உயிர்த்தெழுவோம்

0
vm407

-சேவியர் தமிழ்நாடு.
உயிர்ப்புத் திருவிழா எல்லா ஆண்டும் நம்மைச் சந்திக்கிறது. சிலருக்கு இது ஆன்மிகக் கொண்டாட்டம். சிலருக்கு இது கலாச்சாரக் கொண்டாட்டம். சிலருக்கு இது ஓய்வெடுக்கும் விடுமுறை. சிலருக்கு இது நண்பர்களைச் சந்தித்து நட்பைப் பரிமாறும் தினம். கிறிஸ்தவத்தின் பார்வையில் உயிர்ப்பு என்பது மனுக்குலப் பாவங்களுக்காக, தன்னையே பலியாய் அளித்த இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு தினம். இதனால் பாவத்தின் ஆதிக்கம் விடைபெறுகிறது, இயேசுவின் மீட்பின் செயலை நம்பும் மனுக்குலமும் அந்த மீட்பின் பயணத்தில் இணைகிறது. ஆன்மிக அர்த்தங்களைத் தாண்டி, இந்த ஈஸ்டர் சொல்லும் மாபெரும் உண்மை என்ன தெரியுமா ? வாழ்வின் அதி பயங்கரமான இருள் தருணங்களையும் தாண்டி வெளிச்சத்துக்குள் நாம் வர முடியும் என்பது தான் !

தோல்வி என்பது வாழ்வின் கடைசிப் பக்கம் அல்ல. அதைத் தாண்டிய விடியலின் பக்கம் இருக்கிறது. அமைதியின் கல்லறையில் அடைபட்டுக் கிடந்தால் கூட, விடியலில் தினத்துக்காய் விழித்திருக்க வேண்டும். எழவே முடியாதபடி அணு தாக்குதலில் புதைக்கப்பட்ட ஜப்பான் இன்றைக்கு உலகையே வெல்லும் ஆற்றலுடன் நிமிர்ந்து நிற்கிறது !தேர்வில் நிகழ்கின்ற தோல்வி, நிறுவனத்தில் வருகின்ற தோல்வி, ஒரு தேசத்தில் வருகின்ற சவால். எல்லாமே கடந்து போகும். விழுந்து விட்டோமா ? எனும் கேள்வியல்ல, எழாமல் இருப்போமா என்ன ? எனும் நம்பிக்கையின் வார்த்தையே தேவையானது. புது விடியலின் கருவறையாய் இன்றைய கருப்பு நாட்கள் இருக்கின்றன. விழுதல் என்பது ஒரு நிகழ்வு மட்டுமே, அதுவே முடிவல்ல. வரலாறுகள், புதையுண்டு கிடக்க மாட்டேன் என முரண்டு பிடித்து முன்னேறும் மனிதர்களால் தான் எழுதப்படுகிறது.

உயிர்ப்பு சொல்லும் பாடங்களில் ஒன்று மன்னிப்பு ! பழைய பகையையும், பழைய கசப்புணர்வுகளையும் தூக்கிச் சுமப்பது என்பது, நமது மரணத்தை நாமே தூக்கிச் சுமப்பதைப் போன்றது. அதை இறக்கி வைக்க எளிய வழி மன்னிப்பு எனும் ஆயுதமே. நாடுகள் தங்களுக்கிடையே வெறுப்பின் மதில் சுவர்களைக் கட்டியெழுப்புகின்றன. குடும்பங்கள் தங்களுக்கிடையே மறுப்பின் வாசல்களையே எழுப்புகின்றன. அன்பின் சுடர்கள் விலகிப் போனால், வாழ்க்கை இருளின் படியில் அமர்ந்து விடும். குடும்பங்களிடையே, கணவன் மனைவியிடையே, நண்பர்களிடையே – மனம் விட்டுப் பேசாததே பல பிழைகளுக்குக் காரணமாகி விடுகிறது. அவர்களுக்கு இடையே உள்ள உறவு விரிசல்கள் இந்த பேசா மௌனத்தினால் இறுகி பாறைகளாகிவிடுகின்றன. மன்னிப்பு பலவீனமல்ல, அதுவே உறவுகளைக் கட்டியெழுப்பும் பலமான ஆயுதம். வெறுப்பு, நம் காயங்களை ஆழமாக்கும். மன்னிப்பே நம் காயங்களைக் குணமாக்கும். இயேசு சிலுவையின் உச்சியிலும் மன்னிப்பின் வார்த்தையைப் பேசினார். உயிர்ப்பு கற்றுத் தரும் இன்னொரு முக்கியமான பாடம் தியாகம் ! அன்புக்காக தன்னையே இழக்கத் துணியும் தியாகம்.

குடும்பங்களுக்காக ஒவ்வொருவரும் தியாகங்களைச் செய்யும் போது குடும்பம் அன்பினால் ஒளிரும். அதிகாலையிலேயே எழுந்து குடும்பத்தினருக்காக உணவு தயாரிக்கும் அன்னை தியாகத்தின் குறியீடு. நள்ளிரவு வரை விழித்திருந்து தன்னுடைய அடுத்த நாள் வகுப்புக்காக தயாரிக்கும் ஆசிரியை தியாகத்தின் குறியீடு. குடும்பத்துக்காய் காசு சேமிக்க பல மைல் தூரங்களை புன்னகையுடன் நடந்தே கடக்கும் தந்தை தியாகத்தின் குறியீடு. இப்படி தியாகங்களின் மீது தான் அன்பின் இல்லங்கள் கட்டியெழுப்பப்படுகின்றன. சுயநல சுருக்குப் பைகளில், மாபெரும் மகிழ்வு வந்தமர்வதில்லை. இந்த உயிர்ப்பு நமக்கு இவற்றை நினைவூட்டட்டும். தியாகத்தால் செழிக்கும் குடும்பம், மன்னிப்பால் குணமாகும் உறவுகள், வெளிச்சம் வரும் எனும் நம்பிக்கையுடன் கழியும் தருணங்கள். அனைவருக்கும் உயிர்ப்பு தின நல்வாழ்த்துகள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *