யார் பெற்ற பிள்ளையோ பார் செய்யும் வேலையை!
மாதவி. யேர்மனி
இலங்கையில் கடந்த மாதம் இடம் பெற்ற சூறாவளி, பெருமழை, வெள்ளம், மண்சரிவு என அடுக்கடுக்காக இடம்பெற்ற அனர்த்தங்கள் சொல்லி அடங்காதவை.
அங்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலரும் இந்த அனர்த்தத்தை நேரில் கண்டும் பாதிக்கப்பட்டிருந்தனர். சாதாரணமாக மனிதர்கள் இப்படியான சூழலில் தங்கள் சொந்த நாட்டுக்கு எப்படிப் பாதுகாப்பாகவும் விரைவாகவும் செல்லலாம் என்பதை மட்டும் பார்ப்பார்கள். அரசாங்கமும் தன் நாட்டின் பெருந்தன்மையை பேணி, முதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக அவரவர் நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.
ஆனால் இங்கு, பாதுகாப்பாக ஓடித் தப்பாமல், இந்த இளம் சுற்றுலாப் பயணிகள் இன்னலுக்கு உள்ளான மக்களோடு மக்களாக நின்று, கழிவுநீர் செல்லத் தடையாக இருந்த சேற்றை அள்ளி தண்ணீர் தடையின்றி ஓட உதவி செய்தார்கள்.
வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும், நாங்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை அல்லது வேறு நாடுகளுக்கு விடுமுறை கழிக்கச் செல்லும் நமக்கும் ஒரு வித்தியாசம் உண்டு.
அவர்கள் எந்த நாட்டுக்குப் போகிறார்களோ அந்த நாட்டவர்களின் ஆடை, உணவு, சாதாரண விடுதி ஆகியவற்றோடு அவ்வூர் மக்களாகவே கலந்து வாழ்ந்து மகிழ்வார்கள்.
ஆனால் நாம் விமானத்திலிருந்து இறங்கியதும், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாட்டுடன் ஒப்பிட்டு குறை கூறி ஒப்பாரிவைக்கத் தொடங்கிவிடுவோம்.
“இது என்ன மலசலக் கூடம்? கன்றாவியா இருக்கே! இதுக்குள்ள மனிதன் போவானா?” என்று முணுமுணுத்தபடி, உள்ளே சென்று ,சிறுநீர் கழிக்காது இன்னும் வெளியே நின்று அடித்து மேலும் கன்றாவியாக்கிவிட்டு வருவோம்.
உணவு மேசையில் நீர் தெறித்திருந்தால், “அப்பப்பா!” என்று முகம் சுழிப்போம்; ஏதோ காணாத பெரிய அசிங்கம் போல. ஆனால் அந்த அசிங்கத்தை விட, அப்போ எங்கள் முகமே அதிகமாக அசிங்கமாக இருக்கும்.
யாரோ பெற்ற பிள்ளைகள் இந்த நாட்டிற்கு சுற்றுலா வந்த இடத்தில் இடம்பெற்ற மண்சரிவு, வெள்ளம் ஏற்பட்ட இடங்களில் மக்களோடு மக்களாக நின்று, அசிங்கம் பார்க்காமல் வாய்க்கால் சேற்றை அள்ளிச் சுத்தம் செய்ய உதவிய இவர்களின் உள்ளம் எவ்வளவு அழகானது!
![]()
