அன்றங்கே ஒரு நாடிருந்தது

0
vm118

மாலினி மாலா.யேர்மனி

அது ஒரு சிட்டுக்குருவிக்காலம். வழமை மாதிரி எல்லாரும் கூடிக்கொண்டு கிளாஸ{க்குப் போகும் போது, வழமை மாதிரி அன்றும் எல்லாம் இயல்பாத்தான் இருந்தது. ரோட்டை அடைச்சுக்கொண்டு சைக்கிள் ஓடினது, வழியில வந்த வாகனங்களிடம் திட்டு வாங்கிக்கொண்டும் அது யாரையோ திட்டினமாதிரி திருத்திக் கொள்ளாமல் ரோட்டைக் குத்தகைக்கு எடுத்தது, வகுப்பில் வாத்தியாரின் முகத்துக்கு முன்னால் படித்து, முதுகுக்கு பின்னால் முசுப்பாத்தி பண்ணினது, பிறகு கிண்டலும் குத்தலுமா வாங்கிக் கட்டிக்கொண்டு வலிக்கவே இல்லாத மாதிரி சிரித்து நடித்து அவரை வெறுப்பேற்றியது, வகுப்புத்தொடங்கி அரைவாசியில் ஹெலி வழிகாட்ட பொம்பர் வட்டமடிச்சது, மாஸ்ரர் உடனே குஞ்சு பொரிச்ச கோழி இறக்கைக்குள்ள அணைக்கிற போல எல்லாரையும் கொண்டு போய் தன்ர வீட்டுப் பெரிய பங்கருக்குள் இறக்கியது. எங்களுக்கு அவசர அவசரமா அம்மாமாரின் பதட்டம் நினைவு வந்தது. எல்லாமும் வழமை போலத்தான் நடந்தது.

மழைபெய்திருந்ததால் பங்கருக்குள் தண்ணி நிண்டது. நாங்கள் அவ்வளவு பேரும் தொம் தொம் எண்டு குதிச்சு தாறுமாறா அதுக்குள்ள ஓடித்திரிய தண்ணி சேறாகிக் கலங்கி நல்ல தடிச்ச பால்க்கோப்பி நிறத்துக்கு வந்திட்டுது. பொம்பர் வழமை மாதிரி கைலாசபிள்ளையார் கோவிலடியையே குறிவைச்சு சுத்திச் சுத்தி குண்டு போட்டதால ஒவ்வொரு குண்டும் தலையில விழுற மாதிரி இருந்தது. ஒவ்வொரு அதிர்வுக்கும் ஜீவி கைகளால் தலையை மூடிக் கொண்டாள்.

“இண்டைக்கு இதுக்குள்ள குண்டு விழுந்து நாங்க கூண்டோட கைலாயம் போகாட்டி அடுத்த தரம் வரேக்க குடை கொண்டு வாடீ” என்று சொன்ன நேரம், ஓம் எண்டு அவள் ஒப்புக்கொண்ட நேரம்.”ஏய் லூசு குண்டு தலையில விழாமல் குடை பிடிக்கச் சொல்றாள் டீ”என அவன் திட்டின நேரம். அப்பவும் அதே அசமந்தமாய் வழமை போல அப்பாவியாய் முகத்தை வைச்சுக் கொண்டு அவள் ஓ……… எண்டு இழுத்த நேரம் எங்களுக்கு இரண்டடி தூரத்தில சேத்துத் தண்ணிக்குள்ள. அவர் மெதுவா நெளிஞ்சார். பிரம்மையோ என்று உத்துப் பார்க்க சேத்தையும் மீறி இடைக்கிடை வழவழப்பாக அவரிட தோல் அடையாளம் தெரிஞ்சது.

அவர் நிக்கிறதை நாங்கள் கண்டதை அவர் அறியக்கூடாது எண்டமாதிரி ஆளாளுக்கு இரகசியமா அவர் நிக்கிறதை சொல்லிக் கொண்டோம். பிறகு நாங்கள் வந்து குதிக்கும் போதே இங்குதான் இருந்தாரா என கேள்வி கேட்டு இருந்துதானிருப்பார் எண்டு பதிலும் சொல்லிக்கொண்டம். பிறகு அவரை உழக்கியிருப்பமோ எண்ட சந்தேகமும் வந்தது. உழக்கியிருந்தால் கடிச்சிருப்பார் என்று அவள் சொன்னப்பிறகு ஓடேக்க குதிக்கேக்க அவதியில ஈக்கு குத்தினது கல்லு நெருடினது ,, தடி கீறினது, காலில கால் மிதிபட்டது எல்லாம் எல்லாருக்கும் பாம்பு கொத்தி நோகிற மாதிரி இருந்தது. அவருக்கு பெரிய இடம் விட்டு மூலையில நெருக்கிக்கொண்டு நிண்டும் சேத்தை வழிச்சு வழிச்சு காலில கடிச்ச அடையாளம் இருக்கோ எண்டு பார்த்துக் கொண்டம்.

பாம்பு கடிச்சா என்னென்ன மாற்ற அறிகுறிகளை உடம்பு வெளிக்காட்டும் என்று பாம்புக்குத் கேக்காத தொனியில் ஆராஞ்சம். அப்பத்தான் “எனக்கு தொண்டையை வரட்டுற மாதிரி இருக்கு” எண்டு பிரியா சொன்னாள். பிறகு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அறிகுறி உணர்வதாக சொல்லிக்கொண்டம். எப்படியாவது பதுங்கு குழியிலிருந்து உடனேயே வெளியேற வேண்டும் என்று பாம்புக்கு கேக்காமல் இரகசியம் கதைச்சு தீர்மானமானோம். பொம்பரும் ஹெலியும் சுத்திறதை சுத்தமா மறந்து போனம். வெளியேறத் தொடங்கும் நேரம் தலையில் விழுந்தது போல அதிர்வோட பக்கத்தில் எங்கோ குண்டுவிழ ஏறத்தொடக்கின எல்லாரும் சறுக்கிக் கொண்டு சேத்தில விழுந்தம்.

“பாம்போட என்னால இருக்கேலாது” எண்டு வழக்கம் போல சபைகுழப்பி ஆரம்பிச்சாள். “யார்டி இப்ப உனக்குப் பாம்பை கட்டி வைச்சது ” என்று ஒருவனும் ,”இருக்கேலாட்டி டிவோஸ் பண்ணடி” என்று ஒருத்தியும் பாம்புக்கும் பொம்பருக்கும் கேட்கக் கூடாது எண்டமாதிரி குசுகுசுவெண்டு சீண்ட,”இந்த எருமையளோட இருக்க மாட்டன்” எண்டு அவள் கிசுகிசுப்பா கோபப்பட,வெளியேறுவது என்று ஒரு பகுதியும், உள்ளே இருப்பதென்று ஒரு பகுதியுமாக அவசரமா இரண்டு கட்சி வகுத்துக் கொண்டோம்.

வெளியேறினால் பாம்பு கொத்தாமல் தப்பலாம் எண்டது ஒரு கட்சித் தீர்மானம் . இவ்வளவு பேரும் ஒண்டா வெளியால வந்ததை கண்டால் பொம்பர் அடிச்சு கூண்டோட கைலாசம் எண்டது மறுகட்சித் தீர்மானம்.ஒருமாதிரி ரெண்டு பகுதியும் மோதிக்கொண்டிருந்த போது அவள் பேச்சுவார்த்த இடைத்தரகராகி”பொம்பர் போகும் வரைக்கும் இதுக்குள்ள இருக்கிறது தான் நல்லது பாம்பு கொத்திறதானாலும் ஒருத்தர் ரெண்டு பேருக்குத்தான் கொத்தும்” எண்டு சொல்ல “யாருக்கு?””பொறு கேட்டுச் சொல்லுறன்”

“அதேன் ஒருத்தர் ரெண்டு பேருக்கு மட்டும் கொத்தும்?””பாம்பென்ன நுள்ளுப்பிராண்டி கிள்ளுப்பிராண்டியே விளையாடுது எல்லாருக்கும் வஞ்சகமில்லாமல் கொத்த?” என்பது போன்ற பலவித காரசாரமான விவாதங்களுக்கு நடுவில் அவன் தனியாக பாம்போடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தான். “இஞ்ச பாரும் ஐசே. இந்த பங்கரை விட்டு வெளியால போனால் தமிழன் எண்ட படியால் எக்கட தலையில தான் பொம்பர் காரன் குண்டு போடுவான் உமக்கும். அவனுக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை. அதால உமக்குப் போடமாட்டான். அதால இப்ப நீர் வெளியால போம். நாங்க இங்க பதுங்கியிருக்கிறம். அவன் போன உடன நாங்க வெளியால போறம் நீர் வந்து பதுங்கியிருந்து ஆரையாவது பதம் பாரும். டீல் ஓகே தானே ” என்று.

பாம்புக்கு எங்களை கடிச்சு தன்னை தாழ்த்த விருப்பமில்லையோ அல்லது எங்களைப்பார்த்தே பைத்தியம் வந்திட்டுதோ என்னவோ அன்று யாரையும் கொத்தவில்லை. பொம்பர் சன்னதமாடி முடித்து திரும்பி வருவதற்குள் அவசரமாக வீடுகளுக்கு வந்து விட்டோம். வீடுகளுக்கு வந்த பின் தான் இழப்புக்கள் பற்றிய செய்திகள் அறியலாம். இழப்புக்களே வாழ்வாகிப் போன இனத்துக்கு அதுவொன்றும் அவசரச் செய்தி அல்லவே. அதனால நாங்களும் உடன் அது பற்றி ஆராய்வதில்லை. வாழும் கடைசிக் கணம் வரை நடப்பவற்றை ரசித்துக் கொண்டே கடக்க வேண்டும் என்பது மட்டுமே அப்போது மனதில் இருந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அன்று காலடியிலும் தலைக்கு மேலும் மரணம் காத்திருக்க உயிர்வாழ்தல் அந்தரத்தில் தொங்கிய நேரத்திலும் சிரித்துக் கொண்டிருந்தோமெனில் அதற்கு ஒரே காரணம் மனதுக்கு நெருக்கமானவர்கள் அருகாமையில் அல்லது அவர்களோடு சந்திப்பது மரணம் எனினும் கூட இறுதி நிமிடத்திலும்வாழ்க்கை வாழப்பட்டுக் கொண்டிருக்க உதடுகளில் புன்னகையே உறைந்திருக்கும். (உங்களை நினைவு கூர்வதற்காய் ஒரு தினம் எனில் எல்லா நாட்களும் எனக்கு நண்பர்கள் தினமே)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *