சுவிஸ் தூதரகத்தின் அழைப்பும்தமிழ் தலைவர்களின் போக்கும்

0
vm389

தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் காலத்துக்கு காலம் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளின் தலைவர்கள் கரிசனை கொண்டு செயற்படுவதாக காண்பித்துவந்தாலும் அதற்கான சரியான பாதையை தேர்வு செய்து ஓரணியாக பயணிப்பதில் பிளவுபட்டு நின்றதே வரலாறு. அந்த கறைபடிந்த வரலாறு இன்றும் தொடர்வதே பெரும் சோகமாகும். இலட்சக்கணக்கான உயிர்களை இழந்த பின்னரும் ; கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்தபின்னரும்; ஆயிரக்கணக்கான மக்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் பல ஆயிரக்கணக்கான உறவுகள் தேடியலைந்துகொண்டிருக்கும் ஒரு சமூகத்தின் தலைவர்கள் தங்களை இன்னும் திருத்திக்கொள்ளவில்லை என்பது பெரும் சாபக்கேடாகும்.

77 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சமூகம் தன்னுடைய இருப்புக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடிவரும் சூழலில், அந்த இனம் எந்தளவுக்கு பக்குவப்பட்டிருக்கவேண்டுமென்பது வரலாற்று சம்பவங்கள் பல எம்முன் இருக்கின்றன.ஆனால்,அந்த சமூகம் மீண்டும் மீண்டும் பிற்போக்குத்தனமான சிந்தனையை நாடுவது என்பது அல்லது மீண்டும் மீண்டும் தவறுகளை செய்வது என்பது அந்த இனம் உண்மையிலேயே இதுவரை காலமும் போராடிய போராட்டங்களில் சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவே அமையும்.

தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் பிராந்திய – சர்வதேச அரசுகளின் ஈடுபாடும் கரிசனையும் நிலையானதாகவே காணப்பட்டு வந்திருக்கிறது- வருகின்றது. இந்தியா, நோர்வே வரிசையில் 2009 யுத்த மௌனிப்புக்கு பின்னர் சுவிற்சர்லாந்தும் தமிழ் மக்களுடைய விவகாரத்தில் ஏதோவொரு வகையில் பின்னிப்பிணைந்ததாகவே இருந்து வருகிறது. குறிப்பாக ஜெனீவா அமர்வு என்பது 2009 இற்கு பின்னர் ஈழத்தமிழ் மக்களுடன் பின்னிப்பிணைந்ததாகவே இருந்துவருகிறது.குறிப்பாக 2009 இற்கு பின்னர் தமிழ் மக்கள் ஜெனீவா என்ற நாட்டை உச்சரித்ததே அதிகம்.இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் தமிழ்த்தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு அண்மையில் ஒரு அழைப்பை விடுத்திருந்தது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்புக்கள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு கொண்டுவரும் நோக்கில் இந்த அழைப்பை சுவிட்ஸர்லாந்து தூதரகம் விடுத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.ஆனால்,இந்த சந்திப்பு தற்சமயம் பிற்போடப்பட்டிருக்கிறது.

இலங்கை – சுவிட்ஸர்லாந்து நாடாளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசின் ஏற்பாட்டில் அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு தெளிவூட்டும் வகையிலான செயலமர்வு ஓன்று கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றது.அந்தச் செயலமர்வில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் முனீர் முளப்பர், நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான நிஹால் அபேசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திம ஹெட்டியாராச்சி, நிலாந்தி கொட்டஹச்சி, சமன்மலி குணசிங்க ஆகியோரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.பத்மா மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் கலந்துகொண்டிருந்தனர். அந்தச் செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி (பெடரல்) முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புகளில் தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன. இக்கலந்துரையாடல்களின் போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியம் என்ற விடயம் சுவிஸ் தூதரகத்திடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அதனடிப்படையில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரனையும் அழைத்து குறித்த செயலமர்வு தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டிருந்த நிலையில்தான் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஒருங்கிணைப்பில் ஒரு கூட்டு சந்திப்பை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் உடன்பட்டதை அடுத்து, அதனை பெப்ரவரி 19 ஆம் திகதி கொழும்பில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இலங்கைத் தமிழரசுக்கட்சி சார்பில் எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சாணக்கியன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பம் மற்றும் கட்சி தீர்மானிக்கும் பிறிதொருவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் கூட்டணி தீர்மானிக்கும் பிறிதொருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால்,குறித்த சந்திப்பு தற்சமயம் திகதி அறிவிக்கப்படாது பிற்போடப்பட்டிருக்கிறது. காரணம், குறித்த கூட்டத்தில் பங்குபற்றவிருந்த அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் தாமும் உள்ளடங்கிய தமிழ்த் தேசிய பேரவையின் பெயரில் அதேபோன்ற கூட்டம் ஒன்றை 19 ஆம் திகதிக்கு முன்னர் அதாவது பெப்ரவரி 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு முயற்சி எடுத்த பின்னணியில், தன்னுடைய இந்த சந்திப்பை இடைநிறுத்தம் செய்வதாக சுவிஸ் தூதரகம் அறிவித்திருந்தது.ஆனாலும் இந்த சந்திப்பு நடைபெறாமல் போனதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தான் காரணம் என சுமந்திரனும் சுமந்திரன் தான் மேற்படி சந்திப்பை நிறுத்தியிருக்கிறார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தெருச்சண்டை போட்டிருந்தார்கள்.

இராஜதந்திர ரீதியில் நகர்த்தவேண்டிய ஒரு சந்திப்பை தெருக்கூத்தாக மாற்றிய தலைவர்கள் தான் இன்று ஈழத்தமிழர்களின் தலைவர்களாக இருக்கிறார்கள் என்பது எத்தனை கேலிக்கூத்தாகும்.2009 இற்கு பின்னர் தமிழ்த்தேசிய தலைவர்கள் தேர்தல் அரசியலுக்காக தங்களை தயார்படுத்துவதில் ஈடுபட்டார்களே தவிர,நொந்துபோன இனத்துக்கு ஒரு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கு ஆத்மார்த்த ரீதியாக பணியாற்றவில்லை என்பது உலகம் அறிந்த உண்மை.

இராஜதந்திரம் இல்லை;சமூக பொறுப்பு இல்லை; இன விடுதலைக்கான வேலைத்திட்டங்கள் இல்லை;இவ்வாறு எந்த அடிப்படை தேவைகளும் இல்லாமல் வெறுமனே தேர்தல்களை நோக்கமாக கொண்டதாகவும் அதற்கான தயார்படுத்தல்களுக்காக பிரிந்து நின்றுகொண்டு தெருச்சண்டை ரவுடிகளை போல் ஒருவரை ஒருவர் விமரிசிப்பதுவுமே கடந்த 17 ஆண்டு காலமாக ஈழத்தமிழருடைய தலைமைகள் என்று கூறிக்கொண்டவர்கள் செய்த சாதனையாகும்.

இத்தனை அழிவுகளை சந்தித்தும் -ஒரு பொறுப்புக்கூறலுக்காக காத்திருக்கும் நாங்கள் (தமிழர்கள்) இன்றுவரை எந்தவொரு நாட்டோடும் நெருக்கமாக செல்ல முடியாததற்கு எண்கள் மத்தியில் இருக்கின்ற இராஜதந்திரமற்ற-வெறுமையான அரசியல் அறிவின்மையே பிரதான காரணமாகும்.இந்தியா என்று கூறுகிறோம்.ஆனால் இந்தியாவுடன் நாங்கள் எந்தளவுக்கு நெருக்கமாக செயற்படுகிறோம் என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.அமெரிக்கா என்கிறோம்; ஜெனீவா என்கிறோம், இங்கிலாந்து என்கிறோம்; கனடா என்கிறோம். ஆனால்,இவர்களுடன் எந்தளவுக்கு எங்களுடைய உறவு-நகர்வு-இராஜதந்திர நட்பு இருக்கிறது என்று எந்தவொரு தலைவராலும் பொதுமேடையில் வந்து பேச முடியுமா?

இல்லை,தமிழர்களுக்கு இதுதான் தீர்வு என்று ஒட்டுமொத்தமாக தமிழ் தலைமைகள் ஒரே குரலில் ஒரு சர்வதேச நாட்டுடன் பேசும் சூழல் இருக்கிறதா?இல்லை.சுவிஸ் தூதரகத்தின் அழைப்பை குழப்பியதிலும் இந்த முரண்பட்ட அல்லது ஒருமித்த நிலைப்பாடு இல்லாததே பிரதான காரணமாக இருக்கிறது.ஆகவே முதலில், தமிழர்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதில் தமிழ் தேசிய தலைமைகள் ஒரு தெளிவுக்கு வரவேண்டும்.அந்த தெளிவு தான் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு பாதையை திறந்து வைக்கும். வெறுமனே அவர்களுடன் பேசுகிறோம்; இவர்களுடன் பேசுகிறோம்; அந்த நாடு எங்களுக்கு அனுசரணை தருவார்கள் என்று வாய்ச்சவடால் விட்டு ஒரு சமூகத்தின் -ஒரு இனத்தின் தேச விடுதலைக்கான கனவை குழிதோண்டி பறிப்பதை நிறுத்திவிட்டு இனத்துக்கான அரசியலை முன்னெடுக்கும் தலைவர்களாக இவர்கள் மாறாதவரை அல்லது அவ்வாறான தலைவர்களை ஈழத்தமிழர்கள் இனம்காணாதவரை ஈழத்தமிழினம் இன்னும் பல நூறாண்டுகள் வரை தங்களது அபிலாஷைகளுக்காக காத்திருக்கத்தான் வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *