எங்கடை ஆச்சி 16
பனங்கட்டிக் கஞ்சி குடிச்சா பஞ்சி சுணைக்கெட்டுப் போகும் எண்டு எங்கட ஆச்சி நெடுகவும் சொல்லுறவ. நல்ல அளவாத்தீட்டின குத்துப்பச்சை அரிசி, தேங்காய்ப்பால், கலப்படம் இல்லாத பனங்கட்டி , பயத்தம் பருப்புப்போட்டுக் காய்ச்சிற கஞ்சியிலை விற்றமின், கனியுப்பு, கொழுப்பு, புரதம், காபோவைதறேற்று, நார்ச்சத்து எண்டு எல்லாச் சத்தும் இருக்கெண்டு ஆச்சி சொல்லுவா. எப்பிடியும் கிழமையில ரெண்டு மூண்டு நாளைக்கு காலமயில ஆச்சி உந்தக் கஞ்சி காய்ச்சுவா. அப்பு சுருட்டுச் சுத்தப்போகமுந்தி வயிறுமுட்ட ரெண்டு மூண்டு சிரட்டை கஞ்சி விட்டுப்போட்டுப்போவார்.
முந்தி நாங்கள் கஞ்சி சிரட்டையிலதான் குடிக்கிறனாங்கள் . ஆச்சி தேங்காய் திருவிமுடிய ரெண்டு மூண்டு சிரட்டையளை எடுத்து அதுகளின்ரை முதுகை பன்னச் சத்தகத்தாலை வடிவாச் சொறிஞ்சு ஒரு தும்பும் இல்லாமல் சில வெளிநாட்டு மாப்பிளைமாரின்ரை தலை மாதிரி நல்ல வழு வழு எண்டு எடுத்துப்போட்டு அடுக்களை இறப்பிலை இல்லாட்டில் தலைவாசல் செத்தையிலை செருகிவைப்பா .
இளஞ்சூட்டில சிரட்டையில ஊத்தின பனங்கட்டிக் கஞ்சியை முத்தத்தில வேப்பமரத்துக்கு கீழை இருந்து எல்லாரும் சேர்ந்து பேசிப்பறைஞ்சு குடிக்கிறதிலை இருக்கிற சந்தோசம் வேறை ஒண்டிலையும் இல்லை எண்டுவார் எங்கட அப்பு. அப்பு சுருட்டுக்கொட்டிலுக்குப் போகமுந்தி நாங்கள் எல்லாரும் சேந்து குடிப்பம். குடிச்சு முடிஞ்ச பிறகு குடிச்ச சிரட்டையளைக் கழுவி இருந்த இடத்திலை செருகி வைப்பம். அப்பதான் பேந்தும் குடிக்கப் பாவிக்கலாம் .
இப்பிடி சேர்ந்து ஒன்டுமோண்டா இருந்து திண்டு குடிச்சு இருந்ததால முந்திக் குடும்பங்கிளிலை நல்ல பிணைப்பு
( connection) இருந்தது தொடர்பு (Contact) இருந்தது. ஆளாளுக்கு அன்பும் மதிப்பும் வைச்சிருந்தவை. ஒவ்வொருத்தரைப் பற்றியும் அவையின்ரை பிரச்சினைகள் சரிபிழையள் குறை நிறையள் எல்லாம் எல்லாருக்கும் தெரிய வரும். ஆளாளுக்கு ஒத்தாசையா இருப்பினம் ஆறுதலா இருப்பினம் . உப்பிடி சேந்து இருந்து திண்டு குடிச்சு கதைக்கிற இடங்கள்தான் உண்மையான கவுன்சிலிங்க் சென்டர்கள் . உப்பிடியான வீட்டு விறாந்தையளிலை சந்தோசம் குந்தி இருந்து நாள்முழுக்கத் தாயம் விளையாடும் .
பேந்து இடம்பெயர்வுகள் வந்து சனம் அங்கினையும் இங்கினையுமா அலமலந்து திரியத் தொடங்கவும் நாகரீகம் எண்டு அலசேந்தித்திரியவும் வேலைப்பளுக்கள் கூடவும் உந்த ஒண்டா இருந்து தின்னுற குடிக்கிற விளையாட்டுகள் நிண்டு போட்டுது. உதால பிணைப்புகள் இல்லாமல் போட்டுது. ஆனாத் தொடர்புகள் இருந்தது. அடிக்கடி செத்தவீடு, பூசைவீடு, கலியாண வீடு, சாமத்திய வீடு, வீடுகுடிபூறல், கோயில்திருவிழாக்கள், வாசிகசாலை மாதிரி பொது இடங்களிலை சந்திச்சுச் சுகம் துக்கங்களை விசாரிச்சுக் கொள்ளுவினம். இல்லாட்டா தூர எங்கினேக்கையும் இருந்தா போன் பேசுவினம். போறவாறவையிட்டை எங்கடை அவை எப்பிடி இருக்கினம் விசாரிச்சுக் கொள்ளுவினம்.
ஆனாப்பேந்து புலம் பெயர்ந்து போனபிறகு உந்தத்தொடர்புகளும் குறைச்சு போச்சு ஏன் சில இடங்களில இல்லாமலும் போட்டுது. அதுக்கு அவை வேலைப்பிரச்சினை, நேரம் பிரச்சினை இனி வேற வேற சித்தாந்தங்கள் வேதாந்தங்கள் விளக்கங்கள் எல்லாம் சொல்லுவினம். கனபேர் தங்களுக்கு இனம் சனம் ஊரிலை இருக்குது எண்டதையே மறந்து போச்சினம் .இஞ்சை பாத்தியள் எண்டால் உங்க கன வீடு வழியை பிணைப்பும் இல்லாமல் தொடர்பும் இல்லாமல் வயதுபோன கன சீவன்கள் தனிய இருந்து துடிச்சுக்கொண்டு இருக்குதுகள். என்ரை பிள்ளை குட்டியள் மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளையளைப் பாக்கமாட்டமோ எண்டு கண்ணீரும் கம்பலையுமா ஏம்பலிச்சுக்கொண்டு இருக்குதுகள் . இனி அதுகளை இருக்கும் வரையும் வேலைவெட்டி அது இதெண்டு எட்டிப்பாக்காம இருந்து போட்டு பேந்து சீவன் போனபிறகு வந்து கிறுவை , தோழா, பறை, வெடி, நோட்டீசு, பூசை, புத்தகங்கள், அந்தத் தானம், இந்தத்தானம், எண்டு விலாசம் காட்டுறதிலை என்ன கிடக்கெண்டு விசர்ச்சனங்கள் நினைக்குதோ தெரியேல்லை.
![]()
