நிகழ்ந்தவையும், நிகழ்த்தப்பட்டவையும் !
- சேவியர்
உலக வரலாறு இயற்கையின் கர்ஜனைகளினாலும், மனிதர்களின் ஈகோ கூக்குரல்களினாலும் நிரம்பி வழிகிறது. நில நடுக்கங்கள் நிலத்தின் மீது வகிடெடுத்து, உயிர்களை உள்ளே இழுத்து உணவாக்கிக் கொள்கின்றன. பெருவெள்ளங்கள் நகரங்களை விழுங்கி ஏப்பம் விடுகின்றன, யுத்தங்கள் மனிதர்களின் வெறுப்பு அரசியலின் விலையாகின்றன,தொழில்நுட்ப யுத்தங்கள் மனித நேயம் மழுங்கியதன் சாட்சியாய் நிலைபெறுகின்றன.
இயற்கையாகவோ, செயற்கையாகவோ உருவாக்கப்படும் பேரிடர்கள் நமக்கு ஏதோ ஒரு பாடத்தைக் கற்றுத் தந்து கொண்டே இருக்கின்றன.
இந்த உலகம் நமக்குச் சொந்தமானது அல்ல, நாம் தான் இந்த உலகிற்குச் சொந்தமானவர்கள் என்கிறார் ஒரு அறிஞர். உண்மை தான், ஒரு பேரலை போதும் மனிதனின் கர்வக் கூக்குரலை அழித்து முடிக்க ! இயற்கையின் சீற்றம், மனிதர்களின் கர்வத்தின் விலா எலும்பை உடைத்து எறிகிறது.வலிமையான கோட்டைகளில் இருக்கிறோம் என நினைத்தவர்களை சுனாமிப் பேரலை சுருட்டி எறிந்தது. தொழில்நுட்பத்தில் எல்லை கண்டு விட்டோம் என கொக்கரித்தவர்களை வீட்டுக்கு உள்ளேயும் மாஸ்குடன் அலைய வைத்தது கோவிட்!
இயற்கைப் பேரிடர்கள் நமக்குச் சொல்லும் மாபெரும் செய்தி என்ன தெரியுமா ? இயற்கையை மரியாதை செலுத்து ! என்பது தான். எப்படி மரியாதை செலுத்துவது ? பூமி பூஜை செய்தா ? இல்லை இந்த பூமியைக் காயப்படுத்தாமல் இருப்பதும், மாசு படுத்தாமல் இருப்பதுமே பூமிக்குச் செய்யும் மரியாதை.
இயற்கையை நம் காலடியில் அடக்க வேண்டும் என நினைக்கும்போது இயற்கை நம்மை காலில் போட்டு நசுக்கும் ! இயற்கையை நேசிக்கும் போது இயற்கையும் நம்மை நேசிக்கத் துவங்கும். இந்த பூமி அத்தனை மக்களின் தேவைக்கும் போதுமானதாக இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு மனிதனுடைய பேராசைக்கு இது போதுமானதாக இல்லை – என்பார் மகாத்மா காந்தி. காந்தியையே கொண்டாட மறுக்கும் தேசம் காந்தி சொன்னவற்றைக் கொண்டாடுமா என்ன ? இயற்கை தலைகுலுக்கிக் கொள்ளும்போது நிகழ்கின்ற இயற்கைப் பேரிடர்களை விட பல மடங்கு அதிகமான அழிவுகளை மனிதர்களே உருவாக்குகிறார்கள்.
மனிதர்களின் பண ஆசை, பதவி ஆசை, அதிகார ஆசை இவையே பெரும்பாலான அழிவுகளுக்கான விதைகளை நடுகிறது. யுத்தங்கள் மனிதர்களின் மீது திணிக்கப்படும் வன்முறை. நாம் கற்காலத்தை விட்டு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து வந்து விட்டோம், ஆனால் நம் சிந்தனைகள் இன்னும் கற்காலத்திலேயே கட்டுண்டு கிடக்கின்றன என்பதன் வெளிப்பாடே யுத்தங்கள்.
அப்பாவிகளின் மீது இஸ்ரேல் நிகழ்த்தும் இன்றைய யுத்தத்தை எந்த விதத்திலும் நியாயப்படுத்தி விட முடியாது. அதிகாரமோ, செல்வாக்கோ, ஈகோவோ, பழிவாங்குதலோ – எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அப்பாவி மக்களின் உயிர்களைக் கருணையின்றி பிடுங்கி எடுக்கும் எந்த யுத்தத்தையும் நியாயப்படுத்தி விட முடியாது.
பேரழிவுகள் இரண்டு விஷயங்களை நமக்கு உணர்த்துகின்றன. ஒன்று மனிதர்களின் கடின மனம். இன்னொன்று மனிதர்களின் இளகிய மனம் ! நாடுகளுக்கு இடையே பொழிகின்ற ஏவுகணை மழை, மனித நேயம் எந்த அளவுக்கு பாறையாய் இறுகிக் கிடக்கிறது என்பதை விளக்குகிறது. அத்தகைய பேரிடர்களின் இடையே மக்கள் பணிக்காகக் களமிறங்கும் ஆயிரக்கணக்கான மக்கள், இன்னும் மனித நேயம் உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்பதை நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.
சுனாமி காலத்தில் உலகமே ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க நின்றது வரலாறு ! பெரு வெள்ளம் சென்னையைச் சூழ்ந்த போது மக்கள் அனைவரும் கை கோர்த்து சாதி, மத, இன, மொழி எல்லைகளைக் கடந்து மனிதத்தினால் பேசிக் கொண்டது வரலாற்றின் வியப்பு ! இத்தகைய பேரிடர்கள் கட்டிடங்களை உடைக்கலாம், ஆனால் மனிதத்தைக் கட்டியெழுப்புகின்றன ! பிறருக்காக வாழ்கின்ற வாழ்க்கையே உண்மையான அர்த்தமுள்ள வாழ்க்கை எனும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் வார்த்தைகளே இந்தச் சூழலுக்கு மிகவும் பொருத்தமான வார்த்தை. பேரிடர்கள் பேரழிவைக் கொண்டு வருகின்றன, அதே நேரம் மனிதனுக்குள் புதைந்து கிடக்கும் பேரன்பையும் அது தான் வெளியே இழுத்து வருகிறது.
ஒவ்வொரு பேரழிவும், அடுத்த முறை அழிவு நடக்காமல் இருக்க வேண்டும் எனும் பிரார்த்தனையையும், அடுத்து ஒரு நிகழ்வு நடந்தால் என்ன செய்ய வேண்டும் எனும் தயாரிப்பையும் நமக்குத் தருகிறது. நாம் தயார் நிலையிலிருப்பதில் தோல்வியடைகிறோம் எனில், தோல்வியடைய தயார் நிலையில் இருக்கிறோம் என்றே பொருள் என்பார் பெஞ்சபின் பிராங்கிளின். ஞானம் என்பது பழைய அனுபவங்களிலிருந்து, நிகழ்கால சவால்களை எதிர்கொள்ளும் வழிகளைப் பெறுவது தான்.
சுனாமியினால் உலகம் பாதிக்கப்பட்டது. அதிலிருந்து கற்றுக் கொண்ட உலக நாடுகள் பல இடங்களில் சுனாமி எச்சரிக்கைக் கருவிகளைப் பொருத்தியிருக்கின்றன. இந்தியப் பெருங்கடலில் இவை மக்களை எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கின்றன.
மனித வாழ்க்கை என்பது வலுவானது எனும் மாயையை உடைத்து எறிகின்றன இத்தகைய பேரிடர்கள். மனிதர்களோ, தொழில்நுட்பங்களோ, அவர்களுடைய வங்கிக் கணக்குகளோ, அவர்களுடைய அசையும் அசையாச் சொத்துகளோ, அவர்களுடைய பதவியோ, அவர்களுடைய பணியோ எதுவுமே பொருட்டல்ல எனும் பாடத்தையல்லவா கோவிட் கற்றுத் தந்தது. !
மனித வாழ்க்கை உயரங்களினால் அல்ல, உறவுகளினால் தான் அளவிடப்படுகிறது ! அதுவே பேரிடர் சொல்லும் பாடம். எப்படி நல்லோர் மேலும் தீயோர் மேலும் இறைவன் மழை பொழிகிறாரோ, அப்படித் தான் பேரிடர்களும் செல்வர் மேலும் வறியவர் மேலும் ஒரே போல வந்திறங்குகின்றன.
எத்தனை வருடங்கள் வாழ்ந்தோம் என்பதல்ல, எத்தனை அன்புடன் வாழ்ந்தோம் என்பதே இந்த உலகில் அளவிடப்படும். மனித உறவுகளுக்கும், அன்புக்கும், மனித நேயத்துக்கும் அதிகம் செலவிட வேண்டுமே தவிர பொருட்களையோ, செல்வங்களையோ சேமிப்பதில் அல்ல. பேரழிவின் குரலோசை எழும்போது பதட்டப்படாமல் அமைதி காக்க வேண்டும். பதட்டம் நம்மை அழிவுக்குள் விரைவாய் அழைத்துச் செல்லும். நம் சிந்தனைகளை தடை செய்யும். தவறான முடிவுகளை எடுக்க வைக்கும் ! பதட்டம் நெருப்பை விட வேகமாய்ப் பற்றிப் படரும்.
பேரழிவின் போது சுயநலத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம், உடமைகளைக் காப்பாற்றுவதல்ல. வீடுகளை உருவாக்கலாம், உயிர்களை உருவாக்க முடியாது. இத்தகைய அழிவுகளின் போது அரசு செயல்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவதும், பிறருக்கு அதை அறிவிப்பதும் மிகவும் அவசியம். ஞானம் முதலில் அறியும், பின் அறிவிக்கும், பின்பே செயல்படும். அதை நினைவில் கொள்வோம்.
பேரழிவுகள் தான் உண்மையில் நமது மனித நேயத்துக்கான தேர்வுகள். மனித வாழ்க்கையின் அடிப்படை நோக்கமே பணி செய்வது என்பதை மனதில் எழுதுவோம். பகிர்தலில் எந்த விதமான தயக்கமும் இல்லாமல் செயல்படுவோம். ஒன்றிணைந்து செயல்பட்டால் எந்த மாபெரும் அழிவையும் கடக்கும் வலிமை அடையலாம். மிக முக்கியமாக, வாட்சப் இருக்கிறது, ஊடகங்கள் இருக்கின்றன என்பதற்காய் வதந்திகளைப் பரப்புவதையோ, பகிர்வதையோ செய்யாதிருப்போம். உண்மை பயணத்துக்காக தன்னுடைய ஷ_வை அணியும் நேரத்தில், பொய் பாதி உலகைச் சுற்றி வந்திருக்கும் என்பார் மார்க் ட்வைன். நகைச்சுவையாய் தோன்றினாலும் அது தான் உண்மை.
இயற்கைப் பேரிடர்களோ, செயற்கைப் பேரிடர்களோ நாம் எல்லாவற்றையும் சந்தித்தே பயணிக்க வேண்டியிருக்கிறது. அத்தகைய சூழலில் இவற்றையெல்லாம் நினைவில் கொள்வோம்.
போரில்லா புவி வேண்டும் !
மனிதத்தின் இசை வேண்டும் !
![]()
