32 வருடங்களுக்கு முன் வெளிவந்த வெற்றிமணியில் நான் வரைந்த வடிவங்கள்.
வெற்றிமணி: 32 ஆண்டுகளைக் கடந்த வெற்றிப்; பயணம்!
இற்றைக்கு 32 ஆண்டுகளுக்கு முன், ‘வெற்றிமணி’ பத்திரிகையின் முதலாவது இதழ் ஆனி மாதம் முதலாம் திகதி யேர்மனியில் ஒலித்த நாள் இன்று!
பல இரவுகள் கண்விழித்து, கோடு போட்ட தாள்களில் கட்டுரைகளை ஒட்டி, தலையங்கங்களைப் பெரிப்பித்து ஒட்டி, பிரித்த பந்திகளுக்குக் கோடுகள் போட்டு, விளம்பரங்களுக்கான தலையங்கங்களைக் கையால் அழகாக எழுதி, அவற்றைச் சுற்றி அழகான கோலங்களைக் கையால் வரைந்து… முழுக்க முழுக்க ஒரு வரைபடக் கலைஞனுக்கு இன்பமயமான சவாலாகவே அன்று பத்திரிகை வடிவமைப்பு இருந்தது. நான் கற்ற ஓவிய, சிற்பக்கலைகள் ஒரு பத்திரிகையை நேர்த்தியாக வடிவமைப்பதற்கு எனக்குப் பெரிதும் உதவின.
அக்காலத்தில் வெளிவந்த யேர்மன் பத்திரிகைகளை அச்சடிக்கும் ஒரு பெரும் நிறுவனத்திலேயே ‘வெற்றிமணி’யின் முதலாவது இதழ் அச்சானது. பத்திரிகை அச்சாகி வெளிவந்தபோது, அதனைப் பெற்றுக்கொள்வதற்காக அச்சகத்திற்குச் சென்றிருந்தேன்.
அங்கு அந்த நிறுவனத்தின் குழுவினர், வடிவமைப்பாளர், செய்தி திருத்துபவர், படப்பிடிப்பாளர், அச்சிடப்பட்ட பத்திரிகைகளை பார்சல் செய்பவர்கள், விநியோகத்தில் ஈடுபடுபவர்கள் எனப் பலரும் ஒன்றாக நின்றனர். அவர்கள் என்னிடம், “நாங்கள் செய்யும் இத்தனை வேலைகளையும் உங்கள் பத்திரிகைக்கு யார் யார் செய்கிறார்கள்?” என்று வினவினார்கள்.
“நீங்கள் அனைவரும் செய்யும் அவ்வளவு வேலைகளையும் நான் ஒருவனாகவே தனித்துச் செய்கிறேன்” என்றேன்.
அவர்கள் வியப்பின் எல்லைக்கே சென்று, “இதனை நீங்கள் யேர்மன் மொழியில் செய்தால், தமிழர்களைத் தேடித்தேடி விநியோகிக்கத் தேவையில்லை; நின்ற இடத்திலேயே நின்றபடி விநியோகித்து விடலாம். நாங்களும் உங்களுக்கு உதவ முடியும்” என்றார்கள்.
நான் சற்றும் தயங்காமல், “தாய்மொழியில்தான் என் பத்திரிகை வரவேண்டும்” என்று கூறினேன். அன்று சட்டென்று ஒலித்த அந்த உள்ளத்தின் குரல், இன்று 32 ஆண்டுகளை நிறைவு செய்து வெற்றிகரமாகத் தொடர்கிறது.
“32” என்றால் அது வெறும் ஒரு இலக்கம் மட்டுமல்ல என்பதை உணர, உங்கள் பிள்ளைகளின் வயதைத் திரும்பிப் பாருங்கள்! அவர்களுக்கு 32 வயதென்றால், இந்த 32 ஆண்டுக்கால உழைப்பும் அர்ப்பணிப்பும் எந்த வகையிலும் அதற்குக் குறைந்தது அல்ல. உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் எனப் பலரும் ஈட்டிய வெற்றிகளைத் தன்னுள் பதிந்து வைத்துள்ளது ‘வெற்றிமணி’. எவர் மத்தியிலும் எதிர்மறை எண்ணங்களை விதைக்காமல், கம்பீரமான தொனியுடன் தன் பயணத்தைத் தொடர்கிறது ‘வெற்றிமணி’.
இவ்வேளையில், அதன் வளர்ச்சிக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் உதவிய அனைவருக்கும், இன்று ஆதரவு தந்துவரும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
என்றும் தமிழுடன்,
மு.க.சு.சிவகுமாரன்
![]()
