‘அடங்க மறுத்தவள் ஆடும் கூத்து”

0
pencil2


அடங்கமறுக்கும் பெண்களால்தான் அடிமை அகற்றப்படும்.

  • ப.தியான் – யேர்மனி

கலையும் கலை வடிவமும் அதன் வெளிப்பாடும் பார்ப்பவரை சிந்திக்கத்தூண்டினால் அது அந்தக்கலை உழைப்பின் பயன் என்பேன். கவிதாலட்சுமி அவர்களின் அடங்க மறுத்தவள் வெளிப்படு கூத்து அப்படித்தான் என்னை சிந்தனைக்கப்பால் சிலையாக்கிவிட்டது. முதலில் அந்தக் கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள்.

தொடக்கத்தில் காளி நடந்து வரும் காட்சியில் நிமிர்ந்த அழகான வலிமையான நடையும் அதனைக் காட்டும் காட்சி வெளிப்பாடும் மிகமிக அழகு. அந்தக்காட்சிக்கான வெளிச்ச வெளிப்படுத்தல் காற்றின் சீற்றத்தோடு இணைந்துவரும் மெல்லிசை சிறப்பு.
சிறுமி ஒருவள் சுற்றிய பாயோடு புன்னகை முகத்தோடு இயற்கையைத் தழுவிக்கொண்டே நடந்து வருகிறாள். அவளைச் சுற்றிக்கொள்ளும் மனித வெறியர்களால் அவளது முகமும் கையிலிருக்கும் பாயை அழுத்தமாகப் பிடித்துக்கொள்ளும் பயத்தின் வெளிப்பாடும் மனதை பிழிகிறது. அந்த மகள் இன்று நடக்கும் எங்கள் குழந்தை களின் வன்கொடுமையை மொத்தமாக காட்டியவிதம் வர்ணிக்கமுடியாத வலி. அவளுக்குள் அதனைக் கொணர்ந்தவருக்கு நன்றி. சுற்றிப் பிடித்துக் கொண்டு வந்த அந்தப்பாயை வைத்து நம் புலன்களை பறித்தெடுக்கும் பாரிய கருப்பொருளை புதைத்த கருத்தாளருக்கு பாராட்டுகள். ஏனென்றால் பாய் கிழிக்கப்பட்டு சீரழிக்கப்படுகிறது சிதைக்கப்படுகிறது. அந்தக் குறியீட்டில் சொல்லப்படும் ஆயிரம் ஆயிரம் குழந்தைகளின் வலிகளை காணமுடிகின்றது. ஜெப்ரி எப்ஸ்டீன் போன்றவர்களால் நம் குழந்தைகள் கண்ட வலியை கிழிந்த பாய் காட்டுகின்றது.

ஆடடி ஆடடி காளி உன் கூத்தை அழகான வரிகள் சுரமும் தண்ணுமையும் குரலும் இசையும் சொல்லிசையும் சிறப்பு அதற்கான நடனம் அருமை. சமதளத்தில் நடனமிடுவதைவிட மணலில் நடனமிடுவது மிகச்சிரமம். சமநிலையைப் பேணுவதும் தாளத்துக்கமைய கால்களைத் தூக்கி ஆடுவதும் மிகச்சிரமமான ஒன்று அதனை மிக இயல்பாக ஆடிக்களித்திருக்கின்றார்கள் இளையவர்கள்.

பாடலின் சொற்களுக்கு கண்கள் பேசுவதும் முத்திரைகள் முழங்குவதும் கால்கள் துள்ளுவதும் உடல் வளைந்து நாட்டிய நயங்களை காட்டியதும் அழகு. நடன மாந்தரை வாழ்த்துகிறேன். நேர்த்தியான அழகான பொருத்தமான ஆடைத்தேர்வு. வானத்தை தொட்டுக்கொள்ளும் நிலத்தின் காட்சியும் நிழல் விழாமல் அலங்கார காட்சிகள் இல்லாமல் வெளிச்சத்தின் பீச்சல் இல்லாமல் வண்ணத்து மகுடங்களைச் சூட்டாமல் வலிபடும் மனங்களுக்கு ஏற்ப மெல்லியலை புகுத்திய நடனக்காட்சி மிகச்சிறப்பு அவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நம் குழந்தைகளையே உண்டு களிக்கும் காமக்கொடூரர்களின் பசிக்கு வயதானவரும் வஞ்சிக்கப்படுகிறார் என்ற கருத்தியல் பாராட்டுக்குரியது. எல்லா பெண்களுக்குமே நிகழும் துன்பம் அதனைக் காட்டியதும் ஒரு தந்தையின் பாசத்துக்குரியவள் பந்தாடப்படுவதும் அவள் படிப்பை பாழ்படுத்துவதும் வாழ்க்கையை சீரழிப்பதும் இன்றைய இயல்நிலை சீரழிவை சில நிமிடங்களுக்குள்ளே சிறப்பாக்கிக் காட்டுகிறது.

தந்தையாக வரும் கலைஞர் தந்தையாகி அழும்போது நடிப்புதான் என்பது மறந்துபோனது. அவரை பாராட்டி வாழ்த்துகிறேன். வயது பாகுபாடுகளைக் கடந்து பெண்கள் பாலியல் வன்கொடுமைக்குள்ளும் ஒடுக்குமுறைகளாலும் சீரழிக்கப்படுவதை காளி ஆடும் கூத்தாக்கி வெளிக்கொணர்ந்த கலைவடிவம் மிகச்சிறப்பு. காளியின் ஆட்டம் நம்மையும் அசைய வைக்கின்றது. கலைக்குள்ளே வாழும் மௌனகுரு ஐயா அவர்களின் உடுக்கும் ஆட்டமும் காளியின் மூர்க்கமும் அருமை அருமை.

ஒரு கலை வெளிப்பாட்டை பொதுவெளிக்குக் கொடுக்கும் கலைஞர்களுக்கு குமுகப்பொறுப்பு மிக அதிகம். அதற்காக அவர்கள் அதிகமாக சிந்திக்க வேண்டும் சிரசெடுக்க வேண்டும் முரண்பாடுகளைத் தவிர்த்துப் பொதுப் பார்வையில் சொல்ல வேண்டும். அதனை இவர்கள் அழகாக கையாண்டிருக்கின்றாள்.

இந்த பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துகொண்டேயிருக்கும் வலிமிகுந்த வாழ்க்கையில் ஆண்களின் ஆணவத்தை அந்தக்கொடூரர்களை ஒப்பனையாலும் உருவகத்தாலும் நடிப்பாலும் முற்றிலும் வேறுபட்ட பார்வையில் வடிவமைத்த உரியவருக்கும் வாழ்த்துகள். எல்லாமே சிறப்பு குறைகளைக்காண என்னால் முடியாது. ஏனென்றால் தானுண்டு தன் வேலையுண்டு குடும்பமுண்டு என்று வாழ்பவர்களுக்கு மத்தியில் நம்மியலை நாம் காணும் துன்பத்தை கடந்து போகாமல் பாதிக்கப்பட்ட பெண்களை படுத்துவிடாமல் தூண்டிவிடும் தூண்டலை இந்தக் காளி ஆடிச்சொல்கிறாள். அடங்கமறுக்கும் பெண்களால்தான் அடிமை அகற்றப்படும்.

கவிதாலட்சுமி அவர்கள் சிறந்த கருத்தாளர். கவிஞர் நடனத்தின் அசைவுகளில் பொருளைச்சூட்டி புதுமை செய்பவர். தொடர்ந்தும் இவ்வாறான சிறந்த படைப்புகளை வெளிக்கொணர வாழ்த்துகிறேன். நன்றி : ப.தியான் – யேர்மனி

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *