கடலும் தரையும்: வாழ்வு சொல்லும் பாடம்
நேர்கண்டவர்: யோ.சாந்தி.
இடம்: பருத்தித்துறை கடற்கரை
கடலோரத்து வாழ்வியல் போராட்டம்: ஒரு மீனவத் தாய்யுடன் நேர்காணல்
“கடலோ தரையோ இயற்கை அன்னை மனம் வைத்தால் மட்டுமே அள்ளிக்கொடுக்கும்” என்பது ஆன்றோர் வாக்கு. சென்ற மாதம் தரையில் உழைப்போடு போராடும் ஒரு பெண்ணின் வாழ்வியலைப் பார்த்தோம். இந்த மாதம், கடலையே நம்பி வாழும் ஒரு குடும்பத்தலைவியின் யதார்த்தமான வாழ்வை ‘வெற்றிமணி’ பத்திரிகைக்காக யோ. சாந்தி அவர்கள் நேர்கண்டுள்ளார்.மண்ணின் வாசனையோடும், ஈழத்து மீனவ மக்களின் வலியோடும் இந்த நேர்காணல் அமைகிறது.இடம் பருத்தித்துறை.
யோ.சாந்தி: வணக்கம் யாழினி உங்களைப் பார்த்தால் எப்போதும் ஓயாத உழைப்பாளியாகவே தெரிகிறீர்கள். உங்கள் தொழில் அனுபவம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்?
யாழினி : கடல் கடகட எனப் பேசத் தொடங்கிவிட்டது.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதென்றால் காற்று, மழை இதையெல்லாம் கணக்குப் பார்த்துத்தான் செல்வார்கள். எமது வாழ்க்கை கணக்கும் அவர்கள் கையில்தான் இருக்கும். சில வேளை காலை பெருமழையோடும் புயலோடும் விடியும். அன்றாடப் பிழைப்புக்கே வழியில்லாத எமது வாழ்வு, அன்று அதே கதிதான்.
யோ. சாந்தி: உங்கள் குடும்பம் பல இடப்பெயர்வுகளைச் சந்தித்ததாகக் கேள்விப்பட்டேன்…
யாழினி: ஆம் அம்மா, நாங்கள் சாதாரண தொழிலாளிகள். 1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வன்னி மாவட்டத்துக்குச் சென்றோம். அப்போது எமது படகுகள், வலைகள் என எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு கண்ணீரோடு பிரிந்தோம். பின்னர் விடாமுயற்சியோடு மீண்டும் எழுந்த போது, 2004ஆம் ஆண்டு சுனாமி பேரலை எமது வாழ்க்கையை மீண்டும் அடித்துச் சென்றது. அதைத் தொடர்ந்து 2006 முதல் 2009 வரை யுத்த காலத்தில் நாங்கள் பட்ட பாடு இந்த உலகமே அறிந்ததுதான். 2009-க்குப் பிறகு மீண்டும் படகுகளை எடுத்து தொழில் புரியப் புறப்பட்டால், இந்தியப் ‘டொலர்’ படகுகளின் தாக்கம், அதீத விலைவாசி ஏற்றம் என மீனவர் வாழ்வு மீண்டும் நிர்க்கதியானது. இந்த இக்கட்டான நிலையிலும் சிலர் மீன்பிடி முதலாளிகளாகி தொழில் செய்கிறார்கள்.
யோ.சாந்தி: நீங்கள் மீன்பிடி முதலாளிகளிடம் இருந்தா மீன்களைப் பெறுகிறீர்கள்?
யாழினி: நாங்கள் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள். மீன்பிடி முதலாளிகள் பெரிய முதலீடு போட்டு தொழில் செய்பவர்கள். அவர்களிடம் மீன்களை வாங்கி விற்றுத்தான் நாங்கள் பிழைப்பு நடத்துகிறோம்.
யோ. சாந்தி: இப்போது மீன் விலை முன்னரைப் போல இல்லை. விலை அதிகமாக இருப்பதால் உங்களுக்கு இலாபமும் அதிகமாகத்தானே கிடைக்கும்?
யாழினி : நான் என்ன கடலுக்குப் போய் வலை விரித்தா மீன் பிடிக்கிறேன்? பெரிய முதலாளிகளிடம் வாங்கித்தானே விற்கிறேன். மீனில் பல வகைகள் உண்டு. இப்போது சீலா, பாரை, சுறா, அறக்குளா போன்ற மீன்களுக்கு கிராக்கி அதிகம். சீலா, பாரை என்பன 1300 முதல் 1600 ரூபாய் வரை போகிறது. சுறா மீன் 3000 ரூபாயைத் தாண்டிவிட்டது. இந்த விலைக்கு மீன் வாங்க எனக்கு எவ்வளவு காசு வேண்டும்? அவ்வளவு காசு என்னிடம் ஏது? செல்வந்த வியாபாரிகள் மொத்தமாக அள்ளிக்கொண்டு போக, மிஞ்சியிருக்கும் மீனுக்கு அவர்கள் மலை போல விலை சொல்வார்கள். அதை வாங்கி விற்று நான் எப்படிப் பெரிய இலாபம் பார்ப்பது? குறிப்பாக, பாலூட்டும் தாய்மார்களுக்குப் பால் சுரப்பதற்காகச் சுறா மீன், ஒட்டி மீன் வாங்குவார்கள். இன்று அவற்றின் விலை எட்டாத உயரத்தில் இருக்கிறது. சூடை மீன் 400 ரூபாய், ஆனால் அது சிறு பிள்ளைகளுக்கு ஒத்து வராது. 1500 ரூபாய்க்கு மீன் வாங்கினால்தான் நல்ல மீன் கிடைக்கும். அந்த அளவுக்கு வாங்கவோ விற்கவோ எம்மால் முடிவதில்லை. பிள்ளைகளின் உணவு, படிப்புச் செலவுக்கு இந்த உழைப்பு போதுமா?
யோ.சாந்தி: உங்கள் குடும்பம் பாரம்பரியமாகவே மீன் வியாபாரம் செய்கிறது. ஏன் இதுவரை சொந்தமாக ஒரு படகு (வள்ளம்) வாங்கி நீங்களே ஒரு முதலாளியாக வரவில்லை?
யாழினி : அம்மா தாயே! முதலாளிமார் படும் பாடு தெரிந்தால் இப்படி நீங்கள் கேட்க மாட்டீர்கள். வலைக்கு எவ்வளவு காசு செலவாகும், அதை இந்திய மீனவர்கள் அறுத்துவிட்டால் எல்லாம் போச்சு. இப்போது டீசல் விற்கிற விலையில் மீனும் அதிகம் அகப்படவில்லை என்றால் முதலாளியின் நிலைமை என்னாகும்? இருக்கிற நிலைமை ஓரளவுக்கு நல்லபடியாகப் போனால் போதும். முதலாளி ஆகும் கனவெல்லாம் எமது குடும்பத்துக்கு இல்லை.
யோ. சாந்தி: அப்படியென்றால் ஏன் முதலாளிகள் மீது வருத்தப்படுகிறீர்கள்?
யாழினி : முன்னரெல்லாம் ஆண்கள் ‘கரை வலை’ இழுத்து நான்கு காசு சம்பாதிப்பார்கள். இப்போது அதிலும் முதலாளிகள் மண்ணைப் போட்டுவிட்டார்கள். முப்பது பேர் சேர்ந்து இழுக்க வேண்டிய வலையை இப்போது ஒரு ‘ராக்டர்’ (வுசயஉவழச) இழுத்துச் செல்கிறது. அதனால் ஆண்களின் வேலையும் போய்விட்டது. மீண்டும் குடும்பப் பாரம் என் தலையில் விழுந்துவிட்டது. சரி பிள்ளை, தலை கனக்கிறது. இந்த மீன் கூடையைக் கொஞ்சம் இறக்கிவிடு. நீ ஒருபோதும் என்னிடம் பேரம் பேசாமல் மீன் வாங்குகிறாய், என் நிலைமை தெரிந்து. ஆனால் உனக்கும் நல்ல பெயரில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் நீ மீன் விலையை ஏற்றி விடுவதாகக் கதைக்கிறார்கள். நான் விலை குறைத்துக் கொடுத்தால் ‘நாறல் மீன்’ (கெட்டுப்போன மீன்) என்பார்கள். கூட்டிக் கொடுத்தால் ‘அற விலை’ என்று சாபம் போடுவார்கள். கடலுக்கு மட்டும்தான் தெரியும் எங்கள் வாழ்வும் வலியும்.
யோ. சாந்தி: சரி மீனம்மா, வீட்டுக்குப் போகும்போது வந்து காசை வாங்கிச் செல்லுங்கள். உங்கள் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.
யாழினி : எனக்கும் உங்களிடம் மனம் திறந்து பேசியது சுமையை இறக்கி வைத்தது போல இருக்கிறது.
ஆறுதல் தரும் வார்த்தைகள் தற்காலிகமானவை என்றாலும், அவை உழைக்கும் மக்களின் பாரத்தை சிறிது நேரம் குறைக்க உதவும். அவர்களின் கஷ்டத்தைப் போக்க வெறுமனே காசாகக் கொடுக்காமல், அவர்களின் தொழில் விருத்தி அடையச் சிறு உதவியாவது செய்தால் அதுவே அவர்களின் வாழ்வுக்குப் பெரும் பலமாக அமையும். கடலோரக் காற்றின் ஈரலிப்போடு மீனம்மாவின் போராட்ட வாழ்வு நம் கண்ணுக்குப் புலப்படுகிறது.
![]()
