அதுதான் இப்ப பிரச்சனையே!
- மாதவி.யேர்மனி
காதலிக்கும் போதும் சரி, திருமணம் ஆன புதிதிலும் சரி, சேலையைக் கண்டால், குழையக் கண்ட ஆடு போலை, பின்னால் ஓடுவதும், ஒட்டுவதும், கேட்காமலே உதவுவதும், கண்ணசைவில் யாவற்றையும் புரிந்து கொள்வதும், இன்றும் நினைத்தாலும் மனதை விட்டு அகலாது. அவள் அணிந்திருந்த அந்தப் பச்சைச் சேலை, இன்றும் என் மனதில் பச்சையாகக் ஒட்டிக் கிடக்கிறது.
குறிப்பாகச் சமைக்கும் நேரம், அவளுக்கு பக்கம் நின்று உதவுவதும், குறிப்பறிந்து நடப்பதும், அவள் சுமையைக் குறைக்க வேண்டும் என்று மட்டும் எண்ணிச் செய்தவை அல்ல் அது ஒரு தனிச் சுகம். அந்தச் சுகத்தை அனுபவித்த ஆண்களுக்கு அது நன்கு தெரியும். ஒவ்வொரு உதவிக்கும் கண்ணால் பாதியும், தேன் சொற்களால் மீதியும் பேசுவாள். அவள் பெயர் யாழினி.
என்னைக் ‘கண்ணா’ என்று அவள் அழைக்கும்போது, அந்த யாழின் இசையும் குழைந்து வரும்.
இன்று பல ஆண்கள் வீட்டு வேலைகளைக் கணவன், மனைவி என ஒருவருக்கொருவர் பகிர்ந்து செய்வதைப் பார்க்கிறேன். ஆனால், அன்று அவை அரிது. கணவன் கடவுளுக்கு நிகரானவர்; மனைவி கடவுளுக்குப் பணிவிடைகள் செய்வதே புண்ணியம் போன்ற ஒரு சமூகக் கட்டமைப்பு அன்று இருந்தது. இருந்தாலும், சில விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்தன. எனது தந்தையார் கூட இத்தகைய விதிவிலக்காக, பெண்களுக்கு மாதம் வரும் விலக்கு நேரங்களில் அவர்களுக்கு உதவியாக நடப்பதைப் பார்த்திருக்கிறேன்.
பொதுவாக வீட்டு வேலைகளில், குறிப்பாக அடுப்படியில் மூக்கை நுழைப்பதை ஆண்களும், ஆண்களைப் பெற்ற தாய்மாரும் விரும்புவதில்லை.
சரி, இப்படி ஒரு நல்ல ஒத்தாசை புரிந்து, மனைவிக்கு ஆசை ஆசையாக உதவும் இந்தக் கணவனுக்கு இப்போது இந்த வயதில் என்னதான் பிரச்சினை?
“கீழே தட்டில் பாருங்கள்; வெள்ளைப் பூண்டுக்கு பின்னால், சின்ன ஓலைப் பெட்டிக்குள் உரித்து வைத்த வெங்காயம் இருக்கிறது. அதனை இந்தப் பலகையில் வைத்து இரண்டு இரண்டு துண்டாக வெட்டித் தாருங்கள் கண்ணா.
கண்ணா, தலைக்கு நேரே பாருங்கள்; அந்த ‘கோர்லிக்ஸ்’ போத்தலுக்கு பின்னால் உள்ள ‘யாம்’ போத்தலுக்குள் ஏலக்காய் இருக்கிறது, அதனை எடுத்துத் தாருங்கள்.
நேரம் இருந்தால் கீழ்த் தட்டில் சவ்வரிசி இருக்கிறது, தாருங்கோ. வெள்ளிக்கிழமை உங்களுக்குப் பாயசம் விருப்பம்தானே? காய்ச்சுவோம்.”
இப்படி எல்லாம் பாயசம் போல் இனிய சொற்களும், இனிமையான காலமும் இருந்தது.
அன்பான, இனிய சொற்களுக்கு அன்று பஞ்சமே இல்லை. இப்போது இருவருக்கும் அறுபது வயது தாண்டிவிட்டது. பொருட்செல்வம், பிள்ளைச் செல்வம் யாவும் குறைவின்றி நிறைவாக இருக்கிறது. இருந்தாலும்,’சொற்செல்வம்’ மட்டும் வலுவிழந்துவிட்டது. சொற்கள் பலவற்றுக்குப் பதிலாக, இன்று ஒரே ஒரு சொல் மட்டும் ஆட்சி புரிகிறது. அதனால், இந்தக் கண்ணனும் யாழினியும் இன்று ‘கழுதையும், யாழியும்’ ஆகிவிட்டோம்.
போன முதலாம் திகதியில்ருந்து,நாம் இருவரும் முகம் கொடுத்துக் கதைப்பதில்லை. வயது போனால், நாங்கள் இருவரும் இருந்த நெருக்கத்திற்கு இப்படி ஒரு பிரச்சினை வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
என்ன பிரச்சினை என்று இன்னும் எமக்குத் தெரியவில்லை; ஆனால் ‘அது’தான் எல்லாவற்றிற்கும் காரணம்! கேட்காமலே சமையலறைக்குள் யாழினி போனால், நான் பின்னால் நின்று எல்லா உதவிகளையும் செய்வேன்.
ஆனால் இப்போது யாழினி கூப்பிட்டால் மனம் படபடைக்கிறது.
வாழ்வில் எந்தப் பஞ்சம் வேண்டுமானாலும் வரலாம், ஆனால் ‘சொற்பஞ்சம்’ மட்டும் வரக் கூடாது.
போன முதலாம் திகதி பேரன் வருகிறான் என்று தொலைபேசியில் அழைத்தபோது, பழைய யாழினி போல் உருகி உருகி ‘கண்ணா’ என்று கூப்பிட்டாள்.
“இங்கு வாருங்கோ… அதுக்கை பாருங்க, அதுக்குப் பின்னால் ‘அது’ இருக்கு, அதை எடுங்க. கீழே அதுக்குப் பின்னால் இருக்கும் ‘அதை’ எடுத்து ‘அதனால்’ வெட்டுங்கள். அது அவனுக்கு விருப்பம், அதைச் செய்வோம்” என்று நூறு ‘அது’களைப் போட்டாள். மனம் அறிந்து உதவும் எனக்கே ‘அது’ என்பது என்னவென்று தெரியாமல் திக்குமுக்காடினேன். கடைசியில் என் தோளைப் பிடித்துத் தள்ளிவிட்டு ஒரு வார்த்தை சொன்னாள்: “இதற்குத்தான் உங்களைக் கூப்பிட இப்போது எனக்கு மனம் வருவதில்லை. அதை எடு என்றால் இதை எடுக்கிறீர்கள், இதை எடு என்றால் அதை எடுக்கிறீர்கள். எனக்கு ஏன் அப்பா இரட்டிப்பு வேலை? நீங்கள் போய் ‘அதைப்’ பாருங்கள். உங்களுக்கு இப்போது ‘அதுதானே’ முக்கியமாகப் போய்விட்டது!”
கடவுளே! தமிழில் ஏன் இவ்வளவு சொற்கள்? ‘அது’ என்ற ஒரு சொல் போதுமே! உங்கள் வீட்டிலும் ‘அது’தானா? எங்களுக்கு இப்போது ‘அது’தான் பிரச்சினை.
உப்பு, சீனி, கத்தி, பாயசம், கரண்டி, வெங்காயம் என எல்லாச் சொற்களையும் சொல்லி அழைக்க அவற்றின் பெயர்கள் மறந்துபோகிறது அந்தப் பெயர்கள் வாயில் நுழைய மறுக்கின்றன. எல்லாம் ‘அது’ என்ற சொல்லுக்குள் அடங்கிப்போய்விட்டது. ஏன், இந்தக் கண்ணன் கூட “அது குளிக்கப் போய் இன்னும் வரவில்லை” என்று நாளை சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்னும் கொஞ்சம் நாட்கள் போனால் ‘அதுவும்’ சுருங்குமோ? ஞாபக மறதிக்கு அத்திவாரம் இப்போ போடப்பட்டு விட்டது?
![]()
