ஆதி பகவன் முதற்றே உலகு

0
vm398

உணர்வலைகள் 4

இயற்கை பிரபஞ்ச உள்ளுணர்வு கொண்டது.

உணர்வுகளின் கலவையே மனிதர் என்னும் மாபெரும் சக்தி என்பது யாவரும் அறிந்ததே. அந்த உணர்வு அன்பு, பாசம், பயம் மட்டுமல்ல. உள்ளத்துக்குள் எம்மை அறியாமலே தோன்றுகின்ற அனைத்து உணர்வுகளும் அடங்கும். மனிதர் மட்டுமன்றி இயற்கை முழுவதும் பிரபஞ்ச உள்ளுணர்வு மிக்கது என்பது ஆழ்ந்து சிந்திக்கும் போது உணரக் கூடியதாக இருக்கும்.

மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், பறவைகள், பூச்சிகள், நுண்ணுயிர்கள், மண் நீர், காற்று, மலை, கிரகங்கள், நட்சத்திரங்கள், இயற்கை நிகழ்வுகளான மழை, காற்று, வெப்பம், நிலநடுக்கம், எரிமலை, என மனிதனால் உருவாக்காத அனைத்தும் இயற்கை எனப்படுகின்றன. இந்த இயற்கையானது பிரபஞ்சத்தினுள் அடங்கும். பிரபஞ்சம் என்றால் உலகம், விண்மண்டலம், காலம், ஆற்றல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான அமைப்பே ஆகும்.

ஒரு புள்ளியில் தோன்றி விரிந்து கொண்டே, ஓடிக்கொண்டே இருக்கும் பிரபஞ்சத்தில் இராட்டினம் போலச் சுழன்று கொண்டிருக்கும் பூமியிலே தற்காலிகமாக வாழ்ந்த கொண்டிருக்கும் மனிதர் பிரபஞ்சத்தின் கூறுகள் அனைத்தும் கொண்டிருக்கின்றனர். உள் உணர்வு என்றால் (Concept of Consciousness) உணர்தல், சிந்தித்தல், அனுபவித்தல், தீர்மானித்தல் போன்ற மன செயல்பாடுகளைக் குறிக்கிறது. பொதுவாக இது மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் மட்டுமே உண்டு என்று கருதப்படுகிறது. ஆனால் சமீபத்திய தத்துவ மற்றும் அறிவியல் ஆய்வுகள், இந்த உணர்வு இயற்கையின் அடிப்படை பண்பாக இருக்கலாம் என முன்வைக்கின்றன.

இயற்கையின் ஒழுங்கமைப்பு பிரபஞ்சம் மிகச் சீரான விதிகளின் கீழ் இயங்குகிறது. ஈர்ப்பு விசை, மின்னியல் விசை, அணுவியல் விதிகள், கால, விண்வெளி அமைப்பு. இந்த விதிகள் இல்லாமல் பிரபஞ்சம் நிலைத்திருக்க முடியாது. இத்தகைய துல்லியமான அமைப்பு, ஒரு புத்திசாலித்தனமான ஒழுங்கை எடுத்துக்காட்டுகின்றது. பிரபஞ்சத்திலே பால்வீதியின் அமைப்பு ஒழுங்கு முறை கிரகங்களின் சுற்றுவட்டப் பாதை போன்றன ஒரு அறிவார்ந்த செயற்பாடாகக் காணப்படுகின்றன.

பிரபஞ்சம் முழுவதும் ஒழுங்கும் ஒற்றுமையும் காணப்படுகின்றன. நட்சத்திரங்களின் இயக்கம், பூமியின் சுழற்சி, பருவங்களின் மாற்றம், மழையின் வரவு, காற்றின் ஓட்டம் போன்றவை அனைத்தும் ஒரு திட்டமிட்ட அமைப்பின் கீழ் செயல்படுகின்றன. இதன் மூலம் இயற்கைக்கு ஒரு உள் அறிவும் உணர்வும் இருப்பது போல் தோன்றுகிறது. மனிதன் செய்யும் செயல்களுக்கு இயற்கை பதிலளிப்பதும் இதற்கு ஒரு சான்றாகும். மேலும், இயற்கை மனித உணர்வுகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. அமைதியான காடுகள் மன அமைதியை அளிக்கின்றன. கடலின் அலைகள் மன அழுத்தத்தை குறைக்கின்றன. மலர்கள், பறவைகள், மலைகள், ஆறுகள் ஆகியவை மனித மனதில் மகிழ்ச்சியும் சாந்தியும் உருவாக்குகின்றன. இதனால் இயற்கை மனித உணர்வுகளை புரிந்து கொண்டு பதிலளிப்பது போலவே தெரிகிறது.

காடுகள் அழிக்கப்பட்டால் மழை குறையும், நீர் நிலைகள் மாசுபட்டால் நோய்கள் பெருகும், வளிமண்டலம் பாதிக்கப்பட்டால் வெப்பநிலை உயரும். இவை அனைத்தும் இயற்கை மனிதனுக்கு அளிக்கும் எச்சரிக்கைகளாகவே கருதப்படலாம்.

இயற்கை பிரபஞ்ச உள்ளுணர்வு கொண்டது என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு இளைஞன் பறவைகள் பார்ப்பதற்காக தெலைபேசியோ, தொலைநோக்குக் கண்ணாடியோ எதுவுமின்றி அவற்றுக்கு உண்ணக் கொடுப்பதற்காகச் சில தானியங்களை மட்டுமே எடுத்துப் போவான். அவனைக் கண்டவுடன் பல பறவைகள் உணவுக்காக மட்டுமன்றி உறவாடவும் அவனிடம் வந்துவிடும். அவனுடைய தோளிலும், தலையிலும், மடியிலும் வந்து அமர்ந்து கொள்ளும். அவனோடு சொந்தம் கொண்டாடிய பறவைகளுக்காக நாள்தோறும் செல்லும் அவனிடம் அவனுடைய தந்தை ‘‘வீட்டிலே நீ அந்தப் பறவைகளைப் பிடித்து வந்து வளர்க்கலாமே’‘ என்று கேட்டார். அது சிறந்தது என்று நினைத்த அவனும் பறவைகளைப் பிடித்து வருவதற்குரிய ஆயத்தங்களுடன் போனான். ஆனால், அன்று எந்தப் பறவையும் அவனுக்கு அருகிலே வரவில்லை. வெகுதொலைவில் மகிழ்ச்சியாகப் பறந்து கொண்டிருந்தன. எமக்கு மட்டுமல்ல பிற உயிரினங்களுக்கும் மகிழ்ச்சி தேவை. இந்த இளைஞன் தம்மைப் பிடிக்க வந்திருக்கின்றான் என்னும் செய்தியை அந்தப் பறவைகள் எவ்வாறு அறிந்தன?

நாம் ஒருவருடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்போம். அப்போது அதேநபர் தொலைபேசியில் அழைப்பு விடுப்பார் அல்லது முன்னே வந்து நிற்பார். வீட்டுக்கு விருந்தினர் வருகின்ற செய்தியை காகம் கரைந்து தெரிவிக்கும். இவ்வாறு நாம் பிரபஞ்ச அறிவு பற்றி வியந்திருக்கின்றோம். இசை கேட்டுத் தாவரங்கள் எவ்வாறு வளருகின்றன? நிலநடுக்கம் வரப் போகின்றதை அறிந்த விலங்குகள் இடநகர்வை எப்படி நடத்துகின்றன? காண மாற்றத்தை அறிந்த பறவைகள் எவ்வாறு புலம்பெயருகின்றன?

ஆதி மனிதன் இயற்கையைத் தெய்வமாக வழிபட்டான். பழங்கால தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும் இயற்கையை உயிருள்ள ஒன்றாகவே பார்க்கும் பாரம்பரியம் காணப்பட்டது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் நிலப்பிரிவுகள் மனித வாழ்க்கையோடு இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலத்துக்குரிய தெய்வங்களை வழிபட்டனர். இதன் மூலம் நமது முன்னோர்கள் இயற்கையின் உள் உணர்வை உணர்ந்திருந்தார்கள் என்பது தெளிவாகிறது. இயற்கையில் பிரபஞ்ச உணர்வை (ஊழளஅiஉ ஊழளெஉழைரளநௌள) மிக அழகாக வெளிப்படுத்தும் சங்கப் பாடல் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டு ஆகும். இதில் மலை, அருவி, மூங்கில், காற்று, விலங்குகள், பறவைகள் என அனைத்தும் ஒன்றிணைந்து, ஒன்றோடொன்று பிணைந்த ஒரு கூட்டுயிர்ப் சூழலாகவும், பிரபஞ்ச இசையாகவும் சித்தரிக்கப்படுகின்றன, இது மனித உணர்வுகளை இயற்கையோடு இணைக்கிறது.

இன்றைய காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதன் இயற்கையைச் சுரண்டி வருகிறான். இதன் விளைவாக இயற்கை சமநிலை பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்து நாம் இயற்கையைப் பாதுகாக்காவிட்டால், அதன் உள் உணர்வு கோபமாக மாறி பேரழிவுகளாக வெளிப்படலாம். மனிதன் அறிவியல் வளர்ச்சியின் மூலம் பல இயற்கை இரகசியங்களை கண்டறிந்தாலும், இயற்கையின் உள்ளார்ந்த உணர்வையும் சமநிலையையும் முழுமையாகப் புரிந்து கொள்ள இன்னும் முயன்று கொண்டிருக்கிறான். இயற்கை என்பது உயிர்களும், சூழல்களும், சக்திகளும் இணைந்து இயங்கும் ஒரு உயிர்ப்பான அமைப்பாகும். ஆகவே, இயற்கை பிரபஞ்சம் ஒரு உயிருள்ள, உணர்வுள்ள அமைப்பாகவே கருதப்பட வேண்டும். அதை மதித்து, பாதுகாத்து, அதனோடு ஒத்துழைந்து வாழ்வதே மனிதனின் முக்கிய கடமையாகும். இயற்கையுடன் இணைந்த வாழ்வே நிலையான மற்றும் அமைதியான எதிர்காலத்திற்கான அடிப்படையாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *