இன்றைக்கு என்ன சமையல் ?

0
278

கொடுக்கும் பணத்தை சுமையாக கருதாமல் மனமுவந்து அதைக்கொடுக்கலாம் ஏனெனில் , வீட்டுவேலை பளு குறையும்போது நிச்சயம் நம்மால் நம்முடைய தொழிலில் இன்றைக்கு என்ன சமையல் ?
அன்று தொட்டு இன்றுவரை பெண்களை தொடர்ந்துவரும் மிக மிக இயல்பாக்கப்பட்ட கேள்விதான் இது . ஒரு பெண்ணுக்கு சமையலில் ஈடுபாடு இருக்கிறதோ இல்லையோ , முழு சமையலும் அவளது பொறுப்பு அல்லது கடமை என்கிற எழுதப்படா விதி ஓன்று நம் சமூகத்தில் காலங்காலமாக உள்ளது . மூன்றுவேளையும் என்ன சமைப்பது , என்னென்ன காய்கறிகளை வாங்குவது ,காஸ் உற்பட எந்தெந்த மளிகைப்பொருள் தீரும் நிலையில் உள்ளது , வாங்கவேண்டிய மளிகைகளை பஜட் போடுவது , என பெண்கள் அன்றுமட்டுமல்ல இன்றும்கூட அவற்றைப்பற்றியே அதிகம் சிந்தித்துக்கொண்டிருப்பதால் அவர்களது சிந்தனையில் வேறு எதைப்பற்றியும் புதிதாக சிந்திக்க நேரமிருப்பதில்லை என்பது சதா சமைப்பதிலும் வீட்டு வேலைகளை தொடர்ந்து செய்துகொண்டிருப்பதிலும் அகப்பட்டிருக்கும் பெண்களைக் கேட்டால் தெரியும் !
வீட்டிலும் ஆண்கள் சமைப்பதற்கு ஆரம்பித்துவிட்டார்கள்தானே என சிலர் கூறிக்கொண்டாலும் , அந்த ஆண்களின் விகிதம் மிகமிக சொற்பம் என்பது நாம் அனைவரும் அறிந்தவொன்றே . ” நல்ல குடும்பப் பெண்ணாக இருக்கவேண்டும் ” எனும் பல திருமண பெண் தேடும் படலத்தின் இவ்வாறான எதிர்பார்ப்புகளும்கூட வீட்டை பராமரிப்பதற்கு ஒரு பெண் வேண்டும் எனும் அடிப்படையே . சமைப்பதற்கும் , வீட்டுவேலைகளை செய்வதற்கும் குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்கும் ஒரு பெண் வேண்டும் என்பதற்காகவே திருமணம் செய்துகொள்ளும் பல ஆண்கள் இன்றுவரை நம் சமூகத்தில் அதிகம் . வெளிநாட்டில் நல்ல வேலை , கை நிறைய சம்பளம் ஆனால் சாப்பாடுதான் பிரச்சினை அதனால் இங்கிருந்து ஒரு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என பல பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன் . இதெல்லாம் ஒரு பிரச்சினையா ? என நீங்கள் கேற்பது புரிகிறது , வாழ்க்கைத்துணை என்பது வெறும் சமையலை வீட்டு பராமரிப்பினை முதன்மையாகக்கொண்டு தீர்மானிக்கப்படுவதுதான் பெண்களின் பிரச்சினை ! பெண்கள் வேலைக்குப் போகாதவரை, பொருளாதாரத் தற்சார்பு பெற்றிருக்காதவரை இதில் பெரிய பிரச்னையில்லை. எதிர்ப்பு எதுவுமில்லாமல் அல்லது வேறுவழியில்லாமல் பெண்கள் இதனை ஏற்றுக்கொண்டு வாழ்ந்திருக்கலாம் . ( ஏன் இன்றும்கூட வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள் ) ஆனால், பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் தற்போதைய நிலையில், வெளியே போய் வேலையையும் பார்த்துக்கொண்டு, வீட்டு வேலையையும் சமையல் வேலையையும் செய்வது பெண்களால் இயலாத காரியம். அடுத்தடுத்து வேலை .. சுறுசுறுவென பாதங்கள் நோவெடுத்து கொஞ்சம் உற்கார்ந்தால்தான் என்ன என மனம் கெஞ்சினாலும் குவிந்து கிடைக்கும் வீட்டுவேலைகள் பெண்களை உற்காரகூட அனுமதிப்பதேயில்லை . ‘அடுத்து என்ன வேலையை முடிக்கவேண்டும் ?’ என்ற ஒரே சிந்தனையில் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு வேறு மாற்று சிந்தனைகள் தோன்றுவதே இல்லை , எழுத்தாளர் அம்பை தன “வீட்டின் மூலையில் ஓர் சமையலறை ” சிறுகதையில் கூறியிருப்பதுபோல் .
வீட்டு பராமரிப்பில் எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ” வேலைக்கு போகும் பெண் வேண்டாம் எனும் கண்டிசன்களும் , வேலைக்கு போய்தான் சம்பாதிக்கவேண்டும் என்றில்லை போதிய சம்பாத்தியம் எங்களிடம் இருக்கிறது பெண் வீட்டிலேயே ராணி போல் இருக்கலாம் என்கிற சால்ஜாப்புக்களும் . ( ஆனால் பெண் ராணியா , வேலைக்காரியா என்பது பின்னாளில்தான் புரியும் ) அப்படியென்றால் பெண்ணை வேலை வாங்குவதையேதான் ஆண்கள் நோக்கமாக கொண்டிருக்கின்றார்களா ? ஆண்களெல்லாம் மோசமானவர்களா ? என்றால் , நிச்சயம் இல்லை . காலந்தோறும் ஆண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற நம் சமூக கட்டமைப்பில் வளர்க்கப்பட்ட ஆண்கள் அறிந்தோ அறியாமலோ இதெல்லாம் நிச்சயம் பெண்களின் கடமைதான் என்கிற மனவோட்டத்தில் ஊறிப்போயிருக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை . வேலைக்குப் போகும் பெண்ணாக இருந்தாலும் வீட்டிலும் சமையல் செய்துவைப்பது அவளது கடமை என்கிற எதிர்பார்ப்புதான் பெண்களின் பிரச்சினை .
பாட்டிகள் காலத்தில் உணவு பரிமாறிவிட்டு பயத்துடன் உண்டு முடியும் வரையில் ஆண்களுக்கு அருகில் நின்றுகொண்டு பரிமாறிக்கொண்டிருப்பார்களாம் . பரிமாறுவது சரி , அதென்ன பயத்துடன் ? உணவில் ஏதேனும் குறை என்றால் தட்டு பறக்குமாம் .. ஏன் சோற்றில் கல்லிருந்தால் அந்த கல்லை பொருக்கி தன்னுடைய கையில் வைத்து உள்ளங் கை சிவக்கும் வரையில் தன்னுடைய கணவர் அழுத்தி இருப்பதாகவும் , சமையலில் குறையிருந்தால் பளீரென தன்னுடைய கன்னத்தில் அறை விழுவதாகவும் கூறியிருக்கிறார் எனக்கு தெரிந்த ஓர் பாட்டி . தற்போது இப்படியெல்லாம் இல்லை என்றாலும்கூட உப்பில்லை , உறைப்பு கூட , என முகத்தை சுளித்துக்கொண்டு , சுளீரென மனதை ரணப்படுத்தும் ஆண்கள் குறைந்தபாடில்லை . ( சமையலில் குறைகளை சொல்வது அல்ல பிரச்சினை அதை அவர்கள் சொல்லும் முறைதான் பிரச்சினை )
எந்த பெண்ணும் சமைப்பதை குறையாக கருதுவதில்லை ஆனால் , அதையே தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கும்போது ஒருவித அலுப்புத் தட்டுவது இயல்பே . ஹோட்டலில் உணவருந்த அழைத்துபோகும்படி அடிக்கடி பெண்கள் கணவரை நச்சரிப்பதாக முன்பெல்லாம் இந்திய நகைச்சுவைகளை அடிக்கடி நான் வாசித்திருக்கிறேன் . ஆனால் , இதன் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன தெரியுமா ? தினமும் சமைத்து அலுத்துப்போகும் அவர்கள் எப்போதாவது அதிலிருந்து விடுதலை கிடைத்தால் போதும் என்கிற எண்ணத்திலேயே இப்படி நச்சரித்திருக்கக்கூடும் . சமைப்பது ஒரு பெரிய வேலையா ? என்பவர்களுக்கு தெரியாது அதன் பின்னாலிருக்கும் வேலை பளுவும் , தனிமனித சுதந்திர இன்மையும் .
இந்திய இலங்கை போன்ற நாடுகளில்தான் சமைப்பதற்கென அதிகம் நேரத்தினை எடுத்துக்கொள்கிறோம் என நினைக்கிறேன் . நிச்சயம் இவற்றுக்கு மாற்றுத்தீர்வுகளை நாம் கண்டறிவது காலத்தின் கட்டாயம். இன்னுமே சோற்றுக்கு சுற்றிவர நான்கைந்து கறிவகைகள் இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பது , ஒரு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இரண்டு சைடு டிஸ்களாவது வேண்டும் என நினைப்பது , பகல் வைத்த குழம்பை இரவு தொடவே மாட்டேன் என அடம் பிடிப்பது போன்றவற்றை ஆண்கள் நிறுத்திக்கொண்டாலே பெண்களின் பாதி சமையல் பளு குறைந்துவிடும் .

கணவர் , குழந்தைகள் என அவரவர் வேலைகளை அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் செய்யப்பழக்குவது பெண்களது தலையாய கடமைகளில் ஓன்று . மாற்றங்கள் நம்மிடமிருந்து தொடங்கட்டும் ..

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *