உணர்வலைகள் – 6
புல்லறி வாண்மை கடை
மாறுவது மனித மனம் என்றால்…
நாம் காணுகின்ற காட்சிகளும், பார்க்கின்ற பார்வைகளும், மனத்துக்குள் பாதிப்பை ஏற்படுத்தி, அந்த உணர்வலைகள் சிறுகதையாக, நாவலாக, கட்டுரைகளாக வடிவம் பெறும். அவ்வாறே இந்த சமூகம் பொய்மையின் அடிப்படையில் வாழ்வதை உணர்வலைகள் உந்தித் தள்ளுகின்றன.
மனித வாழ்க்கை என்பது நிலையில்லாதது என்பதும் பொய்யானது என்பதும் நிச்சயமானது. அதனை ஞானிகளும் அறிஞர்களும் காட்டிவிட்டுச் சாம்பலாய் மாறிக் கரைந்து விட்டார்கள். ஆனால், பூமியிலே பிரபஞ்சக் கட்டளையுடன் வாழுகின்ற இந்த வாழ்க்கை உண்மையாய் இருக்க வேண்டும்: பேசுகின்ற வார்த்தைகள் உண்மையாக இருக்க வேண்டும். ஏனென்றால் சமூகம் உண்மை என்ற அடித்தளத்தின் மீது கட்ட வேண்டிய கட்டிடமே. அது பொய்மையாக இருந்தால், வெளியே அது பிரமாண்டமாகத் தெரிந்தாலும் உள்ளே வெற்றிடமாகச் சிதைந்து கொண்டே இருக்கும். அதனாலேயே உண்மையை வலியுறுத்திய வள்ளுவர் “பொய்யாமை யார்க்கும் புகழ்“ என்றார்;. அவ்வாறு எழுதியவர்
‘‘பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்‘‘
என்றும் கூறினார். அப்படியானால் ஒரு பொய்யால் நன்மை கிடைக்கின்றது என்றால் பொய் கூறுவதில் தவறில்லை என்பதே அவர் கூற்று. ஆனால், தம்மைப் பிறர் மதிக்க வேண்டும் என்னும் நப்பாசையால் எவ்வித காரணமும் இல்லாமல் பொய் கூறுவதை எந்தக் குறளுக்குள்ளும் அடக்க முடியாது. அதனைக் கேட்கும் போது பொய் கூறுபவர்கள் வார்த்தையானது எப்போதும் மதிப்பிழந்து போகின்றது. ஒரு தவறை மறைக்க உண்மையை வெளிக்கொண்டு வராமல் இருக்கும் உத்தியே பொய். உள்ளத்துக்குள் இருந்து மேலெழும் கட்டுக்கதையாகப் பொய் உருவெடுக்கின்றது. தம்மை மற்றவர்கள் புகழவேண்டும் என்பதற்காக பொய்யை உண்மை போல அலங்கரித்துக் கூறுபவர்களும் வாழுகின்றார்கள். ஆனால்,அப்பொய்யை வெளியுலகம் அறிந்து கொள்ளும் போது அவர்கள் கேலிச்சித்திரம் போலக் காட்சியளிப்பார்கள். அங்கே உண்மைக்கும் பொய்மைக்கும் இடையிலே போராட்டம் நடக்கிறது.
“தோன்றாத் தோன்றித் துறை பல முடிப்பினும்
தான்தற் புகழ்தல் தகுதி அன்று“
என்று நன்னூலார் கூறுகின்றார். ஆனால் சிலவேளை தற்புகழ்ச்சி தேவைப்படுகின்றது என்றும் கூறுகின்றார்
மன்னுடைய மன்றத் தோலைத் தூக்கினுந்
தன்னுடை யாற்றலுணரா ரிடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினுந்
தன்னை மறுதலை பழித்த காலையுந்
தன்னைப் புகழ்தலுந் தகும்புல வோற்கே
அரசனுடைய சபைக்கு எழுதும் சீட்டுக்கவியிலும், தன்னுடைய ஆற்றல், கல்வி, வலிமையை அறியாதவரிடத்திலும் பெரிய சபையிலே வாதம் செய்து வெல்லும் போதிலும், தன்னை எதிரி பழித்த நேரத்திலும்;, தன்னைத் தான் புகழ்தல் புலவனுக்குத் தகும் என்கிறார்.ஆனால், பொய்யாகக் கூறும் ஆற்றல்,கல்விகளுக்கு தற் புகழ்ச்சி தேவையில்லை. பொய்மையின் மீது இயங்கும் சமூகத்தில் மனிதர்கள் தங்கள் உண்மையான முகத்தை மறைக்க கற்றுக்கொள்கிறார்கள். நகைச்சுவையின் பின்னால் பொறாமை, நட்பின் பின்னால் சுயநலன், அன்பின் பின்னால் ஆசை, நீதியின் பின்னால் அதிகாரம் என இந்தச் சமூகம் ஒரு மேடை நாடகமாய் மாறுகிறது. இங்கு ஒவ்வொருவரும் நடிகர்கள். இந்த உலகமே நாடகமேடை. போர் என்பது அமைதி, சுதந்திரம் என்பது அடிமைத்தனம், அறியாமை என்பது வலிமை என்னும் வார்த்தைகளில் உள்ள முரண்பாடுகள் பொய்மையின் அரசியலை வெளிப்படுத்துகின்றன.
பொய்மையால் நம்பிக்கை சிதையும், உறவுகள் முறியும், நீதிமுறை வீழ்ச்சி அடையும், பொய் வளரும்போது உண்மை மௌனமாகிறது. அவ்வாறு மௌனம் நீடித்தால் அது அச்சமாக மாறும். அச்சம் நிலைபெற்றால் சமூகம் அடிமையாகும். பரம்பரை பரம்பரையாக இது கடத்தப்படும். அது தெரிந்திருந்தும் மனநோயாளிகளாக பொய்யர்கள் வாழுகின்றார்கள். உண்மை சில நேரங்களில் வலிக்கலாம். ஆனால் பொய் நிச்சயமாக அழிக்கும். நிலையில்லாத உலகில் நிலைத்து நிற்காதவற்றை நிலைக்கும் என்று கருதி அவற்றை நம்பி வாழும் அற்பமான அறிவினை உடையவராக இருத்தல் வாழ்க்கையின் மிக இழிவான நிலையாகும் அதாவது
‘‘நில்லாத வற்றை நிலையின என்றெண்ணும்
புல்லறி வாண்மை கடை’‘ என்று கூறிய வள்ளுவரே
கிடைக்கின்ற கௌரவமும், பெறுகின்ற பட்டமும், சேர்க்கின்ற செல்வமும், பதவியும், அந்தஸ்தும், பொய்யானது, நிலையில்லாதது. அது ஒருநாள் வேறு ஒருவருக்கு உடைமையானது. இது தெரிந்திருந்தும் இதற்காக ஏன் பொய்யுரைக்க வேண்டும். பொய்மையின் மீது இயங்கும் சமூகமானது கண்ணாடி அரண்மனை போன்றது. அது ஒளிரும், ஆனால் உடைந்து போகும். சில இடங்களில் உண்மை பேசத் தைரியம் வேண்டும். அதை நிலைநிறுத்த ஒற்றுமை வேண்டும். அதை வாழ்ந்து காட்ட மன உறுதி வேண்டும். இருளான பொய்யை இழந்து உண்மை என்னும் தீபத்தை எற்ற வேண்டும். அந்த தீபத்தை ஏற்றுவது ஒவ்வொருவரின் கடமை. ஏனெனில், உண்மையில்லா சமூகம் வாழாது. உண்மையுள்ள சமூகம் அழியாது.
மனத்துக்குள் வேதனையைத் தரும் ஒன்று பொய்யான வாழ்க்கை. எமக்கென ஒரு கலாசாரம், எமக்கென ஒரு பண்பாடு, கலைகள் என இருக்கும் போது முக்கியமாக இசைக் கலைஞர்கள் அந்நிய கலாசார நடைமுறைகளை மேடைகளிலும், நிகழ்வுகளிலும் ஏற்றுக்கொள்வதும் ஒரு பொய்யான நடிப்பாகவே காணப்படுகிறது. சிந்தித்துப் பார்க்கும் போது எந்த ஐரோப்பியரோ, அமெரிக்கரோ தம்முடைய தனித்துவமான இசையை விட்டுக் கொடுக்கின்றார்களா? தம்முடைய மொழியை ஏற்றிப் புகழ்ந்து மேடையேறி முழங்காதவர் தம்முடைய கலாசாரத்தை மாற்றுகின்றார்களா? ஒருமுறை மற்றைய கலாசாரப் பாடலையோ நடனத்தையோ காட்சிப்படுத்தி விட்டுத் தம்முடைய தனித்துவத்தை அவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. ஏன் நாம் மட்டும் எம்முடைய அடையாளத்தை மாற்றுகின்றோம்? இது புரியாது மேலெழும் உணர்வலையாய் உள்ளத்துக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக, வாழுகின்ற நாட்டுக்கேற்ப நடிக்கின்றார்கள். ஆனாலும் தம்முடைய நிகழ்வுகளில் குறிப்பாகப் பெண்கள் கலாசார ஆடைகளை மறப்பதில்லை. ஆனால், ஆண்கள் கேள்விக்குறி? எமது தாய் நாட்டில் ஏன் இந்த அந்நிய மோகம்? மாறுவது மனித மனம் என்றால், எமக்கு என்று ஏன் தனிப்பட்ட அடையாளம். இவ்வடையாளம் கூட அருங்காட்சியகத்தில் வைப்பதற்காகத்தானா? முடிவாக இந்த வாழ்க்கை பொய் என்பதும், இந்த உடல்,அழகு, இளமை நிலையில்லாதவை என்பதும், பொய்யாமை என்பது இயல்பே என்பதையும் மனத்திலே ஆழமாகப் பதித்தாலன்றி யாம் இந்த சமூகத்துடன் நிம்மதியாக வாழ முடியாது.
![]()
