எங்கடை ஆச்சி 12
கெடு குடி சொல்லுக்கேளாது
ரெண்டு நிர்வாணங்கள் நிணப்பசிகூடி நெருங்கிக் கூடியதாலைதான் நான் பிறந்தனான் அதுகும் உரிஞ்சாங்குண்டியா நிர்வாணமாகத்தான் பிறந்தனான் எண்டு ஆச்சி நெடுகவும் சொல்லுவா . உண்ணான நான் பிறக்கேக்கை சாதி, சமயம், சமூகம், இனம், நாடு எண்ட எந்த அடையாளங்களும் என்னட்டை இருக்கேல்லை உது தெரியாமல்த்தான் பிறந்தனான். பிள்ளைப் பெத்த களைப்பில கிடந்த என்ரை அம்மாட்டை பிள்ளைப்பெறுகிற விடுதியிலை அண்டைக்கு அம்மாக்கு பிள்ளைப் பெத்துப் பாத்த நேர்ஸ் அம்மாட்டை உனக்கு ஆம்பிளைப் பிள்ளை பிறந்திருகுது உதுதான் இந்தப் பிள்ளை எண்டு என்னைக் காட்டிச் சொல்லாட்டில் நான்தான் அவவுக்குப் பிறந்தன் எண்டது உண்ணான அம்மாவுக்குத் தெரிஞ்சிருக்காது .
நேர்ஸ் சொன்ன நேரத்தை வைச்சுத்தான் என்ரை சாதகத்தை செல்லையாப் பண்டாரத்தார் எழுதினவர் அவள் நேர்ஸ் சொன்ன நேரத்தையே என்ரை அம்மா அவரிட்டை நான் பிறந்த நேரமாகச் சொன்னவ. தற்செயலா நேர்ஸ் நான் பிறந்த நேரத்தை மாத்திச் சொல்லியிருந்தால் என்ரை சாதகமும் மாறி இருக்கும் ஆர் கண்டது .தற்செயலாக நான் வேறை ஆரோ ஒரு அம்மாக்குப் பிறந்திருந்தாலும் நேர்ஸ் என்னைக் கொண்டுபோய் என்ரை அம்மாக்குப் பக்கத்திலை கிடத்திப்போட்டு இவன்தான் உனக்குப் பிறந்தவன் எண்டு சொல்லியிருந்தாலும் கூட என்ரை அம்மா என்னை அவவுக்குப் பிறந்ததாக ஏற்றுக்கொண்டிருப்பா.
என்ரை அம்மா சொல்லித்தான் என்ரை அப்பா நான் தனக்குப் பிறந்தனான் எண்டு அறிஞ்சு கொண்டார் .மணிவாசகர் சொல்லுறமாதிரி இவைக்குப் பிள்ளையாப் பிறக்க முந்தி நான் இன்னொருத்தனா இல்லாட்டில் இன்னொண்டா இதுக்கு முந்தியும் பிறந்திருக்கலாம் .அப்ப எனக்கு வேறை வேறை அடையாளங்கள் இருந்திருக்கலாம் . என்ரை அம்மாவும் அப்பாவும் சொல்லித்தான் எங்கடை சொந்தக்காரர் எல்லாம் என்னைத் தன்ரை சொந்தக்காரனா ஏற்றுக்கொண்டிச்சினம்.
நான் வளரேக்கை என்ரை அப்பா அம்மாவும் இதுதான் உன்ரை சமயம் , இதுதான் உன்ரை மொழி , இதுதான் உன்ரை இனம் , இதுதான் உன்ரை சனம் ,இதுதான் உன்ரை தேசம் ,இதுதான் உன்ரை சாதி , இதுதான் உன்ரை பண்பாடு,இதுதான் உன்ரை உடுப்பு ,இதுதான் உன்ரை சாப்பாடு எண்டு சொல்லிச சொல்லி வளத்தவை . அவை உப்பிடிச் சொல்லி வளக்காமல் விட்டிருந்தால் எனக்கு இப்படி ஒரு அடையாளங்கள் இடப்பட்டிருக்க மாட்டாது இல்லாட்டில் வந்திருக்காது. இல்லாட்டில் தற்செயலா நான் காணாமல் போய் வேறு ஆரிட்டையுமோ வளந்திருந்தால் என்ரை இந்த அடையாளங்கள் வேறுமாதிரி இருந்திருக்கலாம் இல்லாட்டில் அடையாளங்கள் இல்லாத ஒருத்தனாகவே வளந்திருக்கலாம்.
நான் செத்த பிறகு சவத்தைக் கொண்டு போய் சுடலையிலை எரிச்ச பிறகு என்ரை சாம்பலிலைலோ இல்லாட்டில் கொண்டு போய் புதைச்ச பிறகு உக்கி மிஞ்சும் என்ரை உக்கலிலைலோ இந்த எந்த அடையாளங்களும் இருக் காது எண்டு ஆச்சி சொல்லுவா . நான் பிறந்த பிறகு எல்லாரும் சேந்து எனக்கு குடுத்த அடையாளங்கள் எல்லாம் நான் செத்த பிறகு தன்ரை பாட்டிலை இல்லாமல் போகுது எண்டு சொல்லுவா.
என்னை மாதிரித்தான் எனக்கு இடப்பட்ட அடையாளங்கள் போலவே என்ரை பக்கத்து வீட்டிலை இருக்கிறவனும் அவனுக்கு இடப்பட்ட அடையாளங்களோடை சீவிக்கிறான் .நான் பிறந்து வளர்ந்த முறையால எனக்கு வந்த அடையாளங்களை நான் பெரிசா நினைக்கிற மாதிரி என்ரை பக்கத்து வீட்டுக்காரனும் தன்ரை அடையாளங்களைப் பெரிசா நினைக்கிறான். உதிலை என்ன விசயம் என்னவெண்டால் அவன்ரை அடையாளங்களை விட என்ரை அடயாளங்கள் பெரிசு எண்டு நான் நினைக்கேக்கை இல்லாட்டில் தன்ரை அடையாளங்கள் என்ரை அடையாளங் களை விடப் பெரிசு எண்டு அவன் நினைக்க வெளிக்கிட பிரச்சினையள் வருகுது.
என்ரை அடையாளங்களை அவனும் அவன்ரை அடையாளங்களை நானும் மதிச்சம் எண்டால் செத்த பிறகு இல்லாமல் போற எங்களுக்குத் தற்காலிகமாக ஆரும் தந்த அடையாளங்களுக்காக அடிபட வேண்டிய சண்டை பிடிக்க வேண்டிய தேவைகள் வராது எண்டுவா ஆச்சி .இப்படி நானும் பக்கத்து வீட்டுக்காரனும் ஆளாளுக்கு அடிபட்டு இருக்கிற சில அடையாளங்களைத் துலைக்கிறதோ இல்லாட்டில் புதிய அடையாளங்களைப் போட்டு அடையாள மாற்றம் செய்யிறதோ இல்லாட்டில் நானும் அவனும் சண்டை பிடிக்கிறதைச் சாட்டா வைச்சு இன்னொரு மூண்டாம் ஆள் வந்து நீங்கள் உங்கடை அடையாளங்களை விடுங்கோ உதாலைதான் கரைச்சல் எண்டுபோட்டு தன்ரை அடையாளங்களை எங்களுக்குத் தாற தேவையோ இருக்காது எண்டிற ஆச்சி உதாலைதான் எங்கடை பழைய ஆக்கள் “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” எண்டும் யாதும் ஊரே யாவரும் கேளிர்” எண்டும் சொல்லிபோட்டுப் போயிருக்கினம் எண்டுபோட்டு ஆர் என்னத்தைச் சொன்னாலும் கெடு குடி சொல்லுக்கேளாது எண்டுவா…
![]()
