சமச்சீரான உணவே நல்வாழ்வற்கு உகந்தது இலங்கையர்கள் அனைவருமே உப்புப் பிரியர்களாக இருக்கிறோம்.
டாக்டர் எம்.கே.முருகானந்தன் இலங்கை
“பச்சை மிளகாய் சம்பல் நல்ல ரேஸ்டாக இருக்கு” – சப்புக் கொட்டிக் கொண்டு சாப்பிட்டார் அவர். கடுகு போட்டு தாளித்தபச்சை மிளகாய்த் தேங்காய் சம்பலை வெள்ளைமா இடியப்பத்துடன் சேர்த்து அள்ளி வாயில் போட்டு சுவைத்தார். இவருடன் சேர்ந்து இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த மனைவியும் மகளும் அவர் சொன்னதைக் கேட்டு ஆச்சரியத்துடன் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்தார்கள்.
“இந்த மனுசனுக்கு நாக்கு கெட்டுப் போச்சு” என்றாள் மனைவி. “கடைக்காரன் உப்பை அள்ளிப் போட்டிட்டான் போல
கிடக்கு”என மகள் மனம் நோகாம் கொமன்ட் பண்ணினாள். மொழி மத வேறுபாடுகளைக் கடந்து இலங்கையர்களான நாம் அனைவருமே உப்புப் பிரியர்களாக இருக்கிறோம். தினசரி உட்கொள்ளக் கூடிய உப்பின் அளவானது 3.75 முதல் 5 கிராம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருந்தபோதும் நாங்கள் 12.5 கிராம் வரை உட்கொள்கிறோம்.
இலங்கையில் ஆண்கள் பெண்களைவிட அதிகமாக உப்பை உட்கொள்கிறார்கள் என இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்தலாம். முக்கியமாக 20 முதல் 60 வயதுவரையான ஆண்கள், அவர்கள் நகர்புறத்தைச் சார்ந்தவர்களானாலும் சரி கிராமங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி அதிகமாக உப்பை உள்ளெடுக்கிறார்களாம்.சோற்றுக்கு உப்புப் போட்டுச் சமைப்பதும், கறிகளுக்கு உப்பும் உறைப்பும் செழிக்கப் போடுவதும் எமது தேசத்தின் பழக்கம். அதற்கு மேல் கடையில் வாங்கும் துரித உணவுகள் உப்பைத் தாரளமாகக் கொட்டித் தயாரிக்கப் படுகின்றன.
கிழக்கு ஆசிய நாட்டவர்களான நாம் மேலைத் தேசத்தவர்களை விட அதிகம் உப்பை உண்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. உப்பு என்பது Nacl.அதிலுள்ள சோடியம் (Na) எனும் கனிமம்தான் பாதகங்களுக்கு முக்கிய பங்களிக்கிறது உப்பை அதிகம் உட்கொண்டால் பிரஷர் வரும், ஏற்கனவே பிரஷர் உள்ளவர்களுக்கு மேலும் அதிகரிக்கும் என்பது எல்லோருக்குமே தெரிந்த செய்திதான். அதே நேரம் தினசரி 12 கிராம் உப்பை உட்கொண்டவர் அதனை 3 கிராம் ஆகக் குறைத்தால் பிரசரானது 3.6 முதல் 5.6 ஆல் குறையும் என ஆய்வுகள் சொல்லுகின்றன. ஆனால் அதிக உப்பானது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான சாத்தியத்தையும் அதிகரிக்கும் என்பது பலரும் அறியாத செய்தியாக இருக்கலாம்.
உப்பு அதிகரிப்பதால் பிரஷர் அதிகரிக்கும். அதனாலதான்; மாரடைப்பு பக்கவாதம் ஆகியன வரும் என நீங்கள் எண்ணலாம். ஆனால் பிரஸர் அதிகரிப்பதால் மட்டும் இவ் ஆபத்துக்ள் வருவதில்லை. அதீத உப்பு நேரடியாகவே இரத்தக் குழாய்களிலும், இருதயத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்தி மாரடைப்பையும் பக்கவாதத்தையும் கொண்டு வரும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள். ஆனால் உட்கொள்ளும் உப்பின் அளவை 12 கிராமிலிருந்து 3 கிராம் ஆகக் குறைத்தால் பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் நாலில் ஒரு பங்காலும், இருதய நோய்கள் வருவதற்கான சாத்தியம் மூன்றில் ஒரு பங்காலும் குறையும் என்ற நல்ல செய்தியையும் ஆய்வுகள் கூறுகின்றன.
அதீத உடல் எடைக்கு தவறான உணவு முறைதான் காரணம் என்ற போதும் கூடுதலாக உப்பு உட்கொள்வதும் ஒரு காரணமாகும்;. எண்ணெய். கொழும்பு, இனிப்பு மற்றும் மாப் பொருட்களை அதிகம் உட்கொள்வதே தவறான உணவு
முறை என நாம் பொதுவாகக் கருதினாலும் அதிகமாக உப்பை உட்கொள்வதும் அதில் சேர்த்தியே. உப்பை அதிகம் சேர்த்தால் தாகம் அதிகமாகும். தாகம் அதிகமாவதால் இனிப்புள்ள பானங்களை அடிக்கடி அருந்துவதும் எடை அதிகரிப்புக்கு ஒரு காரணமாகிறது. முக்கியமாக குழந்தைகள் நொறுக்குத் தீனிகளை அடிக்கடி சாப்பிடுகிறார்கள். இவற்றில் உப்பு அதிகம். இதனால் ஏற்படும் தாகத்தைத் தணிக்க மென் பானங்களையும் ,னிப்புள்ள ஜூஸ் வகைகளையம் குடிக்கிறார்கள். இதானால் எடை அதிகரித்து குழந்தைகள் குண்டாகிறார்கள்.
‘இவன் சாப்பிடுறதே இல்லை ஆனால் குண்டாகிறான்’ என அம்மாமார் சொல்வதுண்டு. அதற்கான காரணம் இப்பொழுது புரிகிறது அல்லவா?
இரைப்பை புற்றுநோய், ஓஸ்டியோபொரோசிஸ், சிறுநீரகக் கற்கள், ஆஸ்த்மா பாதிப்பு தீவிரமடைதல் போன்ற பல பிரச்சனைகளுக்கும் உப்பு காரணமாக இருக்கிறது என்பதை மறக்காதீர்கள். ‘இவருக்கு பிரஷர் என்றபடியால் நான் உப்பே போட்டு சமைப்பதில்லை’ என்றார் ஒரு இல்லத்தரசி. அவ்வாறு சமைப்பது நல்லதா கூடாததா என்பதையிட்டு பிறகு பார்க்கலாம். ஆனால் அவள் உப்பு போடாவிட்டாலும் கூட வேறு பல வழிகளில் அதீத உப்பு வேறு உணவுகள் வழியாக அவரையும் எங்களையும் சென்றடையும் என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.இன்று உணவு என்பது முற்று முழுதாக வீட்டு உணவு அல்ல. உணவகங்களில் கிடைக்கும் உணவுகளை அடிக்கடி உட்கொள்ள நேர்கிறது.
அவற்றில் உப்பு அதிகமாகவே இருக்கிறது. அதற்கு மேலாகபதப்படுத்தப்பட்ட உணவுகளையும் உண்ண நேர்கிறது. அவற்றில் பெரும்பாலும் உப்பின் செறிவு அதிகமாகவே இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள், ஹம்பேர்கர் போன்ற இறைச்சி வகைகள், சோஸ் வகைகள், ஊறுகாய், அச்சாறு போன்றவை அதீத உப்பிற்கு நல்ல
உதாரணங்களாகும்.இவற்றில் மட்டுமின்றி நாம் சந்தேகிக்காத பல உணவுகளிலும் உப்பு அதிகமாக இருக்கிறது. பாண், கேக், பிஸ்கற் போன்றவற்றைச் சொல்லலாம்.
பிள்ளைகளும் பெரியவர்களும் விரும்பிச் சாப்பிடும் பொட்டேட்டோ சிப்ஸ் போன்ற வகைகளில் நிறைய உப்பு இருக்கிறது. பக்கற்றில் கிடைக்கும் உருளைக் கிழங்கு பொரியல் மாத்திரமின்றி, மரவள்ளி, பாகற்காய் பொரியல்கள் யாவுமே உப்புப் பண்டங்கள்தான். ஒருவரது தினசரி உப்புத் தேவை ஒரு தேக்கரண்டிக்கு மேற்படக் கூடாது. உப்பு அதிகமுள்ள பதப்படுத்தப்பட்ட மற்றும் கடை உணவுகளை ஒதுக்குங்கள். உப்பைக் குறைப்பது நல்லது. பழவகைளை உணவுகளில் அதிகம் சேருங்கள். சமச்சீரான உணவுகள் (Balanced food) உட்கொள்வது நல்வாழ்வற்கு உகந்தது. சமச்சீரான உணவே நடடவாழ்வுக்கு உகந்தது! நன்றி.தமிழர்தகவல் கனடா.
![]()
