உணர்வலைகள் – 7
அன்னைசொல் நீராக நீளும்
இதற்குத் தானா உறக்கம் இழந்து உழைக்கின்றோம்?
ஓர் அறைக்குள் சென்று, கதவுகளை அடைத்து, தாயின் கருப்பையாக அந்த அறையை இருளாக்கி நினைவில் நிறுத்திச் சத்தமாக ‘‘அம்மா………‘‘ என்று குரலெடுத்துக் கூச்சலிடுகிறேன். அதன்பின் மனத்துக்குள் சாந்தி. அமைதி ஏற்படுகின்றது. கவலைகள் அனைத்தையும் காலடிக்குள் போட்டு மிதிக்கிறது. ஒரு சொல்லில் இருக்கிறது மந்திரம். அந்த ஒரு சொல் மந்திரம் என் ஆரம்ப வார்த்தை. நான் பேசத் தொடங்கிய ஆரம்பப் புள்ளி. சிந்திக்கும் போது நோ, வலி, ஏற்படும் போது என்னை அறியாமலே அந்த சொல்லுக்குள் சுற்றிச் சுழன்ற நான், இன்று சொற்களின் கூட்டுக்குள் மௌனம் தொலைத்து நிற்கின்றேன்.
உணர்வுகளில் உருவத்தில் அந்த உறவைத் தேடுவோம். உறங்கும் போது அந்த அணைப்பின் சுகத்தை நாடுவோம். என்றாவது ஒருநாள் வந்து சந்தித்துப் போக மாட்டார்களா என்று ஏங்குவோம். இந்த உணர்வைத் தந்தது அன்பா!பாசமா! அரவணைப்பா! இல்லாவிட்டால் அதற்கும் மேல் பெயர் சொல்ல முடியாத ஓர் உணர்வா? இந்த உணர்வைத் தாயை இழந்த ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கவே சித்திராபௌர்ணமியை தமிழ் உலகம் தேர்ந்தெடுத்தது என்று நினைக்கின்றேன். அன்று அறுசுவை ஊட்டிய போது நாமும் தாய்க்காக அறுசுவை ஊட்ட வேண்டும் என்று சிந்தித்ததில்லை. இன்று சித்திராபௌர்ணமி அன்று அந்தத் தாய் உண்ண வரமாட்டார் என்று தெரிந்தும், ஒரு மனச் சாந்திக்காக அவர் நினைவோடே வாழ்ந்து உணவு படைத்து உண்கின்றோம். உண்மைக்கு மீறி ஒரு மனச்சாந்தியை உணரவே இந்நாளைப் பலர் ஏற்றுக் கொள்ளுகின்றார்கள்.
கருவறை தந்த அமைதியும் சுகமும் எந்த அரண்மனையும் தராது என்பது உண்மை. அந்தக் குழந்தை எதிர்காலத்தில் எப்படி வளரும் என்று தாய் அறியாது கருவறைக்குள் வளர்த்தெடுப்பாள். இதனையே வைரமுத்து சொல்வார்
´´வைரமுத்து பிறப்பான்னு வயித்தில் நீ சுமந்ததில்ல
வயித்தில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்தா ஆயிருச்சு´´
புறநானூற்றிலே
´´சிற்றில் நற்றூண் பற்றிநின் மகன்
யாண்டு ளனோவென வினவுதி என்மகன்
யாண்ட உளன் ஆயினும் அறியேன் ஓரும்
புலிசேர்ந் துபோகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ விதுவே
தோன்றுவான் மாதோ போர்க்களத் தானே´´
உன்னுடைய மகன் எங்கே என்று ஒருவன் கேட்க ´´என்னுடைய மகன் எங்கே என்று கேட்கிறாய் அது எனக்குத் தெரியாது. புலி கிடந்து சென்ற கற்குகை போல என்னுடைய வயிறு இங்கே இருக்கிறது. அவன் போர்க்களத்திலேயே இருப்பான்´´ என்று சொல்கின்றாள். அந்த நம்பிக்கை ஒவ்வொரு தாய்க்கும் இருக்கும். அதுதான் பிள்ளையைப் பற்றித் தவறாகப் பேசும் எவரையும் தாய் நம்புவதில்லை. அந்த நம்பிக்கை இழக்கும் போது அவள் உடைந்து போகின்றாள்.
தடியெடுத்துத் தண்டிப்பதில்லை. அந்தப் பார்வை ஒன்றே. தவறு செய்யாமல் தடுக்கும் சக்தி கொண்டது. கண்டிக்கும் கடுஞ்சொற்கள் எம்மை வளர்த்தெடுக்கும் நீர் ஊற்றுக்கள் என்று உணர்ந்தவர்களாலேயே தம்மை சீராக வளர்த்தெடுக்க முடியும்.
´´ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்´´
ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது என்று வள்ளுவர் கூறும் சொற்களுக்குள் தாயின் ஒரு சொல் வெல்லும் என்று அறியலாம். ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். மனத்தைக் குத்திக் கிழித்துக் கொல்லுகின்ற எத்தனையோ சொற்களைக் கேட்டிருக்கின்றோம். ஆனால் என்றுமே அம்பாகப் பாயாமல் அறமாகப் பாயும் சொற்கள் உண்டென்றால் அது தாயின் சொற்களே.
´´வாழும் போது எழுந்து நில் உன் கைகள் அடுத்தவரை நோக்கி கீழ் பார்த்து நிற்க வேண்டுமே அன்றி மேலே பார்த்து நிற்கக் கூடாது´´ என்று அன்றொருநாள் அம்மா கூறிய சொற்கூட்டம் போரிலே பின் வாங்காமல் நின்ற மகனை ஊக்குவிக்கத் தாய் கூறிய ´´புறமுதுகிட்டு ஓடுவானாயின் பாலூட்டிய மார்பை அறுத்தெறிவேன்´´ என்று உரமூட்டிய தாயின் சொற்களாக நினைத்துப் பார்க்கின்றேன். ஓட ஓட விரட்டிக் கண்டது கற்க ஊக்குவிக்கும் போது யாருக்கும் புரியாதது, எதிர்கால வாழ்க்கையின் உரத்துக்கு அந்த ஊக்குவிப்பே உரமென்னும் உண்மை.
´´ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்´´
என்று வள்ளுவர் கூறியது போல முயற்சி பலனளித்த மகிழ்ச்சியில் தாய் நெகிழ்ந்து போவாள். தாயின் வெல்லுகின்ற எத்தனையோ சொற்களால் நிமிர்ந்து நின்றிருக்கின்றோம். ஆனால் நாம் உடைந்து போகும் தருணம், ஈடு செய்ய முடியாத தாயின் இழப்பே.
கண்களால் ஒழுக்கம் காட்டி, சொற்களால் பரிவு காட்டி, நாளெல்லாம் நல்லறிவூட்டி, ஓயாது உழைத்து, இறுதி மூச்சு வரை உணவூட்டி, ஆடை தைத்துப் போட்டு அழகு பார்த்து, செல்லமாய்க் கட்டி அணைத்து முத்தமிட்டு, தலை கோதி கதை சொல்லி வளர்த்தெடுத்த தாய் இறுதியில் புட்டிக்குள் சாம்பலாகிக் கடலலைக்குள் கரைந்த போவதே வாழ்க்கையின் அதி உச்ச வேதனை.
அதனாலேயே முற்றும் துறந்து ‘‘காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே’‘ என்று எதற்கும் கலங்காத பட்டினத்தார் ஒருநாள் கலங்கினார். அது தாயின் உடல் வேகும் போது
´´வீற்றிருந் தாள்அன்னை வீதி தனில்இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் – பால்தெளிக்க
எல்லீரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்´´
என்றுஇரங்கிப்பாடினார்.
´´முந்தித் தவம்கிடந்து முந்நூறுநாள் சுமந்தே
அந்திப் பகலாய் சிவனை ஆதரித்து
தொந்தி சரியச் சுமந்துபெற்ற தாயார்
தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன்´´
என்று நொந்து போனார்.
´´வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ – மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை´´
என்று துடித்துப் போகின்றார்
இந்த சந்தர்ப்பத்தில் இதற்குத்தானா பிறக்கின்றோம்? இதற்குத் தானா வாழுகின்றோம்? இதற்குத்தானா பெருமை பேசுகின்றோம்? இதற்குத் தானா உறக்கம் இழந்து உழைக்கின்றோம்? இவ்வாறு எத்தனை இதற்குத்தானாக்களுக்குள் ஒன்றுமில்லை என்பதே மிச்சம். முடிவாக எல்லோரும் இறந்தாலும் தாயின் இழப்பு என்பது வாழ்வின் இறுதி வரை தேயாத சோகம். அதனைச் சாந்திப்படுத்த இந்த சித்திராபௌர்ணமி
![]()
