மாணவர்களைச் சிறிது தூரம் நடக்கவிடக்கூட பெற்றோர்கள் இன்று தயாரில்லை!

0
vm403

– கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்

பாடசாலை மாணவர்களின் உளநல மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட மனோஹரி செயற்றிட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் (10.02.2026) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், இத்திட்டத்தை வடக்கு மாகாணத்தின் அனைத்து கல்வி வலயங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் எனக் கோரினார்.

முன்னர் மாணவர்கள் பாடசாலைச் சூழலில் அதிக நேரம் செலவிட்டதால் பல துறைகளில் சாதித்ததாகவும், தற்போது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தெளிவான இலக்குகள் குறைவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், மாணவர்கள் சிறிது தூரம் கூட நடக்காத நிலை உருவாகியுள்ளதுடன், பெற்றோர்கள் அவர்களை பள்ளி வாயில்வரை கொண்டு சென்று மீண்டும் அழைத்துச் செல்லும் பழக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

உளநல மேம்பாட்டு திட்டங்கள் இன்றியமையாதவை என்றும், சமூகத்தில் உள்ள தவறான உளவளக் கண்ணோட்டம் மாற்றப்பட வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார். யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இத்திட்டம் ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவாக்கப்பட வேண்டும் எனவும் கூறினார். இதன்போது வைத்திய கலாநிதி சி.நவநீதன், மாணவர்களுக்கு வாழ்க்கைத்திறன் மற்றும் உளநல பயிற்சி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என விளக்கினார். உள்நாட்டுப் போர், இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் பல குடும்பங்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், மாணவர்களின் ஆளுமை வளர்ச்சிக்கும் தீர்மான திறன் மேம்பாட்டுக்கும் இத்திட்டம் உதவுகிறது என்றார்.

2025ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 7 கல்வி வலயங்களில் 43 அமர்வுகள் நடத்தப்பட்டு, 127 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மூலம் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், மாகாண கல்வி அமைச்சு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *