கடலும் தரையும்: வாழ்வு சொல்லும் பாடம்

0
headline

நேர்கண்டவர்: யோ.சாந்தி.

பதில் சொன்னவர்: ஆச்சி
இடம்: பருத்தித்துறை சந்தை

கடலின் மூன்றில் ஒரு பங்குதான் தரை. கடலும் தரையும் எமக்கு உணவளிக்கும் சாமி என்றுகூடச் சொல்லலாம். பரப்பு அளவில் கடல் பெரிதாகவும், தரை சிறிதாகவும் இருந்தாலும், கஷ்டங்கள் என்னவோ சிறிய பங்கான தரையில்தான் அதிகம் என எண்ணவேண்டி உள்ளது.

காரணம், தரையின் நாயகன் மனிதன். அவனது ஆறறிவு நன்மை மட்டுமல்ல, தீமையும் செய்யும். நன்மை தீமை எல்லாம் அவனவன் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி எழுதப்படும். இப்படியான உலகில் பெண்களின் பொறுப்பும், தன்மானமும், தியாகமும் எத்தகையது என்பதை அறிய, கடலில் வருவாய் காணும் ஒரு பெண்ணிடமும், தரையில் வருவாய் பெறும் ஒரு பெண்ணிடமும் ஒரே கேள்வியைக் கேட்டோம்.

இன்று தமிழ்நாட்டில் அரசியல் மாற்றங்கள் குறித்துக் கருத்துக்கணிப்புகள் நடக்கும் வேளையில், நாம் ஈழத்து மண்ணில் கடலையும் தரையையும் சார்ந்து வாழும் பெண்களிடம் அவர்களின் வாழ்வியலைக் கேட்பது சற்று வியப்பாக இருக்கலாம். ஆனால், இதுவே எமது மண்ணின் எதார்த்தம்.

தரையின் குரல் (பருத்தித்துறை சந்தை)

பருத்தித்துறை சந்தையில் ஒரு ஆச்சி மரக்கறி விற்கின்றார். பல நாட்களாக நான் பார்த்துப் பழகிய முகம். “வெங்காயம் என்ன விலை?”, “இரசவள்ளிக் கிழங்கு அவியுமோ?”, “வெண்டைக்காய் முத்தலோ பிஞ்சோ?” எனப் பல வருடங்களாக எங்களுக்கிடையில் ஒரு உறவு இருந்து வந்தது.

இன்று ஆச்சியைப் பார்த்ததும் வெண்டைக்காய்க்கு அப்பால் ஒரு கேள்வி நெஞ்சில் வெடித்தது.
நாம் வாரத்தில் இருமுறைதான் சந்தைக்குப் போவோம். ஆனால், இந்த ஆச்சி தினமும் வருகின்றார்.

சாந்தி:
“ஆச்சி, இந்த வயதிலும் களைக்காமல் உழைத்து வாழ நினைக்கும் உங்கள் மனம் பெரியது. அன்றைய காலத்து வாழ்க்கை எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கின்றது?”
ஆச்சி சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின் மெல்லத் தனது நினைவுகளை எனக்கு முன் விரித்தார்.

ஆச்சி:

“என்னத்தைச் சொல்லச் சொல்லுறாய் பிள்ளை… அன்று பிள்ளைகளை வளர்த்தது இப்ப இருக்கிற மாதிரி இல்ல. ஒரு பிடி அரிசியைப் போட்டு கஞ்சி காய்ச்சினாலும், ஊர் உலகமே பகிர்ந்து குடிப்பம். வீட்டுக்கு வீடு தென்னை மரம் இருக்கும், தோட்டம் இருக்கும், விறகு இருக்கும். காசு குடுத்துக் ‘கூப்பன்’ கடையில (கூட்டுறவுச் சங்கம்) மட்டும் சில சாமான்கள் வாங்குவம். மிச்சமெல்லாம் எங்களைச் சுத்தியே இருக்கும். மனுசன் வேலை செய்தா மட்டும் போதும், சீவியம் ஓடும்.”
சற்றுப் பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தார்..

ஆச்சி:
“இப்ப அப்படியா? இப்ப எல்லாத்துக்கும் காசு. தண்ணிக்குக் காசு, காஸ் (புயள) அடுப்புக்குக் காசு. வீட்டைச் சமைச்சு வைச்சாலும் பிள்ளையள் வெளியில தான் விரும்பிச் சாப்பிடுறாங்கள். ஆனாலும் எனக்கு இந்தச் சந்தைக்கு வாறது பெரிய விருப்பம். பொழுதுபோகும், பயனுள்ளதாகவும் இருக்கும். நாலு காசு சம்பாதிச்சா அது எனக்கும் என்ர பிள்ளையளுக்கும் போதும்.”

சாந்தி:
“இப்ப இருக்கிற விலைவாசியில இது கட்டுப்படியாகுதா ஆச்சி?”
ஆச்சி: “அரிசி விக்கிற விலையைப் பாரு… காஸ் சிலிண்டர் விலையைச் சொல்லி மாளாது. என்ர மனுசனும் நானும் உழைச்சால்தான் வண்டி ஓடும். நாளைக்கு இந்தப் பிள்ளையள், பேரப்பிள்ளையள் காலம் எங்கே போய் நிக்குமோ தெரியாது. அதுகளுக்கும் நாலு காசு சேர்த்து வைச்சிட்டுப் போகவேணும் எண்டுதான் நான் இங்க நிக்கிறன்.”

சாந்தி:
“ஆச்சி, அப்போ நீங்கள் இப்போ உழைப்பது மூன்று சந்ததிக்குமா?” (உங்கள் பிள்ளைகள், பேரன் பேத்திகள் என அனைவருக்கும் சேர்த்துத்தான் உழைக்கிறீர்களா?)

ஆச்சி:
(புன்னகையோடு) “ஓமணை… எங்களுக்கு எங்கட மூப்பாட்டன்மார் நட்டுவைச்ச மரங்களும் நிலங்களும் அவையள் எமக்குச் சேர்த்துவைச்ச சொத்துத்தானே? இந்தச் சந்தையில இப்ப விக்கிற தேங்காய் எல்லாம் யார் பிள்ளை வைச்ச தென்னம்பிள்ளை? எங்கட அப்பனும் பாட்டனும் வைச்ச தென்னம்பிள்ளைதானே பிள்ளை! அவையள் அண்டு வயித்தைக் கட்டி வாயைக் கட்டி எமக்காகச் செய்ததை, நாங்கள் இப்ப எங்கட பிள்ளையளுக்காகச் செய்யுறம். இதெல்லாம் விருப்பத்தோடயும் பாசத்தோடயும் செய்யுறதால, எனக்குப் பசியெடுக்கிறதும் இல்லை, உடம்பு களைக்கிறதும் இல்லை.”
நான் வியப்போடு ஆச்சியைப் பார்த்தேன்.

சாந்தி:
“இதை நான் பத்திரிகையில் போடலாமா ஆச்சி?”

ஆச்சி:
“வடிவாப் போடுங்கோ பிள்ளை. இது நாட்டு நடப்புத்தானே? இந்தத் தரையில, இந்த மண்ணில பிறந்த ஒவ்வொருத்தரும் போராடித்தான் வாழவேணும். எனக்கும் இனி எப்போ… இப்போ… எண்டு காலம் போகுது. பேப்பர்ல வருதோ இல்லையோ, என்னோட நிண்டு மனசு விட்டுப் பேசினது மெத்த மகிழ்ச்சி பிள்ளை.”
ஆச்சியிடம் விடைபெற்றுச் சந்தையை விட்டு வெளியே வந்தேன். அப்படியே கடற்கரை ஓரம் மீன் வாங்கப் போனபோது, அங்கே ஒரு பெண் மீன் விற்றுக்கொண்டிருந்தாள். தரையின் குரலைக் கேட்டாயிற்று. இனி கடலின் குரலைக் கேட்க வேண்டும்.
அடுத்த இதழில்: கடலின் பதில்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *