அன்பின் வழியது உயிர்நிலை

0
13.Thiviya

“உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்” என நம் அடிப்படைத் தொழிலே அன்பு செய்தல் என்பதை மீண்டும் மீண்டும் தன் மந்திரச் சொற்களால் எடுத்துரைத்த மகாகவிக்கு என்றென்றும் சரண்புகுந்தவளாய் அன்பினை ஆதாரமாகக் கொண்டு கருப்பொருளுடன் கூடிய அரங்கேற்ற ஆடல் மார்க்கம் அமைக்க எண்ணம் கொண்டோம்.

அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு என்பதை ஆடல் பயிலும் அந்தச் சின்ன மனதில் விதைக்க விரும்பியதன் பயனே இந்த அரங்கேற்றக் கருப்பொருளின் ஆரம்பம். அபிநயக்ஷேத்ராவின் பத்தொன்பதாவது மாணவியாக அரங்கேறும் நிஷ்கிதா கோகுலராஜ் “அன்பின் வழியது உயிர்நிலை” என்ற அற்புதமிழ்தத்தை சுவைக்கத் துணிந்தார்.

அன்புருவாய் அருளும் ஸ்ரீ சத்ய சாயி பகவானின் ஆசிகளுணர்ந்து நகர்ந்த இவ்வரங்கேற்றத்தில் அமைந்த ஆடல் உருப்படிகளைக் காண்போம்.

அன்பின் மொழி

அன்பெனும் அருவுருவத்தமுதை அனைவரும் அறியச் செய்ய ஆதாரமாவது மொழி. அதிலும் நம் தாய் மொழி உயிரினும் இனிதெனத் தித்திக்கும் தமிழ் மொழி. தொல்லு தமிழ் தந்த அன்பும் அறமும் நம் வாழ்வின் அத்திவாரம். மொழி மோகம் கிளறிக் கிளர்ந்த சுவை காண வல்லோர் முத்தமிழையும் துய்ப்பர். ஆதலினால் தமிழ் மொழி மீது நாம் கொண்ட அன்பினைச் சுமந்து வந்தது அன்பு மார்க்கத்தின் முதல் உருப்படி. வழிபடுகின்ற தெய்வம் உங்களையும், குலத்தையும், சுற்றத்தையும் காத்திடுக, குறையில்லா செல்வத்தைப் பெற்று சிறப்புற வாழ்க என்று அனைவரும் நன்று வாழ வேண்டும் என்ற தொல்காப்பிய வாழ்த்து, தமிழ் தந்த அன்பு கொண்ட பண்பினைத் தாங்க , அன்புடைமையை அள்ளித் தந்த திருக்குறள் புஷ்பாஞ்சலியைத் தொடர்ந்து 108 தாளங்களில் ஒன்றான மதங்க தாளத்தில் அலாரிப்பு அமைந்தது. மதங்க தாளம் 12 அட்சரங்களைக் கொண்டமையால் மூன்றெழுத்துத் தமிழ் தந்த உயிர் எழுத்து 12 உடன் மிகுந்த தொடர்ப்பு கொள்கிறது. மதங்கம் என்பது பல பொருள் ஒரு மொழியாம். சிற்றிலயக்கங்களில் ஒன்றான கலம்பகத்தின் ஒரு உறுப்பு, தாள வாத்தியமான மிருதங்கம், யானை என இதன் பொருள் பலவாம். காலந்தோறும் தமிழோடு கலந்து நிற்கிறது மதங்கம்.

பிரபஞ்ச அன்பு

இந்தப் பிரபஞ்சத்தோடான அன்பு பெரிதினும் பெரிது. பிரபஞ்சத்தின் அசைவுகள் யாவும் பஞ்ச கதிக்குள் அடக்கம். திங்களும், ஞாயிறும், பஞ்ச பூதமும், மரமும், மலரும், வனமும், விலங்கும் என இயற்கையோடு இசைந்தன்பு கொள்வதே மனித இயல்பு. அன்பின் சந்தம் உணர்ந்தோர் உயர்ந்தோர். கூடிக் குறைவதல்ல அன்பு. சம சந்த அன்பினில் லயித்தோர் அனவரதமும் ஆனந்தம் காண்பர். அன்பின் கதி உணர்ந்து அமைந்தது பஞ்ச கதி ஜதீஸ்வரம்.

தாய்மையே அன்பு

அன்பின் உறைவிடம் தாய்மை. தாய் ஒக்கும் அன்பினைத் தரவல்லார் தரணியில் தலையாவார். ‘தாயாய் எனக்குத் தானெழுந்தருளி’ என இறைவன் அன்புரு கொண்டு பிறந்தால் அதுவே அன்னையாம். தாய்க்குமேல் இங்கேயோர் தெவ்முண்டோ? தன்னலமற்ற தாயன்பு வாழ்வின் எல்லை வரை நீளும். மொழி தோற்கும் மெய்யன்பு தரவல்ல தாய்மை எத்தகையதாயினும் “அம்மா” என்ற ஒற்றைச் சொல்லே காலம் கடந்த மந்திரச்சொல். தேவகியின் வயிற்றில் பிறந்து யசோதையிடத்தே வளரும் கண்ணனும், தாயன்பு அறியாது வளர்ந்து பின் இணையும் கர்ணனும் போற்றித் தாய் வர்ணத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

உயிர்களிடத்தே அன்பு

எல்லா உயிர்களும் ஒன்று என்ற பேதமையற்ற தன்மையே அன்பின் நெறி. எனினும் பலவகையிலும் பலவாறும் பிரிவினையை ஏற்படுத்தி வாழும் மூட மனிதரின் அறியாமையைத் தகிக்க அன்பு ஒன்றே சிறந்த வழி. சிக்கித் தவிக்கும் மனித மனங்கள் விட்டு விடுதலையாகி நிற்க மக்கள் அத்தனை பேரும் நிகரென்று கொள்ளும் பேரன்பு வேண்டும். இலங்கையின் மகாகவி உருத்திரமூர்த்தி அவர்களின் தேரும் திங்களும் என்ற கவிதையினூடாக, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேதைமையை தகர்க்கும் முழக்கம் இழையோட , இரு மகாகவிகளின் உளத்தீயை உள்வாங்கி உருப்பெறுகிறது உருப்பெற்ற உருப்படி அமைந்தது.

தானே அன்பு

“எள்ளளவும் அன்பகத்தில் இல்லாதார் முக்தி எய்துவது தொல்லுலகில் இல்லை” என்று பாம்பாட்டிச் சித்தரும், “அன்பில்லார்க்கு துன்பமும் நரகமும் எஞ்சும்” என குதம்பைச் சித்தரும், ” துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை யின்புறு வாக்கிய என்னுடை யன்பே” என வள்ளலாரும் , “அன்பே சிவமென” திருமூலரும் எனச் சித்தர்கள் தந்த அன்பு நெறி அன்பிலாரையும் அன்புடையோராக்கும் தத்துவ மெய்ஞ்ஞானம். நம் தாய் மண் மீது கொண்ட அன்பின் ஆழத்தில் , நல்லூர் முருகனை தரிசித்து வாழ்ந்த யோகர் சுவாமிகளின் தத்துவ சிந்தனைகள் மீது கொண்ட அன்பினில் அமைந்தது நல்லூர் யோகர் சுவாமி பாடல்.

உயிர்கலந்த அன்பு

“எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்” என கண்ணனிடத்தே உருகி உருகிக் கொண்ட கோதையின் காதலன்பின் மேன்மை மெல்லினும் மெல்லிது. அன்புடை இன்தமிழ் மாலையென ஆண்டாள் படைத்த திருப்பாவை, அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பினோர் வெள்ளம் என உயிர்க்கலப்பில் நிகழ்வல்ல அதி உன்னத உண்மைகளை உலகறியச் செய்யும் திருப்பாவை ஆடல் வடிவில் அமைந்தது.

இறையே அன்பு

அன்பு ஒன்றே வாழ்வின் வழி. அன்பே கடவுள். அன்பு தான் தருமம்.

தினமும் அன்பில் தொடங்கி அன்பில் நிறைந்து அன்பில் நிறைவடையும் வாழ்வினைக் கைக்கொள்ள வேண்டும். எல்லோரிடமும் அன்பு கொன்ளவோம். எல்லோர்க்கும் சேவை செய்வோம். அன்பின் பேரொளியை ஏந்துவோம். அன்பாகி இருப்போம் என்ற பகவான் ஸ்ரீ சத்யா சாயி பாபாவின் அருள்வாக்கினை மனமேந்தி அன்பினவதாரமான பகவானின் அருளால் பெற்ற பஜன் தில்லானா அமைந்தது.

அன்பு வாழ்க என்று அமைதியில் ஆடிய இவ்வரங்கேற்றத்தில் இடம்பெற்ற மேலும் சுவாரசியமான செய்திகளைச் சுமந்து வரும் இக்கட்டுரையின் தொடர்ச்சி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *