எங்கடை ஆச்சி 13….
இப்ப பாத்தம் எண்டால் எங்கடை ஆக்கள் விடியக்காலமை எழும்பி பல்லுத்தீட்டிறதுக்கு அந்தப் பேஸ்ற் இந்தப் பேஸ்ற் அந்த பிறஷ் இந்த பிறஷ் எண்டு காசைக் கரியாக்கினம். உதுக்குள்ளை இன்னுமொரு முசுப்பாத்தி இருக்குது என்னண்டால் சிலதுகள் விடிய எழும்பாதுகள் அப்படி பிந்தி முந்தி எழும்பினாலும் பல்லுத் தீட்டாதுகள். பல்லுத் தீட்டாமலே கோப்பி தேத்தண்ணி குடிக்குங்கள் சிலதுகள் அதை இதை எண்டு திண்டும் போடுங்கள் கேட்டால் நாகரிகம் எண்டுங்கள். எங்கடை ஆச்சி விடிஞ்சாப்பிறகும் நித்திரை கொள்ள விடமாட்டா. டேய் பிள்ளையார் கோயில் மணி அடிச்சு எவ்வளவு நேரமாப் போச்சுது கவட்டுக்கை கையை வைச்சுக்கொண்டு இன்னும் என்ன நித்திரை. ஆட்டடி மாட்டடி கூட்டி வயலுக்கை சொண்டு போய் கொட்டிறேல்லையோ தண்ணி அள்ளப் போ றேல்லையோ. இப்ப எழும்பேல்லை எண்டால் தண்ணி கொண்ணந்து ஊத்துவன் வடுவா எண்டு சுப்பிரபாதம் பாட வெளிக்கிட்டு விடுவா. ஆச்சியின்ரை சத்தம் கேட்டதுமே நாங்கள் பாய் சுருட்டின பாதி சுருட்டாத பாதி எண்டு பதறிச் துடிச்சு எழும்புவம்.
நித்திரையால எழும்பின பிறகு பல்லுத்தீட்டி முகம் கழுவாமல் அடுக்களையுக்கை அடுக்கவும் மாட்டா. என்னதான் வடிவான ஆக்கள் எண்டாலும் இரவிலை படுக்கேக்கை வாயை ஆவெண்டபடிதான் படுப்பினம். அப்படிப் படுகேக்கை கிருமியள் வந்து பல்லுவழியை குடியேறி குடும்பம் நடத்தி பிள்ளை குட்டி பேரப் பிள்ளையள் சிலநேரம் பூட்டப் பிள்ளையள் எண்டு பெருககுங்கள் எண்டுவா ஆச்சி.உந்தக் கிருமியள் பெருகிற விசயத்தைச் சொல்லாமல் இரவிலை வாயை வந்து பேய் அளைஞ்சு இருக்கும் எண்டபடியால பல்லுத் தீட்டித்தான் தின்ன வேணும் குடிக்க வேணும் எண்டு முந்தி எங்கடை ஆச்சி அப்புகள் வெருட்டுறதுகள். நித்திரையாலை எழும்பி பல்லுத் தீட்டாமல் திரிஞ்சால் ஆச்சி போயிலைக்காம்பாலை குண்டியிலை ரெண்டு போட்டுக் கிணத்தடிக்குத் துரத்தி விடுவா.
முந்திச் சின்ன வயசில பற்பொடி இல்லாட்டில் வீபூதி சுடப்பாவிக்கிற உமிச்சாம்பல் அடுப்புக்கரி எண்டு பல்லுத் தீட்டப்பாவிக்கிறனாங்கள். பெரிய செலவு ஒண்டும் இல்லை அப்பேக்கை பற்பொடி பக்கற்று அஞ்சாம்தான் .அடுப்பில இருக்கிற கட்டைக்கரித்துண்டை எடுத்து வாய்க்குள்ளை போட்டு கறக்பறக் எண்டு கடிச்சு பேந்து நாக்கு நுனியால முன்னுக்கு இழுத்துக் கொண்ணந்து விரலால தீட்டுவம். உதுக்கு பூவரசம்கட்டை விறகுதான் நல்லம் கருக்கு மட்டை சிலவேளை கயரும் . எங்கயும் நொங்கைக் கடிச்சு இளனிக்கோம்பையைக் கடிச்சு பல்லிலை காவி வந்தால் ஆச்சி சனியனே கிறகமே பல்லு என்ன நிறத்தில இருக்கு பார் உந்த வாத்திமார் உதுகள் ஒண்டும் பாக்கிறேல்லையோ எண்டு போட்டு அடுப்பிலை பாக்கைப் போட்டு சுட்டுத்தருவா. பாக்குக் கரியாலை தீட்டினாப் பல்லு நல்ல பளிச்செண்டு வரும். பயப்பிடாமல் ஆருக்கும் பல்லைக் காட்டலாம் எண்டுவா.
உதுகளை விட இன்னொரு திறஞ்சாமான் என்னண்டால் புழுதி மண்.வீட்டில கிணத்தடியில கொட்டி கும்பியா இருக்கிற ஐயனார் கோயில் புழுதியாலயும் பல்லுத் தீட்டுவம். என்னட்டை இப்பவும் இருக்கிற ஒரு பழக்கம் என்னண்டால் பற்பொடியாலதான் பல்லுத் தீட்டிறனான்..இந்தப் பறபொடியால தீட்டினா பல்லு ஈறு நாக்கு எல்லாம் றோஸ் கலறில வந்திடும். முந்திச் சின்ன வயசில பாவிச்ச அதே கோபால் பற்பொடி இல்லாட்டில் அண்ணா பற்பொடி தான் இப்பவும் பாவிக்கிறனான் அது இல்லை எண்டால் உமிச்சாம்பல் பாவிப்பன். உதைவிட வேலியில நிக்கிற வெக்கிழுவை, முக்கிழுவை பூவரசு, வேப்பங்குச்சியள் பிள்ளையா கோயிலடியில நிக்கிற ஆலமர விழுதுக் குச்சியளாலையும் முந்தி நாங்கள் பல்லுத்தீட்டுவம். ஒரு அளவான குச்சியைப் பிடுங்கி அதுகின்ரை நுனியைப் பல்லால சப்பி பிறக்ஷ்மாதிரி ஆக்கிப்போட்டு பல்லுத் தீட்டுவம். வெள்ளைக்காரன் பல்லுத் தீட்டிற பிறக்ஷ்க்ஷைக் கண்டு பிடிக்க முதலே நாங்கள் உதைப் பாவிக்கத் தொடங்கிப் போட்டம் எண்டு எங்கட அப்பு பெரிய அவுறுகமாச் சொல்லுவார். அப்பு உப்பிடிச் சொன்னதுக்கு என்ன ஆதாரம் எண்டு ஆரும் குறுக்க மறுக்க வண்டிலை விடப்படாது.
உப்பிடித் தமிழன் பிறக்ஷ் பாவிச்ச விசயத்தை எங்கட ஒளவையார் ஆயிரம் வருசங்களுக்கு முதலே ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி எண்டு வள்ளீசாச் சொல்லிப் போட்டா. விடியக்காத்தால உப்பிடி உந்தக் குச்சியளால பல்லைத் தீட்டிக்கொண்டு ஒழுங்கையால வாற ரெண்டொரு பேரோட துப்பித்துப்பி அரசியல் மற்றது ஆற்றையும் கதை எண்டு கதைச்சுக்கொண்டு காலாற நடந்து காத்தாட வெளிக்குப் போறதில இருக்கிற சந்தோசம் இருக்கே அது சினமன் கிராண்டில கண்ணாடியைப் பாத்துக்கொண்டு இருக்கிறதில கடைசிவரையும் கிடையாது கண்டியளே….
![]()
