வெற்றிமணி யில் 54 ஆண்டுகளுக்கு முன்வந்த கட்டுரை மீள்பதிவு.

0
vm419

இலங்கையின் சிறந்த சிறுகதை எழுத்தாளரான செ.சிவஞானசுந்தரம் (நந்தி) (1930–1983), ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் யதார்த்தவாத எழுத்துமுறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது நுட்பமான கதையாடல் மூலம் இலங்கை சமூகத்தின் யதார்த்தங்களை வெளிப்படுத்தியதற்காக சாகித்திய விருதைப் பெற்றவர். நந்தி, ஈழத்துச் சிறுகதை உலகில் மிகவும் மதிக்கப்படும் பெயர்களில் ஒருவராவார்.
அவர் வெற்றிமணி மாணவர் சஞ்சிகையில் (01.05.1972) எழுதிய கட்டுரை ஒன்றை வெற்றிமணி பொக்கிஷமாகத்தருகிறது. அக்காலச் சூழலைக் கண்முன் நிறுத்தும் கட்டுரை இது.

உங்களைப் பற்றி……
— நந்தி —

தங்கைச்சீ…

கோவிலை ஒருதரம் சுற்றிவா. விக்கிரகங்களைப் பார்த்துவா. சிவன், பார்வதி, முருகன், வள்ளி, கிருஷ்ணர்… அழகான தெய்வங்கள். பல வர்ண ஆடைகள். பல நிற பூ அலங்காரம். பல உருவ விளக்குகள். பலவித வாகனங்கள். திவ்விய காட்சியில் அழகு முக்கியம்.

அழகை ரசிப்பதும் அழகாக இருக்கப் பழகுவதும் கோவில் பழக்கத்தில் ஒன்றாகும். அழகு என்பது ஆடம்பரம் அல்ல. ஆடம்பரம் அவலட்சண சோதனை. அழகு தன்னடக்கத்தின் எடுத்துக் காட்டு. அது தூய உள்ளத்தின் பிரதிபலிப்பு. அழகாகத் தோன்றுவது நமது பிறப்புரிமை.

தங்கைச்சீ… கோவிலுக்கு உள்ளே அழகு கண்டாய், கோவிலுக்கு வெளியேயும் பார். கார் மேகம், வெள்ளி மழை, மஞ்சள் பொழுது, சந்தனச் சந்திரன், நீலக் கடல், பச்சை மலை, செம்மண், இரத்தத் தீ… நீயும் உனது மனத்தைச் சார்ந்த அழகுகளை எழுதிப் பார். அழகிலே இறைவனைக் காணமுடியும்.

சிங்கள இனத்தவர்கள் நமக்குச் சகோதரர்கள். ஆம், உனது சிங்களச் சகோதரிகளைத் திறந்த கண்களாற் கவனி. அவர்கள் நேர்த்தியாகத் தலையைச் சீவி அல்லது பின்னியிருப்பதைப் பார். அவர்கள் நெற்றிகளிற் பொருத்தமான பொட்டுக்களைப் பார். அவர்கள் சிங்காரமாகச் சேலையை வரித்து, மடித்து, சொருகி உடுத்திருப்பதைப் பார். அவர்களிடம் நாம் கற்க வேண்டிய கணக்கு உண்டு. நாம் உண்மையை ஒப்புக்கொண்டால் திருந்த வழி உண்டு. தமிழ்ப் பெண்கள் கற்றை கற்றையாக நகை அணிவதையே அழகு என்று எண்ணுகிறார்கள். விலை உயர்ந்த சேலைகளை அலங்காரமாக உடுக்காமல் தம்மேல் குவிக்கிறார்கள். பின்பு தாவணி தொய்ய, முந்தானை தடக்க, பாவாடை பணிய அவதிப்படுகிறார்கள். அழகு தரவேண்டிய சந்தனமும், குங்குமமும் சம்பிரதாயத்திற்காக நெற்றியில் தடவப்படுகிறது.

தம்பி… தமிழ் ஆண்கள்கூட அப்படித்தான். நாம் வேட்டியை அணிவதில்லை. கட்டுகிறோம். நாம் அணியும் நஷனல் சேட்டை நல்ல முறையில் புதிய முறையில் தைக்கக் கொடுப்பதில்லை. அணியும் சால்வையை வாய் துடைக்கும் துவாலை என்று எண்ணுகிறோம். கலியாண வீட்டில்கூட ஒரு நாள் அரசகுமாரனைப்போல் தலைப் பாகை அணியாது, நெற்றிக் காயத்திற்குப் போடும் பண்டேஜ்போல் கட்டிக்கொள்கிறோம். நமது பாரம்பரிய பழக்க வழக்கங்கள் அழகை ஆதாரமாகக் கொண்டவை. நாம் அதை மறந்து சம்பிரதாயத்திற்கு ஏனோதானோ செய்கிறோம். நீ எப்போதாவது சிக்கியர்களைப் பார்த்தது உண்டா? அவர்கள் ஒரு நாள் அல்ல, வாழ்நாள் முழுவதும் தலைப்பாகை அணிபவர்கள். சிக்கிய ஏழைகள்கூட தலைப்பாகையைக் கம்பீரமாக வைத்துக் கொள்கிறார்கள். அது அவர்களுக்கு அழகு, கௌரவம்; அது அவர்கள் தன்மானத்தின் சின்னம்.

மற்றவர்கள் தாம் எம்மை இலகுவில் கணிக்கக்கூடியவர்கள். எமது உழைப்பையும் மதிநுட்பத்தையும், படிப்பையும் மதிக்கும் சிங்கள நண்பர்கள் நாம் நமது வாழ்க்கை அழகில் அதிக கவனஞ் செலுத்துவது இல்லை என்று எண்ணுகிறார்கள். இது உண்மை. நீ, நாளைய சந்ததியின் வழிகாட்டி. தமிழரின் அழகும், கௌரவமும் போய்விடாது காப்பது உனது கடமை.

தங்கைச்சீ… நமது உடையில் மட்டுமல்ல, நாம் நடக்கும் விதம், இருக்கும் விதம், பேசும் விதம், வாழும் முறை எல்லாவற்றிலும் அழகு இருக்கவேண்டும். நமது வீடுகள் அழகாக இருக்க வேண்டும். வீட்டு அலங்காரத்தைக் காண நாம் ஜப்பானுக்குப் போகவேண்டியதில்லை. ஒரு சிங்கள நண்பர் வீட்டிற்குப் போனாலே போதும், சிங்கள ஏழையானாலும் பரவாயில்லை. அங்கே விருந்தினரை உபசரிக்க ஒரு சிறு இடம் இருக்கும். பார், கதிரை, கதிரைச் சீலை, மேசை, மேசைச் சீலை, பூச்சாடி, அழகான படங்கள்… எல்லாவற்றையும் நீயே அவதானி.

நான் சுகாதார வைத்தியராக இருந்தபோது ஒரு கல்லூரியின் பிரின்சிப்பல் வீட்டிற்குப் போனேன். அவர் தமிழர்தான். அவர் என்னை உபசரித்த ஹாலில் குறுக்காக ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது. அதில் அவருடைய அழுக்கு பெனியன், அழுக்கு துவாலை, அழுக்கு கௌபீனம் எல்லாம் தொங்கிற்று. இப்படியான அசம்பாவிதம் படித்த இடத்தில் மட்டுமல்ல, எங்குமே நடைபெறப்படாது. ஆனால், பல தமிழ் வீடுகளில் இந்த அலங்கோலத்தை நான் காண்கிறேன். அல்லாவிடில் எழுதமாட்டேன்.

தம்பி… தங்கைச்சீ… அழகு உணர்வு மங்கும் அளவிற்கு நமது இனம் வயோதிபம் அடைந்துள்ளதா? நமது இனத்திற்குப் பக்கவாதம் பிடித்துள்ளதா? சித்த சுவாதீனம் ஏற்பட்டுள்ளதா?
அழகாக இருப்பது வாழும் முறை. இதை நீங்கள் இன்று உணர்ந்தால், தமிழ் இனத்திற்கு வயோதிபம் வராது. வயோதிபம் வரப்படாது. மானம் உடையவர்கள் நாம்.
சுருக்கம்: கோவில் பழக்கம் அழகாக வாழ்வது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *