரில் இருந்து விடுமுறைக்கு வந்த அக்காவை, வீட்டில் தன் பிள்ளைகளுடன் விட்டுவிட்டு, பிள்ளைகள் நேரத்திற்கு போய் ஆரம்பிக்கட்டும், என்றுவிட்டு போய்விட்டா.
இறைச்சி எல்லாம் மெல் மெல்ல வாட்டத் தொடங்கிவிட்டு, அப்பா வீட்டுக்கு தொலைபேசியில் அழைப்பக் கொடுக்கிறார். பிள்ளைகள் நால்வரும் கோட்டாவியோடு பதில் சொல்கிறார்கள். அம்மா இன்னும் வரவில்லை, வந்ததும் வாறோம் என்று சொல்லிமுடிப்பதற்குள், அப்பா டேய்! அம்மா வரும், நேரம் வரட்டும், அவவிற்கு வரத்தெரியும். நீங்கள்தான் ஆசைப்பட்டனீங்கள் இறைச்சி வாட்ட, பெரியம்மாவை அம்மாவுடன் வரச்சொல்லுங்கள், நீங்கள் உடன் வாங்கோ என்றுவிட்டு போனை வைத்திட்டார் அப்பா.
பெடியங்கள் நால்வரும் வெளிக்கிட்டு வாசிலில் வர, பக்கத்த வீட்டு பையன் அப்பதான் தன்ர மாமா தந்தவர் என்று ஒரு புது ஐபோனைக் காட்டினான்.
ஐயோ தொலைஞ்சுது நேரம். எப்படி 2 மணித்தியாலம் போச்சு என்றே தெரியவில்லை. ஓட்டமும் நடையுமாய் காட்டுக்கு போனார்கள்.. அங்கு இறைச்சி வாட்டி வாட்டி அது கரியாய்ப் போச்சு. 5 நிமிடத்தில் வருவார்கள் என்று, நான் துடிச்சு துடிச்சு செய்ய, நீங்கள் என்று இடியாக் கத்தினார் அப்பா. பக்கத்தில் காஸ் அடுப்பு இருந்தது. அது நெருப்பு போதவில்லை என்றால், பிள்ளைகளுக்கு துரிதமாகச் செய்து கொடுக்க வசதியாக அப்பா செய்த ஒரு ஏற்பாடு.
அப்பாவின் பேச்சு கூடக் கூட! பிள்ளைகள்; நால்வரும் ஒதுக்குபுறமாகச் சென்றனர்.
அம்மா இப்போதான் வீட்டுக்குள் நுழைகிறா! தொலைபேசி அடிக்கிறது. இவங்கள் பிள்ளைகள் தான் எடுக்கிறார் களோ என்று சொல்லிக்கொண்டு ஓடிப்போவதற்குள் அவவின் அக்கா எடுக்கிறா.
போன் எடுத்ததும் அவளுக்கு தலைசுத்தியது. மறுபக்கத்தில் பிள்ளைகள் பெரியம்மா ! அப்பா இஞ்சை, வெடிக் கிறார். எரிஞ்சு, எரிஞ்சு, விழுகிறார், எங்களாலை ஒன்று பண்ணமுடியாது. உடன் வாங்கோ.!,
தலைசுற்றி நிற்கும் அக்கா! தன் தங்கையிடம் உன்ரை மனுஷன், வெடிச்சு, எரிஞ்சு,விழுகிறாராம் பிள்ளைகள் சொல்லிப்போட்டு போனை கட்பண்ணிவிட்டினம் என்றா பதட்டத்தோடு.
பிள்ளைகளால் ஒன்றும் செய் முடியலையாம், என்று கத்துகினம். என்றாள். ஆட என்பிள்ளைகளும் பக்கத்தில் நிக்கினம், அதுகளுக்கும் ஏதுமாச்சோ! என பதட்டத்துடன் எப்படி காஸ் வெடிச்சது என்று தலையில் அடித்தபடி சம்பவ இடத்திற்கு ஓட இறங்கினார்கள்.
மீண்டும் போன் அடித்தது. திகைத்துபோன அவள்,போனை எடுத்தாள்.
என்னப்பா இன்னும் வரவில்லையே நீங்களும், உம்முடைய பிள்ளைகளும், என்று எரிந்துகொண்டார். அப்பா.
நீங்கள் வெடிச்சு எரிகிறியள் என்று பிள்ளைகள் கத்தினார்கள், நாங்கள் இறங்கிவிட்டோம் ஒருக்கால் போனை பிள்ளைகளிடம் கொடுங்க என்று இப்ப அம்மா வெடித்தா !
ஏன் வெடிக்கிறார் என்று அப்பாவை சொன்னீர்கள், நாம் பயந்தே போனோம் என்று ஆவேசமாக பிள்ளைகளைக் கேட்க, பிள்ளைகளோ …
நாம் பிந்தி வந்திட்டோம் என்று அப்பாதான்வ வெடித்து தள்ளுகிறார் என்றான். பற்றாக்குறைக்கு இப்ப அம்மாவும் வெடிக்கிறா என்றான்.
ஆட வீடில் அப்பா வெடிக்கிறார், அம்மா வெடிக்கிறார், தலைகழண்டு போச்சு. எரிஞ்சு விழுகிறார், இவை எல்லாம் இடம் மாறி வரும்போது உயிரே போகும் அல்லவா. பேச்சுத்தமிழ் அதிலும் கொஞ்சம் அக்கறை காட்டுவோம். கிளிப்பிள்ளைகள் வீட்டில் இருக்கிறார்கள் என்பதனை மறந்து விடவேண்டாம்.
![]()
