கம் ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் தாயாகி நின்ற தையல்:

0
vm466

படங்கள்: பாலகிருஸ்ணன். நந்தபாலன்

25.05.2026ல் ஸ்ரீஆதிசங்கரர் குரு வழிபாட்டில் ஆரம்பித்து தொடர்ந்து பல விதமான ஹோமங்கள், பூஜைகள், கிரியைகள் என்பன வேதமந்திரங்கள், தமிழ் வேதங்கள்,நவகுண்டத்தில் நான்கு காலமாக கொடுக்கப்பட்ட ஆகுதிகள் என்று இறை சாந்நியத்தை ஆகாயப் பெருவெளியில் இருந்து எவ்வளவற்றை ஈர்க்க முடியுமோ அவ்வளவு சக்திகளை ஈர்த்து பண்ணிரண்டு ஆண்டுகளுக்கோர்முறை நடைபெறும் புனராவர்த்தன அஷ்ட பந்தனகும்பாபிஷேகத்தை 29.05.2026ல் அம்பிகையின் கடைக்கண் பார்வை பட்ட ஸ்ரீகாமாக்ஷி அம்பாள் ஆலய ஆதீன கர்த்தா சிவஸ்ரீ ஆறு முகபாஸ்கரக்குருக்கள் செவ்வனே அடியார் உளம்மகிழ மிகவும் ஆனந்தமாக,பக்குவமாக செய்து சக்தியின் ஆற்றலை புதுப்பித்துள்ளார். சிவபூமியான ஈழத்திலிருந்தும், பாரத நாட்டில் இருந்தும் பல அந்தணர்கள், சிவாச்சாரி யர்கள் வந்து இந்த தெய்வீக சடங்கில் கலந்து தங்கள் சேவையை செய்திருந்தனர்.ஐந்து தளங் களானஇராஜ கோபுரம் தொடர்ந்து கருவறையின் விமானம் என்று ஏனையதூபிகள், மூலவர் சந்நிதி, பரிவாரத்தெய்வங்கள் எல்லாவற்றுக்கும் சிறப்பானமுறையில் இவ்அபிஷேகம் நடைபெற்றது.

தாயாகி நின்ற தையல்:
ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில், அந்தத் தெய்வீக எண்ணெய்க்காப்பு வேளை அத்தனை உன்னதமானது. கருவறையின் கம்பீரமும், நெய்விளக்குகளின் மெல்லிய ஒளியும், சுற்றிலும் ஒலிக்கும் வேதகோஷங்களும் ஒருபுறமிருக்க, அங்கே அரங்கேறிய ஒரு அற்புதக் காட்சி பக்தர்களின் கண்களில் பக்திப் பெருக்கையும், நெஞ்சில் ஈரத்தையும் கசியச் செய்தது.
அம்பிகையின் திருமேனியில் எண்ணெய்க்காப்பு சாற்றப்படும் அந்தப் புனித வேளையில், உலகாளும் நாயகியைத் தன் பிஞ்சுத் தளிர்க் கரங்களால் தொட்டுத் தொட்டுப் பரவசமடைந்தன சில மழலைகள். அச்சமற்று, தயக்கமற்று, அண்டசராசரங்களையும் காக்கும் அன்னையைத் தன் சொந்தத் தாயாக எண்ணி அக்குழந்தைகள் தொட்டு விளையாடிய காட்சி, “தாயாகி நின்ற அம்மனை” கண்முன்னே நிறுத்தியது. ஒரு குழந்தைக்குத் தன் தாயின் உடம்பைத் தொடுவது என்பது வெறும் தொடுதல் அல்ல அது பிரபஞ்சத்தின் ஆகச்சிறந்த பாதுகாப்பு உணர்வு.

ஜன்மஜன்மமாக தொடர்கின்ற வினைகளை இத்தீர்த்தத்தை கண்டதிலும்,அத்தீர்த்தத்தில் நனைந்ததிலும் அவ்வினைகள் எல்லாம் எரிந்துவிட்டது என்று அடியார்கள் உளமகிழ்ந்து தம் இல்லம் ஏகினர். தகவல் : சி.சக்திவேல்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *