அவதான சக்தியைஅதிகரிக்கத் தூண்டும்அரிய கலைகள்.
- நவமகள் நாவலப்பிட்டி
மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு எமது பாரம்பரியக் கலைகள் பெரும் துணையாக அமைகின்றன. கல்வித் துறையில் ஒரு மாணவன் சிறந்து விளங்குவதற்கு ‘அவதானம்’ (Concentration) மற்றும் ‘சமநிலை’ (Balance) ஆகிய இரண்டும் மிக முக்கியமான அடிப்படைப் பண்புகளாகும்.இங்கு கலைகளோடு விளையாட்டுக்களும் கைகோர்த்து உதவுகிறது.
கரகாட்டம் மற்றும் செம்பு நடனம் போன்றவை வெறும் கலை வடிவங்கள் மட்டுமல்ல் அவை ஒருவரின் அவதான சக்தியைப் பன்மடங்கு அதிகரிக்க வல்லவை.விளையாட்டுக்களும் அப்படியே.
உதாரணமாக, ஒரு கரண்டியில் தேசிக்காய் (எலுமிச்சை) ஒன்றை வைத்து, அதனை வாயினால் கவ்விப்பிடித்தபடி விரைவாக ஓடும் போட்டியை எடுத்துக்கொள்வோம். இங்கே தேசிக்காய் கீழே விழாமல் இருப்பதற்கு உடல் சமநிலை பேணப்பட வேண்டும். அதேவேளை, சுற்றுப்புறத்தை அவதானித்தபடி மனம் ஒரு புள்ளியில் குவிய வேண்டும். இவ்வாறான பயிற்சிகளின் மூலம் ஒரு மனிதன் தனது கவனத்தை ஒருநிலைப்படுத்தக் கற்றுக்கொள்கிறான்.
இவ்வாறு கலைகளின் மூலம் பயிற்றப்படும் மனமானது, கல்வியிலும் மிக இலகுவாக ஒருநிலைப்பட்டு வெற்றிகளைக் குவிக்க வழிவகுக்கிறது.
பாரம்பரியக் கலைகளின் உன்னதம். எமது கலாசார விழுமியங்களான கரகாட்டம், செம்பு நடனம், தாம்பாள நடனம், போன்றவை கலை என்பதற்கு அப்பால், உடல் மற்றும் மனதை ஒருங்கிணைக்கும் உன்னதமான பயிற்சிகளாகத் திகழ்கின்றன.
மாணவனின் கல்வி வளர்ச்சிக்கு எவ்வாறு கரம் கொடுக்கின்றன என்பதைப் பாருங்கள்.
சமநிலை மற்றும் உடல் ஒருங்கிணைப்பு (Balance and Coordination) தலைக்கு மேல் ஒரு பொருளைச் சுமந்துகொண்டு ஆடுவதோ அல்லது நடப்பதோ எளிய காரியமல்ல. இதற்குப் புவிஈர்ப்பு விசைக்கும் உடலின் அசைவுகளுக்கும் இடையிலான துல்லியமான சமநிலை அவசியம். ஒரு கலைஞர் தனது தலையில் உள்ள பொருளை நிலைநிறுத்திக் கொண்டு அசைவுகளை மேற்கொள்ளும்போது, உடலின் ஒவ்வொரு தசையும் மூளையின் பூரணக் கட்டுப்பாட்டில் இயங்குகின்றது.
துவிச்சக்கரவண்டி எடுத்துக்கொண்டால் அதில் வேகமாக ஓடுவதை விட மெதுவாக ஓடுதே சிரமம், அப்போதுதான் சமநிலை தழும்பாது ஓட அதிக அவதானம் தேவை.
கல்வியைப் பொறுத்தவரை, இத்தகைய சமநிலைத் திறனானது ஒரு மாணவன் வகுப்பறையில் அமர்ந்திருக்கும் விதம் மற்றும் அவனது கையெழுத்துத் திறனை மேம்படுத்த உதவுகிறது. ஒருமுகப்பட்ட உடல் நிலை, நீண்ட நேரம் சோர்வின்றி அமர்ந்து பாடங்களைக் கவனிக்கும் ஆற்றலை வழங்குகின்றது.
அவதான சக்தி (Power of Concentration) அவதானம் என்பது ஒரு குறிப்பிட்ட விடயத்தில் கவனத்தை ஆழமாகப் பதிப்பதாகும். கரகாட்டம் போன்ற கலைகளில் ஒரு செக்கன் கவனம் சிதறினாலும் தலையில் உள்ள பொருள் கீழே விழுந்துவிடும். எனவே, கலைஞர் தனது முழுமையான கவனத்தையும் அந்தப் பொருளின் மீதும், தனது காலடித் தடங்களின் மீதும் வைத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த ‘அவதான சக்தி’ கல்விக்கு மிக இன்றியமையாதது. வகுப்பறையில் ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களைக் கூர்ந்து கவனிப்பதற்கும், சிக்கலான கணிதப் புதிர்களை விடுவிப்பதற்கும் இத்தகைய ஆழ்ந்த கவனம் தேவைப்படுகிறது. கலைகளின் மூலம் இப்பயிற்சியைப் பெற்ற மாணவர்கள், இயல்பாகவே அதிகக் கவனச் செறிவுடன் பாடங்களைக் கற்கின்றனர்.
மன உறுதியும் தன்னம்பிக்கையும்
சவாலான கலைகளை நிகழ்த்தும் கலைஞர்களின் முகத்தில் தென்படும் புன்னகை, கடினமான சூழலிலும் அவர்கள் பேணும் மன அமைதியைக் காட்டுகிறது. இக்கலைகள் மாணவர்களின் உள்ளத்தில் உள்ள பயத்தை நீக்கி, தன்னம்பிக்கையை வளர்க்கின்றன. பரீட்சை நேரங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் பதற்றத்தைத் தணித்து, மனக்கட்டுப்பாட்டுடன் செயற்பட இத்தகைய பயிற்சிகள் பேருதவியாக அமையும்.
நவீன கல்வியியல் ஆய்வுகளின்படி, உடல் இயக்கமும் மூளைச் செயல்பாடும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. சமநிலை மற்றும் அவதானம் தேவைப்படும் கலைகளில் ஈடுபடும்போது, மூளையின் இரு அரைக்கோளங்களும் (Hemispheres) தூண்டப்படுகின்றன. இது மாணவர்களின் தர்க்கரீதியான சிந்தனை ஆற்றலையும் படைப்பாற்றலையும் ஒருசேர அதிகரிக்கின்றது.
சுருக்கமாகக் கூறின், கரகாட்டம் மற்றும் செம்பு நடனம் போன்ற கலைகள் வெறும் கலாசார அடையாளங்கள் மட்டுமல்ல் அவை ஒரு முழுமையான ஆளுமையை உருவாக்கும் கருவிகளாகும். இக்கலைகளின் ஊடாக நாம் பெறும் சமநிலையும் அவதானமும், ஒரு மாணவனின் கல்விப் பயணத்தில் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய பண்புகளாகும்.
இக் கலைகளில் ஈடுபடும் யாவரும் கல்வியில் உச்சம் தொட்டார்கள் என்று சொல்லமுடியாதது. ஆனால் அவர்கள் முயற்சித்தால் அவர்களால் கல்வியில் உச்சம் தொட முடியும். ஆனால் பல கலைஞர்கள் கலையை கலையாகவே மதித்து அதனோடு மட்டும் வாழ்ந்துவிடுகின்றனர் .
![]()
