ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்களின் நெய்தல் நடை:கதைக்குள் ஒரு கதை

0
18.Nethal.nadai

நூல் விமர்சனம்: மாதவி, யேர்மனி

நிகழ்காலத்தில் இறந்த காலத்தைத் தேடக் கூடாது.

நெய்தல் நடை ஒரு மாலைப் பொழுது. அந்தக்கடற்கரையோரத்தில் இருந்த நீண்ட தெருவில் நானும் கதாசிரியரும் நடந்து செல்கின்றோம்.
எழுபது வயதினை எதிர்நோக்கியிருக்கும் நாம் நடக்க நடக்க… வயது அறுபதாகி, நாற்பதாகி, இருபதாக, இப்போது இறுக்கமாகக் கை பிடித்து நடக்கின்றோம்.

கதாசிரியர் ஆணா பெண்ணா என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்; எமக்கு அது தெரியவில்லை, அது எமக்குத் தெரியவேண்டியதுமில்லை. அந்தத் தெருவில் அவள் நடந்து பாடசாலைக்குச் செல்கின்றாள். கல்வி கற்கவல்ல, கற்பிக்க. அப்போதெல்லாம் தெருவில் அன்றைய கரையோரப் பெண்கள் சீத்தையையும் மேலே ஆழமான கழுத்துடைய, இடுப்பு தெரியும்படியான சட்டையையும் அணிந்திருப்பார்கள். தமது எடுப்பான முன்னழகுகளும் இடுப்பின் மடிப்புகளும் தெரிவது பற்றிய அக்கறையோ கூச்சமோ இல்லாத அவர்களது அப்பாவித்தனம் மிக அழகானது.

தான் கற்பித்த பாடசாலைக்குச் செல்லும் வரை, எழுபது வருடங்களுக்கு முன்பு இருந்த அந்தச் சரித்திரப் பாடத்தை ஒரு வரலாற்றுப் படம் போல எனக்குக் கதாசிரியர் சொல்லிச் செல்வதை நான் கண்டேன். எந்தப் பயமுமின்றித் தெருவில் நடந்த காலம் அது.

“இன்று என் மனங்கவர்ந்த மாணவன் அந்த ரஞ்சனும் இல்லை; இடை தெரிய அந்தத் தெருவில் நடக்கும் பெண்களும் இல்லை” என்று சொல்கிறார் ஆசிரியர்.

மீண்டும் சட்டென அந்தக் காலத்திற்குள் சென்று, தன் மனதில் இன்றும் வீற்றிருக்கும் ‘ரஞ்சன்’ என்ற மாணவன் பற்றி, ஆழமான அழகான சில உள்ளுணர்வுகளை என்னோடு பகிர்ந்து நடந்தார் நூலாசிரியர்.

ஒரு ஆசிரியர், தன்னிலும் பத்து வயது குறைந்த மாணவியை விரும்புவதையும் மணம் செய்வதையும் மிக இலகுவாகக் கடந்து செல்லும் உலகம் எம்முடையது. ஆனால், ஓர் ஆசிரியை தன்னிலும் பத்து வயது குறைந்த தன் மாணவனை விரும்பினால் போதும்; உலகில் உள்ள கெட்ட வார்த்தைகளை எல்லாம் அவள் வீட்டு முற்றத்திலும் முகத்திலும் கொட்டிவிடுவார்கள் என்பதை, என்னோடு கைபிடித்து நடக்கும் கதாசிரியரின் கதையினூடாக நான் உணர்ந்தேன். அந்த இளங்குமரனை அவள் மனதார விரும்பியிருக்கலாம் என எனக்கு எண்ணத் தோன்றியது. நானும் கதாசிரியரும் ஒரே கருத்தில், ஒத்த பார்வையில் கதை நகரும் போதெல்லாம், “இவை நம் கதை, நம் கதை” என எண்ணியபடி நடந்த ‘நெய்தல் நடை’யில், எங்கள் கைகளின் இறுக்கத்தைக் கூட்டிக் குறைத்து அந்த ஒத்த கருத்தை ஒருவருக்கொருவர் “கையிறுக்கும்” மொழி மூலம் ஆமோதித்தோம்.

ரஞ்சன் அவள் மனதுக்கு நெருங்க நெருங்க, நான் கதாசிரியரின் கைகளை மெல்ல விடுவித்து, அவர் சுதந்திரமாகக் கதை சொல்ல ஏதுவாக கைகளை விலத்தி நடந்தேன்.

இப்போது கதாசிரியர் கதாபாத்திரமாகி அவளாகி அவன் வீடு தேடிச் செல்வது எனக்குப் புரிந்தது.

இப்போது அவள் அவன் வீட்டில் நிற்கிறாள்.
அவன் மகனிடம் “உங்கள் அப்பா பெயர் ரஞ்சனா?” எனக் கேட்க, அவன் “ஓம்” என்றபடி தன் தந்தையைக் கூப்பிடுகிறான். சில நிமிடங்களில் கறுத்துத் தடித்த உருவம் ஒன்று வெளிப்பட்டது. அவர் வருவதற்கு முன்னரே மணியோசை போலக் ‘கசிப்பின்’ (மது) மணம் முன்னே வந்தது. வயிறு பானை போல் உப்பியிருக்க, கழுத்து காணாமல் போயிருந்தது. தாடைகள் வீங்கி முகம் உருமாறி இருந்தது. சாரத்தை வயிற்றுக்கு மேலே உயர்த்திக் கட்டியிருந்தான். மார்புப் பகுதி பருத்து அருவருப்பைத் தந்தது. போதை மிகுந்த அந்தச் சிவந்த கண்களில் கூர்மை இல்லை. வலது புருவத்தின் மேலிருந்த வெட்டுக்காயத்தின் தழும்பு மட்டுமே, இவன் ‘ரஞ்சன்’ தான் என்பதை உறுதிப்படுத்தியது.

“நீங்கள் யார்? யாரைத் தேடி வந்தீர்கள்?” என அவன் கேட்க… “மன்னிக்கவும், நாம் இடம் மாறி வந்துவிட்டோம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விலகுகிறார் ஆசிரியர்.
இளமைக்காலத்துக் காதலும் தோல்விகளும் என்றும் இனிமையாக இருக்க வேண்டும் என்றால், நிகழ்காலத்தில் இறந்த காலத்தைத் தேடக் கூடாது. அப்படித் தேடினால் தேடுபவர்களில் யாரோ ஒருவர்:

“நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்…
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்…”

என்றே நிகழ்காலத்தில் பாடத்தோன்றும்.

கதை சொன்ன கதாசிரியரின் ‘நெய்தல் நடைப் பாதை எங்கும் பூவாசம் தான் வீசுகிறது. இந்த நெய்தல் நடையில் ஒவ்வொரு கதையாக வாசிப்பவர், அதன் ஆசிரியருடன் கைகோர்த்து நடப்பார். அப்போதெல்லாம் உங்களுக்கு நடந்த பல கதைகள் மீள நினைவுக்கு வருவது போல் இருக்கும். இதனால் வாசகனுக்கும் ஆசிரியருக்கும் இடையிலான நெருக்கம் அதிகமாகும். அப்படியானதொரு நெருக்கம், இந்நூலின் விமர்சனத்தை ஒரு கதையைச் சுற்றி, கதைக்குள் கதையாக நகர்த்தியது.
இக்கதைத் தொகுதியில் உள்ள சில கதைகள் ‘வெற்றிமணி’ பத்திரிகையில் வெளியானவை என்பதைக் குறிப்பிட்டது மகிழ்ச்சியைத் தருகிறது. ரஞ்ஜனி சுப்ரமணியம் அவர்களின் எழுத்து நடை தொடர ‘வெற்றிமணி’ பத்திரிகையின் நல்வாழ்த்துகள்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *