தள்ளிப்போகும் திருமணங்களும் தடுமாறும் பெற்றோரும்

0
vm244

முனைவர் பால. சிவகடாட்சம் (கனடா)

தெற்காசியப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உரிய வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டியது தமது மிகப்பெரிய பொறுப்பு என்று நம்புகிறார்கள். இது அவர்கள் மிக நீண்டகாலமாக கண்டிப்புடன் பேணப்பட்டு வந்த வாழ்க்கைமுறை. இந்த நோக்கத்துக்காகவே தமது வாழ்நாள் சம்பாத்தியத்தைச் சேமித்துவைத்தும் அதன்பொருட்டு தமது சொந்த விருப்புக்களைப் புறந்தள்ளியும் வாழப் பழக்கப்பட்டு விட்டவர்கள். இந்தப் பாரம்பரியப் பின்னணியில் வந்தவர்களின் சந்ததியினர் இன்று பொருளாதாரத்தில் முன்னேற்ற மடைந்துள்ள மேற்குலக நாடுகளில் புலம்பெயர் வாழ்வைத் தேர்ந்தெடுத்த பின்னர் தமது பிள்ளைகளின் திருமணம் தொடர்பாகப் பல்வேறுவகையான ஏமாற்றங்களையும் மன உளைச்சல்களையும் சந்திக்க நேரிடுகின்றது. தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைத்து, அவர்களும் தமக்கென ஒரு குடும்பத்தை உருவாக்குவதைப் பார்க்கவேண்டும் என்ற தமது ஆசையை உரியகாலத்தில் நிறைவேற்றுவதில் இங்குள்ள பெற்றோருக்குப் பல தடைகள் உள்ளன.

தலைமுறை இடைவெளி

ஒரு இளம்பெண்ணுக்கோ ஆணுக்கோ திருமணம் செய்யவேண்டிய வயது வந்துவிட்டது என்பதை உணர்ந்தவுடன் அவர்களின் பெற்றோர் மட்டுமன்றி மாமன் மாமி பெரியப்பா சித்தப்பா அண்ணன் தம்பி மற்றும் உறவினர் நண்பர் என்று பலதரப்பட்ட சொந்த பந்தங்களும் பொருத்தமான இணையைத் தேடிக் களத்தில் இறங்கிவிடுவர். இவர்களுடன் கூடவே ஊர் ஊராகத் திரிந்து தமக்குத் தெரிந்த மணமகனுக்கு அல்லது மணமகளுக்குப் பொருந்தக்கூடிய இளைஞர் யுவதிகளைக் கண்டறிந்து சாதகக் குறிப்புகளுடன் வீடு வீடாக ஏறி இறங்கும் கல்யாணத்தரகர்களுக்கும் ஊரில் பஞ்சம் இல்லை. பெரும்பாலும் மாப்பிள்ளை வீட்டாரும் பெண்வீட்டாரும் ஏதோ ஒரு வழியில் ஒருவரை ஒருவர் அறிந்து வைத்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

அப்போதெல்லாம் காதல் திருமணமே இல்லை என்று சொல்வதற்கில்லை. இருந்தது. ஆனால் அபூர்வம்.

ஞாயும் யாயும் யாராகியரோ
எந்தையும் நிந்தையும் எம்முறைக் கேளிர்
அன்புடை நெஞ்சம் தாம் கலந்ததுவே

என்னும் சங்கத்தமிழ்ப் பாடலைப் போன்று கண்டவுடன் காதல் கொள்வோர் மிக அரிது. அதுவும் அக்காதல் திருமணத்தில் முடிவதும் அபூர்வம்.

பெற்றோர் பேசிமுடித்துவைக்கும் கல்யாணமே பெருவழக்காக இருந்த அக்காலப்பகுதியில் இளம்பெண்கள் இப்போது போல் தமது துணையைத் தாமே தேடிப் பெற்றுக்கொள்ளவேண்டிய சங்கடமான சூழலில் இருந்து தப்பிவிட்டார்கள் என்றுதான் கூறவேண்டும். ஒரு சிலருக்குத் தாம் விரும்பிய ஆணையோ பெண்ணையோ அடைய முடியதுபோன ஏக்கம் உள்மனதில் இருக்கத்தான் செய்யும். எனினும் திருமணம் முற்றானதும் பழைய ஆசாபாசங்கள் எல்லாம் மறந்து போய்விடும். அதெல்லாம் ஒரு பெரியவிடயமாகவே இருக்காது. சிலநேரங்களில் இதற்காகவா இவ்வளவு நாள் சங்கடப்பட்டோம் என்றுகூட எண்ணத் தோன்றும்.

இன்றைய காலகட்டத்தில் இவை எல்லாமே மாறிவிட்டன. திருமணம் செய்து கொள்வது என்பது ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட உரிமையும் தெரிவும் ஆகும் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளத் துணிந்து விட்டார்கள். திருமண வயதுக்கு வந்துவிட்டவர்கள் தாமாகவே தமக்குப் பொருத்தமான துணையை எப்போதும் எங்கேயும் தேடிப்பெற்றுக் கொள்ளலாம் என்னும் நிலைதான் இன்று உள்ளது. மனதுக்கு பிடித்த துணை கிடைத்தால் திருமணம் கிடைக்காவிடில் துறவறம் என்றாகிவிட்டது.

இந்த நிலை இன்றைக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரேயே மேலைநாடுகளில் உருவாகிவிட்டது. இவர்களுட் பலர் குறிப்பாக ஆண்கள் தமது வருங்காலத் துணையுடன் மிகமிக நெருங்கிப் பழகிய பின்னரேயே திருமணம் செய்வோம் என்று அடம்பிடிப்பார்கள். பெண் சம்மதிக்காவிட்டால் தொடர்பு முறிந்துவிடும். இன்றைய தலைமுறை இவற்றையெல்லாம் மெல்ல மெல்ல அறிந்து கொண்டு வருகின்றது. பெற்றோரின் எதிர்பார்ப்புகளுக்கும் வெளி உலக நிதர்சனத்துக்கும் இடையில் நின்று போராடி வருகின்றார்கள் இன்றைய இளைய தலைமுறையினர்.

பெற்றோர் அல்லது உறவினர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அறியப்படாத அல்லது சாதாரணமான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படாத புலம்பெயர் சூழலில் வளரும் இரண்டாவது தலைமுறை, தங்கள் பெற்றோரால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாழ்க்கைத் துணையை மறுப்பு ஏதும் இன்றி ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இந்தத் தலைமுறை இடைவெளிக்கு அப்பால், மேற்குலக நாடுகளில் வாழும் தெற்காசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட பெற்றோர்களின் பிள்ளைகள் தமது திருமணத்தைப் பின்போடுவதற்கு வேறும் பல காரணிகள் உள்ளன.

சமூக ஊடகங்கள்

இளந்தலைமுறையினர் தங்கள் பெற்றோரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. திருமணத்துக்கு முன்னர் “டேற்றிங்” (னுயவiபெ) எனப்படும் “பேசிப் பழகிப் பொருத்தம் பார்க்கும்” தற்கால வழக்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட சூழலில் இளைஞர் யுவதிகளுக்கு சமூக ஊடகங்கள் வாயிலாக பரந்துபட்ட தனி மனிதத் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முடிகின்றது. இந்த வசதி உடனடியாகத் திருமணத்தை நோக்கிச் செல்லாமல் நீண்ட காலத்துக்கு ஆணும் பெண்ணும் பேசவும் பழகவும் இடமளிக்கின்றது. இந்த வாய்ப்புக்கள் இருக்கும்போது ஓர் இளம் பெண்ணுக்கோ ஆணுக்கோ தனக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அவசரம் காட்டவேண்டிய அவசியம் இல்லாமல் போகின்றது.

பெண்ணியக்கோட்பாடுகளின் எழுச்சி

பெண்களுக்கான சமத்துவம், சுதந்திரம் பற்றிய பெண்ணியக் கருத்துக்கள் வேகமாக வளர்ந்து வரும் காலம் இது. சமூகத்தில் பெண்களின் முக்கியத்துவமும் பங்களிப்பும் அதிகரித்து வருகின்றது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுதந்திர வாழ்வுக்கான பெருவிருப்பம் காரணமாகப் பல பெண்கள் தமது திருமணத்தைத் தாமதப்படுத்த விரும்புகிறார்கள். அவர்கள் முந்தைய தலைமுறைகளை விட வாழ்வாதாரம் அல்லது சமூக அங்கீகாரத்துக்காகத் திருமண பந்தத்தை நம்பியிருப்பது குறைவு. தொடரும்.(நன்றி.தமிழர்தகவல்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *