பெண்- உடல் கடந்த உயிர்
உடல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உயிர் பயணிப்பதற்கான
ஒரு வாகனம் மட்டுமே! அதுவே நமது இலக்கு அல்ல.
-தீபா ஸ்ரீதரன் – தைவான்
சமூகம் பெண்ணை ஒரு சுதந்திரமான ஆளுமையாகப் பார்க்காமல், ஏன் ஒரு விவாதக்களமாக ஃ பேசு பொருளாக (Matter of subject) மட்டுமே பார்க்கிறது?
எந்த ஓர் உயிரினத்தின் இருத்தலும் அதன் இனப்பெருக்கத் திறனைச் சார்ந்தே அமைகிறது. இந்தப் பிரபஞ்சத்தின் ஆதி விதியே பாலியல் இனப்பெருக்கத்தைத் தான் ஆதரித்தது. மரபணுக்களில் ஏற்படும் இந்தத் தொடர் கலப்புதான், தட்பவெப்ப மாற்றங்களையும் வாழ்வியல் அழுத்தங்களையும் தாங்கி ஓர் இனம் தழைத்தோங்க வழிவகுத்தது. இதுவே ஆண், பெண் என்ற இருவேறு உயிரியல் வெளிப்பாடுகளின் தொடக்கம். மனிதக் குலம் தன்னை ஓர் இனமாகப் பல்கிப் பெருக்கிக் கொண்டிருந்த அந்த ஆதி காலத்தில், மனித இனத்தின் பரப்பளவு மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்துவது மட்டுமே ஒரே இலக்காக இருந்தது. அந்தச் சூழலில், பெண்ணின் உடல் என்பது வெறும் ‘உயிரியல் தேவை’ (டீழைடழபiஉயட நெஉநளளவைல) சார்ந்த ஒரு கருவியாக மட்டுமே பார்க்கப்பட்டது. அந்தத் தருணத்தில், அது ஓர் உயிரியல் கட்டாயமாகவும் இருந்தது என்று எடுத்துக்கொள்ளலாம்.
பின் மனித இனம் தனது எண்ணிக்கையைப் பெருக்கி, ஒரு பரந்து விரிந்த சமூகமாக நிலைபெற்ற பிறகு, அது தன்னை நிலைநிறுத்திக்கொள்ளச் சிக்கலான அதிகாரக் கட்டமைப்புகளை உருவாக்கத் தொடங்கியது. இந்த உலகத்தை முழுமையாக ‘மனித மையவாத’ (Humancentric) உலகமாக மாற்றிய அந்தக் காலகட்டத்தில், அதிகாரம் என்பது ஒரு தரப்பினர் மற்றவரை ஆளும் மொழியாக மாறியது. அப்போது, பெண்ணின் உடல் வெறும் இனப்பெருக்கக் கருவியாக மட்டுமல்லாமல், அந்த அதிகாரக் கட்டமைப்பிற்கு அடித்தளமாக மாற்றப்பட்டது. பெண்ணின் முதன்மைப் பணி இனப்பெருக்கம் என்று சுருக்கப்பட்டபோது, அவளது மற்ற திறமைகள் புறக்கணிக்கப்பட்டன. பெண்ணின் உடல் அவளது அடையாளமாக மாற்றப்பட்டது. அவள் ஓர் “உடல் சார்ந்த பிம்பமாகவே” (Embodiment of body) வளர்க்கப்பட்டாள். அழகு, மென்மை, தாய்மை என அனைத்தும் அவளது உடல் சார்ந்த தகுதிகளாகவே போதிக்கப்பட்டன. இயற்கையில் அவளது உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன், ஆக்சிடாசின் ( ஆண்களுக்கும் சுரக்கும்) போன்ற சுரப்பிகளும் கூட இச்சூழலை வலுப்படுத்தும் விதமாக அமைந்துவிட்டன என்றே சொல்லலாம்.
இவையே அவளை “பலவீனமாகவோ” அல்லது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அவளை முடக்கும் கருவியாகவோ பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. பின் இந்த அமைப்புகள் அவளது அறிவு, ஆற்றல் மற்றும் பிரபஞ்சத் தேடலை ஒரு சிறிய உடல் சார்ந்த வட்டத்திற்குள் முடக்கியது. நாம் உற்று நோக்கினால் சமூகத்தின் கட்டமைப்புகள் ஒவ்வொன்றுமே பெண்ணை ஒரு ‘பொருளாகவே’ அணுகின என்பது விளங்கும். உலக வர்த்தக நிறுவனங்கள் அவள் உடல் பற்றிய உணர்வுகளை முதலீடாக்கின. போர்க்களங்களில் பெண் உடல் ஒரு போர் ஆயுதமாகவே (Weapon of wa) கையாளப்பட்டது. போர்க் காலங்களில் பெண்கள் அதிகமாகப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். அவள் உடல் ஆதிக்கத்தின் அரியாசனமாகக் கருதப்பட்டது. அதைக் காப்பவர்கள் நாட்டுக்காக உழைப்பவர்கள் தார்மீக வாதிகள் என அடையாள அட்டைகளைக் குத்திக் கொண்டனர். அரசியலிலோ, இன்றுமே பெண்கள் ஒரு சுதந்திரமான ஆளுமையாகப் பார்க்கப்படுவதற்குப் பதிலாக, வெறும் ‘வாக்கு வங்கியாகவே’ கருதப்படுகின்றனர். அரசியல் கட்சிகளின் மைய அணுகுமுறையே பெண்களுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வருவதுதான். அவர்களை “நாங்கள் மேம்படுத்துகிறோம்” (Upliftment) என்று பிரகடனப்படுத்துகின்றன.ஷ
உண்மையில், ஓர் இனத்தை ஆற்றலற்றவர்கள் என்று முத்திரை குத்தி அவர்களை மேம்படுத்தும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது? பெண்கள் சக்தி இழந்தவர்கள் (Powerless) என்றும், யாரோ ஓர் அதிகார வர்க்கம் வந்து அவர்களுக்குச் சக்தியை வழங்க வேண்டும் என்றும் நினைப்பதே ஓர் அடிப்படைத் தவறாகும். இன்றும் புரட்சியாளர்கள், முற்போக்குவாதிகள் என்று தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்பவர்கள், பெண்களையே ஒரு ‘பேசு பொருளாக’ வைத்துள்ளனர். ஒரு பெண்ணைச் சக-உயிரினமாக மதிக்காமல், அவளுக்குப் ‘பாடம் புகட்டும்’ ஆசிரியர்களாகவே இத்தகைய புரட்சியாளர்கள் தங்களை முன்னிறுத்துகின்றனர்.
பெண் என்பவள் வெறும் சதையும் குருதியும் கொண்ட உடல் அல்ல அவள் ஒரு சிந்தனை, ஓர் ஆற்றல், ஓர் ஆளுமை என்பதை எல்லாக் காலகட்டங்களிலும் சில பெண்கள் உணர்ந்தே இருக்கின்றனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களை இச்சமூக அமைப்புகள் சரியாக அடையாளங்காட்டவில்லை.
ஆனால் இன்றைய நவீனக் காலப் பெண்கள், இயற்கையின் பரிணாம விதிகளின்படி ஆண்களை விட மிக வேகமான வளர்ச்சியை எட்டியுள்ளார்கள். பல நூற்றாண்டு கால அழுத்தங்களும் சவால்களும் அவர்களுக்குள் ஒரு நுட்பமான தற்காப்பு மற்றும் தகவமைப்புத் திறனை வழங்கியுள்ளன என்றே சொல்லுவேன். இதன் விளைவாக, அவர்கள் இன்று “உடல் சார்ந்த பிம்பம்” (Bodily Embodiment) என்ற குறுகிய வட்டத்தைக் கடந்து இயல்பாகவே வளர்ந்து நிற்கிறார்கள். இது இன்று ‘பெண்ணியம்’ என்று விவாதிக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் இது ஒரு செயற்கையான புரட்சியல்ல. இது ஓர் இயற்கையான ஓட்டம் (Natural Flow). அவ்வளவுதான். இப்பிரபஞ்சத்தில் எல்லாவற்றிற்கும் ஒரு செறிவுப் புள்ளி ( saturation point) உண்டு. அதன்பின் சில காலம் இயல்பு நிலை நீடிக்கும், பின் மீண்டும் ஒரு சலசலப்பு உருவாகும். இது ஒரு சுழல் வட்டம்.
ஆனால் இதில் வருத்தப்படக் கூடிய விஷயமாக நான் பார்ப்பது நவீன பெண்ணியம் பேசுபவர்களில் பலர் இன்றும் ஆடை, அலங்காரம் போன்ற உடல் சார்ந்த வெளிப்புற மாற்றங்களிலேயே கவனத்தைக் குவித்து அதன் சாராம்சத்தை முடக்கி விடுகின்றனர்.
இந்தியா போன்ற ஒரு நாட்டில், மகாத்மா காந்தி தனது மேலாடையற்ற கோலத்தை ஒரு வலிமையான அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தினார். அது வெறும் எளிமைக்காக மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஜவுளித் தொழிலுக்கு எதிரான ஒரு பொருளாதாரப் போர் முறையாகவே இருந்தது. அவரது மேலாடையற்ற உடல் ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக, ‘ஆன்மாவின்’ வெளிப்பாடாகப் போற்றப்பட்டது. ஓர் ஆணின் உடல் அரசியல் அறிவிப்பாக மட்டுமே ((political statement) ஏற்றுக்கொள்ளப்படும் போது, ஒரு பெண் தன் உடலையோ ஆடையையோ அரசியல்ஃ சமூக மாற்றத்தின் அறிவிப்பாக வெளிப்படுத்தும்போது ஏன் அது கலாச்சாரத்தின் ஃ பாலியலின் ஃ தார்மீகத்தின் ஃ சடங்குகளின் கேள்வியாக மாற்றப்படுகிறது? ஏன் அவளது உடல் எப்போதுமே சமூகத்தின் (தார்மீகக் காவலர்களின் ஃ முற்போக்குவாதிகளின்) விவாதப் பொருளாக ஃ பேசு பொருளாக இருக்கிறது? ஆணோ பெண்ணோ அவரின் முற்போக்கு கருத்து என்பது மனிதம் சார்ந்ததாக, இவ்வுலகத்தைப் மேலும் அரவணைத்துக் கொள்ளும் உள்ளடக்கம் (inஉடரளiஎவைல) சார்ந்ததாகத்தானே இருக்க வேண்டும்!
உடல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பயணிப்பதற்கான ஒரு வாகனம் மட்டுமே. அதுவே நமது இலக்கு அல்ல. ஒரு பெண் எப்போது தனது உடல் சார்ந்த பிம்பங்களைக் கடந்து, தனது ‘சுயத்தை’ (ளுநடக) உணர்கிறாளோ, எப்போது அவள் அத்தகைய உயிராக உள்வாங்கிக் கொள்ளப்படுகிறாளோ அப்போதுதான் இருத்தலின் பரிபூரணத்தை ஓர் இனமாக நாம் உணர்ந்தவர்களாவோம்.
இந்த மகளிர் தினத்தில், உடலால் அல்லாமல் உயிரால், அறிவால், ஆற்றலால் தன்னை உணர்ந்து நிற்கும் நிற்கும் ஒவ்வொரு பெண்ணையும் கொண்டாடுவோம்.
![]()
