பார்வைக் கோளாறு!

0
vm401

  • மாதவி, யேர்மனி
    யேர்மனியில் விமான நிலையம் நோக்கிச் செல்லும் புகையிரதம், எல்லா ஆசனங்களும் (Seats) நிரம்பியிருக்க, இடமில்லாத நிலை காணப்பட்டது. ஒரு இளம் பெண் அமைதியாக ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தாள். அவளது ஆசனத்திற்கு அடுத்த ஆசனத்தில் எவரும் இருக்கவில்லை.

அவளது ஒரு பயணப் பொதியும் (Travel bag), இரண்டு கைப்பைளும் அந்த ஆசனத்தில் அவளைப் போலவே அமைதியாக இருந்தன.

இப்படிப் பலர் அருகில் உள்ள ஆசனங்களில் தமது உடமைகளை வைத்திருந்தாலும், வேறு பயணிகள் அடுத்தடுத்த தரிப்புக்களில் (Stations) ஏறும்போது, தமக்கு அருகில் உள்ள பைகளை எடுத்து வரும் பயணிகளுக்கு இடங்கொடுத்தனர்.
அடுத்த நிறுத்தத்தில் ஒரு முதியவர் ஒரு கைத்தடியுடன் ஏறினார்.

ஏறியவர் அந்த இளம் பெண்ணையும், அவளுக்கு அருகிலிருந்த ஆசனத்தில் அவளது பைகள் சௌகரியமாக இருப்பதையும் பார்த்தார். அவளோ எவரையும் பார்ப்பதாக இல்லை. அவள் வேறு ஓர் உலகில் சஞ்சரிப்பது போலவே அவளது பயணம் அமைந்திருந்தது. முதியவர் புகையிரதத்தின் அசைவிற்கு ஈடுகொடுக்கக் கஷ்டப்படுவது தெரியவே, நான் எழுந்து இடங்கொடுக்க முற்பட்டேன்.

அவர் புன்னகையுடன் என்னை அமருமாறு சைகை காட்டினார். எனக்கு அந்த இளம் பெண்ணுடன் பேச வேண்டும் போலத் தோன்றியது. அவளை உற்றுப் பார்த்தேன். அவள் கவனிப்பதாகத் தெரியவில்லை.ஆனால்,அவள் தலைக்கு மேல் “கர்ப்பிணிப் பெண்களுக்கும் முதியவர்களுக்கும் உரிய ஆசனம்” என எழுதப்பட்டிருந்தது.

விமான நிலையம் வந்ததும் அவள் இறங்கினாள். அவளைத் தொடர்ந்து அந்த முதியவரும் நானும் இறங்கினோம். இறங்கியதும் முதியவரிடம், “ஏன் அந்தப் பெண் அருகே ஓர் ஆசனம் இருந்ததே, அதிலிருக்கும் பொருட்களை இறக்கிவிட்டு நீங்கள் அமர்ந்திருக்கலாமே? அவள் என்ன இரண்டு ஆசனங்களை முன்பதிவு (Booking) செய்து வந்தவளா?” எனக் கேட்டேன்.

முதியவர் அமைதியாக, “அவளுக்கு என்ன பிரச்சினைகளோ? அவள் முகத்தைப் பார்த்தபோது அவளைத் தொந்தரவு செய்யத் தோன்றவில்லை. இந்த வயதிற்கு என்னென்ன கவலைகளோ?” அவளுக்கு என்றார். எனக்கோ கோபம்; அவர் கோணத்திலோ அது இரக்கம். ஒரே பயணத்தில் வித்தியாசமான பார்வைகள். ஒருவேளை அவள் என் மகளாக இருந்தால் மட்டுமே எனக்கு அந்தப் பார்வை தோன்றுமோ என்னவோ!

முதியவரை ‘கிழவன்’ என்று அவரது கைத்தடியை வைத்தே தீர்மானித்தேன். அவர் எனக்கு இளையவராகக் கூட இருக்கலாம்.
பின்னால் சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தேன். அந்த இளம் பெண் ஒரு தூணுக்குப் பின்னால் ஒரு பின்னுக்குள் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.
நான் அவசரப்பட்டு வாந்தியெடுத்துவிட்டேனோ என எண்ணிக்கொண்டேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *