எது பெருமை எது சிறுமை அந்தரத்தில் பறக்குதுகள்!
- மாதவி. (யேர்மனி)
என்ர மனுசன் எனக்கு சமையலுக்கு, எதுவும் உதவமாட்டார். சோறு கறி எல்லாம் போட்டு மேசையில், வைத்தால் மட்டுமே சாப்பாட்டில் கைவைப்பார். தண்ணியும் விக்கினால் என்று முன் எச்சரிக்கையாக எடுத்து பக்கத்தில் வைக்கவேண்டும்.
அது மட்டுமல்ல, வாய்திறந்து மனுசன் என்ன இன்னும் போடுறது என்றும் கேட்காது. சாப்பிட்டால் பிறகு கையை மட்டும் எழுந்துபோய்க் கழுவுவார். சாப்பாடு நல்லது, கெட்டது எல்லாம், அவர் கழுவாத தட்டைப்பார்த்து புரிந்து கொள்ளவேண்டும்.
வேலையும், வீடும். கடைக்கும் போக என்ர மனுசனுக்கு தெரியாது. நான் வேலையால் வரைக்கை, கொஞ்சம் பிந்தினால், மனுசன் தண்ணியும் குடிக்காது.
இப்ப நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். ஒரு பெண் தன் கணவனைப்பற்றி தாயிடம், அல்லது சிநேகிதியிடம், முறைப்பாடு சொல்கிறார் என்றா?
இல்லவே இல்லை. இரண்டு நடுத்தர வயதுப் பெண்கள் தமது கணவன் மாரின் குணங்களை பெருமையாக சொல்லிக்கொண்டு பறக்கின்றார்கள். பறக்கின்றார்கள் என்றால் நான் வந்த விமானத்தில். அருகே இருந்த சீட்டில்தான் அந்த இருவரும் இருந்தார்கள்.
என்னைத் திரும்பி பார்த்தார்கள், மொட்டந்தலையும், தாடியும் அவர்களுக்கு என்னை ஒரு கிந்திக்காரன் அல்லது வேறு ஒரு மொழி பேசும் இந்தியன் என்றே எண்ண வைத்திருக்க வேண்டும்.
அத்தோடு நான் பறந்த விமானம் இங்கிலாந்தில் மஞ்சற்றர் இடத்திற்கு போகிறது. அங்கு தடுக்கி விழுந்தால் பல மொழி பேசும், இந்தியர்கள்தான். நான் காதை மட்டும் திறந்து வைத்துவிட்டு கண்ணை முடிக்கொண்டேன்.
இப்போ மற்றப்பெண்,என்ர அவரும் இருந்த இடத்தைவிட்டு எழும்பமாட்டார். நூறுதரம் என்ர பேர் சொல்லிக்கூப்பிடுவார். அவருக்கு நான் கையுக்கை நிற்க வேண்டும்.
பிள்ளையள் என்ன செய்யினம். மற்றப்பெண் அடுத்த கட்டத்திற்கு நகருகிறாள்.
அட எனக்கு பொம்புளப்பிள்ளை இல்லை.
அட எனக்கும்தான் என்றாள் மற்றவள்.
அவன் கல்யாணம் கட்டி இப்ப ஒரு வருஷம். நான் அவனிட்டை போனால் அவன் ஹாலுக்கு வாறதே இல்லை.
மனிசியோட குசினிக்கை ஓரே கதை. கதைச்சு கதைச்சு வெங்காயம் உரிக்கிறான். கோழிவெட்டுறான். கோப்பை கழுவிறான் . மருமகள் அடுப்பில் ஏற்றுவதும், இறக்கிறதும். சமையல் முடிந்ததும் இருவரும் சாப்பாட்டை போட்டுக்கொண்டு கதிரையில் இருந்து ரி. வி பார்த்தபடி சாப்பிடுகினம்.
முடிந்ததும் சேர்ந்துபோய் கழுவிகினம். சமைக்கும் போதும், கழுவி முடிக்கும் போதும் இடை இடையே இடையைப்பிடித்து, திருகுகினம்.
சாச்சான பல்பு போல, போல மீண்டும் பிரகாசமாய் சிரிச்சு சிரிச்சு, பின் கழுவுகினம். கோப்பையை மருமகள் எடுத்துக்கொடுக்க துடைத்து துடைத்து அடுகுகிறான்.
என்ர மகன் கதையை கேழுங்கோவேன், என ஒரு ஆள் கதைமுடிக்கும் முன்னமே மரதன் ஓட்டம் போல் மற்றவ தொடங்கி விட்டா.
தங்கடை மனுஷன்மார் பற்றிக்கதைக்கேக்கை இருவரின் முகத்திலும் இருந்த வெளிச்சம் இப்ப இல்லை. முதல் தன்ர மனுஷன்மார் பற்றி சொன்னது முறைப்பாடு அல்ல. அது ஒரு வகைப் பெருமையாகவே அவர்களுக்கு இருந்தது.
இப்ப மருமகளின் மனுஷன்கள் (மகன்கள்) பற்றிச் சொன்னது அப்படி அல்ல. அது ஒரு முறைப்பாடு.
விமானப் பணிப்பெண் குப்பையிருந்தால் போடும்படி ஒர் பையை நீட்டுகிறாள். அவர்கள்! குப்பை இல்லை என்று அவளுக்கு பை சொல்லுகினம். இவ்வளவும் கதைச்சது குப்பைதானே. ஆனால் எறிய மனம் இல்லைப்போலும்.
இரண்டு பேரும் விமானம் இறங்கியதும் வெளியில் வந்தால். அவர்களைக் கூட்டவந்தது அவர்களுடைய மனுஷன்கள் அல்ல. அவர்களுடைய மகன்களும், மருகள்களுமே.
எனக்கு என்னமோ அவர்களுடைய மனுசன்களை விட அவர்களுடைய மகன் மேல் என்றே எண்ணத் தோன்றியது.
எனக்கும் குசும்பு குறையவில்லை, நானும் தமிழ் என்று காட்டப் போனை மகனுக்கு எடுத்தேன்.
‘அவசரம் இல்லையடா மருமகளுக்கு இரவுச் சாப்பாட்டுக்கு உதவிபண்ணிட்டு ஆறுதலாய் வடா”. என்றேன்.
அப்பா நான் சமைக்கிறேன். மருமகள் தான் உங்களைக் கூட்ட வாறா என்றான்.
![]()
