மகா சிவராத்திரி நன்னாளில் அபிநயஷேத்திரா நடனப்பள்ளிஇலங்கையிலும் இந்தியாவிலும் ஆடல் சமர்ப்பணம் வழங்கியது.
- கலாசூரி திவ்யா சுஜேன்
மகா சிவராத்திரி 2026
ஆதியாம் சிவனும், அவன் சோதியான சக்தியும் தான்
அங்கும் இங்கும் எங்கும் உளவாகும் – ஒன்றே
ஆகினால், உலகனைத்தும் சாகும் – அவை
அன்றியோர் பொருளுமில்லை, அன்றி ஒன்றுமில்லை, இதை,
ஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும் – இந்த
அறிவுதான் பரம ஞானம் ஆகும்
உள்ளும் புறமும் நிறைந்திருக்கின்ற சிவனருள் வெள்ளமெனப் பொழிய ஆதி சிவனும் அன்னையும் ஆனந்த கூத்திடும் சிவராத்திரி நன்னாளில் அபிநயஷேத்திரா நடனப்பள்ளி இலங்கையிலும் இந்தியாவிலும் ஆடல் சமர்ப்பணம் வழங்கியது.
அம்பலத்தானை தரிசிப்பதும் இந்தியாவில் சிவராத்திரி நாட்டியாஞ்சலி நிகழ்வில் ஆடல் சமர்ப்பணம் வழங்குவதும் கலை பயில்வோரின் பெருங்கனவு. முதன் முதலாக இலங்கையில் இருந்து இந்திய நாட்டியாஞ்சலி நிகழ்வில் 2013 ஆம் ஆண்டு பங்கு பற்ற கிட்டிய வாய்ப்பு ஜென்ம புண்ணியம் என பதிற்றாண்டு கடந்தும் பரவசம் தருகிறது. 2013 இல் குரு பத்மபூஷன் சந்திரசேகர் ஐயா நட்டுவாங்கம் இசைக்க சிதம்பரத்தில் நடன சமர்ப்பணம் வழங்கியதும், மயிலாடுதுறை மயூர நாட்டியாஞ்சலியில் மயிலாடுதுறை மாயூரநாதர் பேரருள் நிறைய “மயூர நாட்டிய தாரகை “ விருதினை நட்டுவனார் இந்திரா ராஜன் அம்மாவின் ஆசிகளுடன் பெற்றதும் சொல்லில் அடங்கா வரம்.
இவ்வருடம் 2026 அபிநயஷேத்திரா இந்திய சிவஸ்தலங்கள் ஆறிலும், இலைகையில் இரண்டு கோவில்களிலும் என எட்டு நாட்டியாஞ்சலி நிகழ்வுகளில் பங்குபற்றியது.அபிநயஷேத்ராவில் 2011 ஆம் அரங்கேற்றம் கண்டு தொடர்ந்து பல நிகழ்வுகளில் ஆற்றுகை வழங்கும் சிறந்த கலைஞர் சக்தீஸ்வர்யா கணேசன் அவர்களும், 2019 ஆம் பாரதி மார்க்கம் அரங்கேற்றம் கண்டு ஆற்றுகையாளாராக விளங்கும் ரோபிணி அருள்செல்வம் அவர்களும் இந்திய நாட்டியாஞ்சலிகளில் பங்கு பற்றி இருந்தனர். அத்தோடு சுஜேன் ஆதர்ஷ் தேவரத்திற்கு ஆடல் அசைவுகளை வழங்கினார்.
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் ஆலயம், மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலய மயூர நாட்டியாஞ்சலி, திருவிடைமருதூர் மருதா நாட்டியாஞ்சலி, திருவாவடுதுறை ருத்ர நாட்டியாஞ்சலி, திருப்பாலைத்துறை பாலைநாதர் ஆலய நாட்டியாஞ்சலி, என சிவராத்திரி தினம் முழுவதும் நாட்டிய சமர்ப்பணம் வழங்கி நிறைவாக தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய பிரகன் நாட்டியாஞ்சலியில் பெருவுடையார் பேரருள் நிறைய அவன் பாத்ததில் சமர்ப்பணமாக நாட்டியாஞ்சலி வழங்கி நிறைவு செய்தனர்.இலங்கையில் கொழும்பு வஜிரா ஆலயத்திலும், புதிய கதிரேசன் ஆலயத்தில் நடைபெற்ற கொழும்பு நாட்டியாஞ்சலியிலும் அபிநயக்ஷேத்திரா மாணவர்கள் ஆடல் சமர்ப்பணம் வழங்கினர்.
இந்திய நாட்டியாஞ்சலிகளில் திருமதி ஷாளினி சிவஷங்கர் அவர்களின் உபஹார் நடனப்பள்ளி ஐக்கிய இராச்சியம் மாணவி திருமதி நிறைஞ்சனா சுரேஷ்குமார் அவர்கள் மோகினியாட்டம் நடனத்தை வழங்கி இருந்தார்.
இதுவரை 2013,2014,2016,2017,2026 ஆண்டுகளில் சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில், மயிலாடுதுறை மயூர நாதர் கோவில், திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி கோவில், திருவையாறு ஐயாறப்பன் கோவில் , திருத்துறைப்பூண்டி மருதீஸ்வர் கோவில், நாகப்பட்டினம் நீலாயதாக்ஷி கோவில் ,காரைக்கால் வைத்தீஸ்வரன் கோவில், திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் , திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில், அம்பகத்தூர் பத்ரகாளி கோவில்,போன்ற புண்ணிய ஆலயங்களில் சிவராத்திரி நாட்டிய சமர்ப்பணம் வழங்கி வரம் பெற்றது அபிநயக்ஷேத்திரா. அபிநயக்ஷேத்திராவின் இருபதாவது ஆண்டு பெருவிழாக் காலத்தில் இந்தியா மற்றும் இலங்கையில் சிவராத்ரி நாட்டியாஞ்சலி சமர்ப்பணம் வழங்க வரம் கிட்டியது சிவலீலை.
யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென்
றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா!
நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன்
சித்தமிசைக் கொள்ளுஞ்சிரத்தை யொன்றே போதுமடா!
![]()
