சிறுகதைத்தொகுப்பு “நெய்தல்நடை”
எழுத்தாளர்: றஞ்ஜனி சுப்ரமணியம்.எனது வாசிப்பு அநுபவம்.
- பவானி சற்குணசெல்வம் நெதர்லாந்து
சிறுகதை என்பது ஒரு கனமான கலை வடிவம். இதைக் கையாள்வது அவ்வளவு எளிதல்ல. அப்படிப்பட்டக் கலை வடிவத்தைக் கைவரப் பெற்றவர் றஞ்ஜனி சுப்பிரமணியம் அவர்கள் என்று கூறலாம்.
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் பல்வேறுபட்ட வித்தியாசமான கருப் பொருட்களுடன் கதைகள் இடம்பெற்றிருப்பது; வாசகர் மனதில் ஒரு பல்சுவைக் கதம்பமாக இதன் நினைவுகளை மிளிர வைக்கிறது. இதில் இடம்பெற்றுள்ள சில கதைகளில் வரும் பாத்திரங்களுக்கு கதைசொல்லி நேரடியாக விளக்கம் கொடாது அவர்களின் செயல்களினால் பாத்திரங்களின் தன்மைகளை அழகாகப் படைத்திருப்பது சிறப்பு. இவரின் கதைகளை வாசிக்கும்போது நாமும் உணர்வுத்தொற்றுக்கு உள்ளாகிவிடுகிறோம். பல கதைகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. சில கதைகள் உரையாடல் வடிவில் அமைந்திருப்பதால் வாசிப்பதற்கு மிகவும் சுவாரசியமாக உள்ளது.
இந்தத் தொகுப்பில் இடம்பெறும் நெய்தல்நடை என்ற கதை, (தாய் வீடு பத்திரிகையில் 01.07.2025 வெளியானது) மிகவும் அழகாகப் புனையப்பட்ட இன்னொரு தளத்தில் வைத்துப் பார்க்க வேண்டிய கதை. மிகவும் மென்மையான உணர்வுகளால் நெய்யப்பட்ட கதை. இந்தக்கதை குறைந்த பாத்திரங்களுடன் ஒரு செய்தியை விளக்குவதாக அமைந்திருப்பினும் அதிலிருந்து நாம் பலவற்றைக் கற்கக்கூடியதாக உள்ளது.
இராணுவப் பயிற்சி முகாமில் விமான இலத்திரனியலும் தொலைத் தொடர்பு குறித்துப் பயிற்சிகளை வழங்குபவர்தான் கதாநாயகன். அவன் திருமணமானவன் எனத் தெரிந்திருந்தும் அவனிடம் மயக்கம் கொள்கின்ற இளம்பெண். இறுதியில் என்னவாகிறது என்பதுதான் கதை. கதை உரையாடல் வடிவில் பல முடிச்சுகளுடன் விறுவிறுப்பாக நகர்கிறது. ஏதோ எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு கதையின் இறுதிப் பகுதி ஓரளவு ஏமாற்றமாகக் கூட இருக்கலாம். ஆனால் வித்தியாசமான கதையை வாசித்த அநுபவம் மனதை நிறைக்கிறது. இந்தக் கதையின் கதாநாயகன் கதையின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அஞ்சுவுடன் நட்பு ரீதியாக உரையாடுவது: அவள் அன்பு எனும் இழையினால்ப் பின்னப்பட்ட ஒரு கடிவாளத்தைக் கொண்டு அவனை வழிநடத்துவது போல் அமைந்துள்ளது. இந்த வகையில் அஞ்சு என்ற பாத்திரத்தை சிறப்பாகப் படைத்த றஞ்ஜனிக்கு ஒரு பாராட்டுத் தெரிவிக்கத்தான் வேண்டும். இதில் வரும் அஞ்சு என்ற பாத்திரம் நல்லதொரு ஆண்-பெண் நட்பிற்கு உதாரணமாக அமைந்துள்ளது.
ஆண்-பெண் நட்பைப் பற்றி எமது சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. பல சமயங்களில், ஆண்-பெண் நட்பு என்பது காதலுக்கான ஒரு துவக்கமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால், இது ஒரு தவறான கண்ணோட்டம். ஆண்-பெண் நட்பை ஒரு ஆழமான மற்றும் முதிர்ந்த உறவாகப் பார்ப்பதன் மூலம், ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்து, சமூகத்தில் இணக்கமான சூழலை உருவாக்க முடியும். எதிர்பாலினத்தைப் பற்றிய தவறான புரிதல்களைக் களைந்து, அவர்களுக்குள் இருக்கும் இயல்பான வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள ஆண்-பெண் நட்பு உதவுகிறது.
பெண்களின் உயர்ச்சியில் தடைக்கல்லாகும் அந்நிய ஸ்வரம் ஆண்கள்தான் என மனதில் நினைத்தவாறு, அரைகுறை சங்கீத அறிவு பெற்ற குதிரையொன்று சந்தேகம் எழுப்பியது என்று “பைரவி கதை சொன்னாள் ” என்ற கதையில் றஞ்ஜனி எழுதியிருக்கும் வரிகளை வாசிக்கும்போது: இன்னும்தான் நமது சமுதாயம் மாறவில்லை என்ற எண்ணம்தான் எனது மனதில் தோன்றியது. இந்தக் கதையில் வரும் பைரவியின் பால்ய வயதில் ஏற்பட்ட பாலியல் சுரண்டலால் காயப்பட்ட பைரவியின் மனதில் அந்த அநுபவம் இன்றும் ஒரு வடுவாக இருப்பதை இக்கதை விபரிக்கிறது. தொடர்ந்து வரும் கதைகளில், “வானவில் போலொரு வாலிபம்” என்ற கதையில்; வானவில்லில் உள்ள வண்ணங்களின் கலவை போல, வாலிபப் பருவத்தின் பலவிதமான உணர்ச்சிகள், கனவுகள், திறன்கள், பால்யத்தின் வெளிப்பாடுகள் உரையாடல்களின் வழியாக வாஞ்சையுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.(வெற்றிமணி பத்திரிகையில் வெளியான சிறுகதை. 01.06.2025)
சில கதைகளில் கூறப்பட்டிருக்கும் மேலதிக விளக்கங்கள் கதைப்புனைவிலிருந்து சற்று விலகி கட்டுரைப் பாங்கில் நகர்த்தப்படுவதைத் தவிர்த்திருக்கலாமோ என எண்ணத் தோன்றினாலும் இந்தச் சிறுகதைத் தொகுப்பை ஒட்டுமொத்தமாக உற்று நோக்கும் போது நல்தொரு சிறுகதைத்தொகுப்பை வாசித்த அநுபவத்தை வாசகர்களுக்கு தருகிறது எனலாம். திறனும் சிந்தனைத் திறனும் தூண்டப்பட்டு, இலக்கிய ஆர்வம் தூண்டப்பட்டு சில சமயங்களில் கதைசொல்லியின் தனித்திறன் மற்றும் படைப்புத் திறன் வியக்கவைப்பதுடன், வாசகருக்கு முழுமையான வாசிப்பு அனுபவத்தையும் அளிப்பதாகும். அந்த வகையில் எழுத்தாளர் றஞ்ஜனி சுப்ரமணியம் அவர்கள் இதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றுதான் கூறவேண்டும். அவர் மேலும் பல படைப்புகளை இலக்கிய உலகுக்குத் தரவேண்டும் என
வாழ்த்துவோம்.
![]()
